Wednesday, June 16, 2021

தமிழரசுக்குள் வாரிசு வளர்ப்பாம்! கனடாவிலிருந்து குமுறுகின்றார் நக்கீரன்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தற்போது வாரிசு அரசியல் ஒன்று உருவாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றது. அதை உருவாக்கி வளர்த்தெடுப்பவர் வேறுயாருமல்லர். கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாதான். தமிழரசுக் கட்சியில் இருந்த தலைவர்கள் எவரும் வாரிசு அரசியலை முன்கொண்டுவரவில்லை. பெருந் தலைவர்கள் பலபேரின் பிள்ளைகள் வேறு இயக்கங்களில் செயற்பட்டார்களே தவிர, உண்மையான மக்கள் சேவை என்ற பெருநோக்கோடு செயற்பட்ட எவரும் வாரிசு அரசியலை வளர்த்து, கட்சியின் நிர்வாகப் பதவிகளுக்கு குடும்ப அங்கத்தவர்களைத் தெரிந்து கட்சியை குடும்பக் கட்சியாக மாற்றவில்லை.

ஆனால், மங்கையக்கரசி அமிர்தலிங்கம் குறிப்பிட்டமைபோன்று, 'தமிழரசை மாவையிடமிருந்து கடவுள்தான் காப்பாற்றவேண்டும்' என்ற தீர்க்கதரிசன மொழிக்கு ஏற்றால்போல், தமிழரசின் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராசா, தான் அரசியலைத் தொழிலாகக் கருதி, தனக்குப்பின் வாரிசு அரசியலை வளர்த்தெடுத்து வருகின்றார். 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றித்திரிந்த தன் மகனை இறக்குமதி செய்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நிறுத்தினார். யாழ்.மாவட்ட இளைஞரணிக்கு மகனை செயலாளராக்கினார். அதன்பின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அதியுயர்சபையாகிய மத்தியகுழுவில் அவரையும் உறுப்பினராக்கினார்.

கட்சியில் எத்தனையோ இளைஞர்கள் வலி.வடக்கில் யுத்தகாலத்தில் இருந்து செயற்பாட்டாளர்களாக இருக்கின்றார்கள். ஏன், தவிசாளர் சுகிர்தன் 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் காலம் தொட்டு பல்வேறு சவால்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் முகம்கொடுத்து 2 தடவைகள் தேர்தலில் வென்று மக்கள் ஆணைபெற்ற தவிசாளராக உள்ளார். அவர்கூட மத்தியகுழுவில் உறுப்பினர் இல்லை. மாகாணசபையோ, நாடாளுமன்றமோ அத்தனைக்கும் தெரிவாகும் தகுதிபெற்றவர் அவர். யாழ்.பல்கலைக்கழக வணிகமாணி பட்டதாரி. கணக்காய்வுத் திணைக்களத்தில் நீண்டகாலம் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஒருவர். மானிப்பாய் தொகுதியில் ஒருவரும் மத்தியகுழுவில் இல்லை. மாவையின் வீட்டில் தந்தை, மகன் என இருவர். அடுத்த பொதுச்சபையில் சம்மந்தியும் உள்வாங்கப்படுவார்.

மாவையின் மகனுக்கு யாழ்.மாவட்டத்தில் - ஏன் வலி.வடக்கில் - எந்த இடமும் தெரியாது. தமிழர்களின் போராட்ட வரலாறு தெரியாது. இலங்கையின் அரசமைப்பு, ஆட்சி அதிகார முறைமை எதுவும் தெரியாது. உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள், நாடாளுமன்றம் என்பவற்றின் நியாயாதிக்கம் தெரியாது - அவைகளின் அதிகார வரம்பு தெரியாது.

யுத்தகாலத்தில் எமது மக்கள் பட்ட துயரங்கள் எவையும் தெரியாது. ஒரு குண்டுச் சத்தம் அறியாதவர். ஏன், 2009 தொடக்கம் 2013 வரை அரசியல்வாதிகளுக்கு - அதுவும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு - உள்ள அச்சுறுத்தல் எதுவும் அறியாதவர். வலி.வடக்கு மீள்குடியேற்றப் போராட்டங்கள் நடந்தது பற்றி அறிந்திருப்பரோ தெரியாது. வலி.வடக்கு மக்களின் விருப்பு, வெறுப்பு, அபிலாஷை எவையும் தெரியாது. அவருக்கிருந்த ஒரே தகுதி - தந்தை கட்சித் தலைவர் - தேர்தல் தெரிவுக்குழு - அவருக்கு ஜால்ரா அடிக்கும் அடிமைகள்.அதனால், எந்தத் தகுதியுமற்ற இவருக்கு வலி.வடக்கில் ஓசியில் ஆசனம் கிடைத்தது.

சிலர் நினைக்கலாம் அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. அதனால்தான் வெற்றிபெற்றுள்ளார் என்று. ஒருமண்ணாங்கட்டியும் இல்லை. 2011 தேர்தல் முறையில் உள்ளூராட்சித் தேர்தல் நடந்திருந்தால் நிச்சயம் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட 27 பேரில் இவர் 27 ஆவதே. அது விகிதாசாரமுறை. குறித்த ஒரு வட்டாரமென்றில்லாமல் வலி.வடக்கிலுள்ள அனைவரும் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கலாம். அதில் அதிகூடிய விருப்புவாக்குப் பெற்றவர் தவிசாளர். தெரிவும் விருப்புவாக்கு அடிப்படையில் 21 வட்டாரத்துக்கும் 21 பேர் தெரிவுசெய்யப்பட்டிருப்பர்.

2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 60 வீதம் வட்டாரமாகவும் 40 வீதம் விகிதாசாரமாகவும் நடைபெற்றது. 21 வட்டாரத்துக்கு 21 வேட்பாளரும் விகிதாசாரத்தில் 17 வேட்பாளர்களுமாக 38 பேரை ஒவ்வொரு கட்சியும் நிறுத்தியது. இதில் 17 வட்டாரங்களை வலி.வடக்கில் தமிழரசுக் கட்சி வென்றது. விகிதாசாரத்தில் எவருக்கும் ஆசனம் கிடைக்கவில்லை. மாவையின் மகன் நின்ற வட்டாரத்தில் இவரது வெற்றியை உறுதிசெய்வதற்காக இவர் வட்டார உறுப்பினராகவும் அவரது பிரதேசத்தைச் சேர்ந்த 4 சாதிகளைக் கொண்டவர்களை இவருக்குப் பாதுகாப்பாக விகிதாசார முறையிலும் நிறுத்தினார்கள். அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து சாதி மக்களும் எமது உறவினர் பிரதேசசபை உறுப்பினர் ஆகப்போகின்றார் என்று நினைந்து வீட்டுக்கு வாக்குளை பெருவாரியாக அளித்தனர். இதில் விருப்புவாக்கோ, வேட்பாளர்களுக்கு இலக்கமோ, பெயரோ கிடையாது. வீட்டுக்கு அளிக்கப்படுகின்ற வாக்கு - ஒரு வட்டாரத்தில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னம் வெற்றிபெற்றால் - அந்தப் பிரதேச வட்டார உறுப்பினர் தெரிவாவார். கட்சிக்கு மேலதிக 40 விகிதத்தில் விகிதாசார வாக்குகள் கிடைத்தால் மட்டுமே விகிதாசார உறுப்பினர் நியமிக்கப்படுவார். அவரை கட்சித் தலைமையே நியமிக்கும். வட்டாரத்தில் வெற்றிபெறுபவர் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர். விகிதாசாரத்தில் ஆசனம் கிடைப்பவர் நியமன உறுப்பினர். தமிழரசுக் கட்சிக்கு விகிதாசாரத்தில் எந்த ஆசனமும் கிடைக்கவில்லை. ஆகையால், மாவையின் மகனுக்காக தேர்தலில் உழைத்த 4 வேட்பாளர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இதுதான் அவர் தேர்தலில் வென்ற விதம். இதை வெற்றி என்று குறிப்பிடமுடியுமா?

தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் தன் மகன் சம்பந்தனை அரசியலில் நிறுத்தியுள்ளார் இது வாரிசு அரசியல் என்று பலர் வரலாறு தெரியாமல் எழுதுகின்றார்கள். சம்பந்தனின் தந்தையின் பெயர் இராஜவரோதயமே தவிர அவரது தந்தை முன்னாள் எம்.பி. அல்லர். இராஜவரோதயம் எம்.பி. 1956 ஆம் ஆண்டுகளில் பதவிவகித்தவர். இரா.சம்பந்தனின் தந்தை ஏ.இராஜவரோதயம் கல்லோயா திட்டத்தில் பணியாற்றிய ஒருவர். வரலாற்றை எவரும் தவறாகக் கற்பிதம் செய்தல் கூடாது.

அதே போன்று அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் ரெனா. தர்மலிங்கத்தின் மகன் சித்தார்த்தன் புளொட் என்று வேறு கட்சிகளில் பிள்ளைகள் இருந்தார்களே தவிர, தமிழரசுக் கட்சியில் வாரிசு அரசியல் வளர்க்கப்படவில்லை.

அமரர் மு.திருச்செல்வத்தின் மகன் கலாநிதி நீலன் திருச்செல்வம் என்பார்கள். இது வாரிசு அரசியல் அல்லவா என்றும் சிலர் மாவைக்காக விதண்டாவாதம் பேசுவார்கள். உண்மைதான். திருச்செல்வத்தின் மகன்தான் நீலன் திருச்செல்வம். திருச்செல்வம் 1976 ஆம் ஆண்டு அரசமைப்பை மீறினார்கள் என்று கூறப்பட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி எம்.பிக்களான அமிர்தலிங்கம், க.பொ.இரத்தினம், சிவசிதம்பரம், க.துரைரெத்தினம் ஆகியோரின் விடுதலைக்காக ட்ரயல் அட்பார் வழக்கில் தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம் ஆகியோருடன் இணைந்து வாதாடி அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்த சட்டமேதை. இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் உள்ளூராட்சி அமைச்சராக இருந்த ஒரேயொரு தமிழர். செனட்சபை உறுப்பினர். அவருக்கு நீலன் திருச்செல்வம் உட்பட நான்கு பிள்ளைகள். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? தந்தையைப்போல்தான் தனையனும்.

கலாநிதி நீலன்திருச்செல்வம் ஓர் உலகம்போற்றும் அறிவுமேதை. இவரே இலங்கையில் கொள்கை பற்றிய முன்னணி ஆய்வு நிறுவன அமைப்புகளின் (Centre for Ethnic Studies, Law Society Trust) அமைப்பாளர்களில் ஒருவராக இருந்தவர். தமிழர் அரசியலுக்கு இவரது தேவை இருந்தமையால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சிவசிதம்பரம், செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி ஆகியோர் இணைந்து சந்திரிகா பண்டாரநாயக்க குமார்ரணதுங்க ஆட்சிப்பொறுப்பேற்ற காலத்தில் 1994 ஆம் ஆண்டு இவரை அரசியலுக்குள் கொண்டுவந்து தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கிக் கௌரவித்தார்கள். சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்ட பிராந்தியங்களின் ஒன்றியம் தீர்வு வரைவை வரைந்த மேதை இதே நீலன்தான். இவராக விரும்பி அரசியலுக்குள் வரவும் இல்லை. அரசியலில் நீண்டகாலம் செயற்படவும் இல்லை. 1999 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். மாவையர்போல் இவரது தந்தை திருச்செல்வம் வயிற்றுப்பிழைப்புக்கு தனது மகனுக்கு தொழில் தேவை என்பதற்காக இவரை அரசியலுக்குள் கொண்டுவரவும் இல்லை. திருச்செல்வம் 1976 ஆம் ஆண்டு - தந்தை - ஜி.ஜி. இற்கு முன்பே தனது 66 ஆவது வயதில் அமரத்துவமடைந்துள்ளார். திருச்செல்வம் என்ற புலிக்கு பூனை பிறக்குமா? மாறாக மாவை என்ற பூனைக்குப் புலிக்குட்டி பிறந்தது என்று கூறலாமா....? சில புலம்பெயர் தமிழர் தமது சுயநல அரசியலுக்காக கூறத்தான் முற்படுகின்றார்கள்....!

அடுத்தவர் பட்டிருப்பு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மு.இராசமாணிக்கம். இவர் 1952 முதல் 1970 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். தந்தை தமிழரசை ஆரம்பிக்கும்போதே இணைந்து கட்சித் தலைவராகவும் செயற்பட்டவர். இவரது மகன் வைத்தியர் ராஜபுத்திரன் (தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை) சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் ராஜபுத்திரன். இராசமாணிக்கம் தன் பிள்ளையையோ பேரனையோ மாவைபோன்று வாரிசு அரசியலில் இழுத்துவிடவில்லை. 1974 ஆம் ஆண்டு இராசமாணிக்கம் மரணித்தார். 1990 ஆம் ஆண்டு சாணக்கியன் பிறந்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் 2020 ஆம் ஆண்டே - கடந்த வருடமே - போட்டியிட்டார். மக்கள் அதீத ஆணை வழங்கினார்கள். வெற்றிபெற்றார். தனது இளமை, துடிப்பு, மும்மொழித்திறன், அறிவாகியவற்றால் அரசியலில் கோளோச்சுகின்றார். இன்று தமிழ் இளைஞர், யுவதிகளின் காவியநாயகனாகத் தன்னை உருவாகியிருக்கின்றார். மக்கள் மனங்களை வென்றிருக்கின்றார். இவர்களின் அரசியலை வாரிசு அரசியல் என்று முட்டாள்தனமாகக் குறிப்பிடக்கூடாது.

கலாநிதி நீலன் திருச்செல்வம், சாணக்கியன் ஆகியோரோடு முதலில் மாவையின் மகனை ஒப்பிடமுடியுமா? அவர் அரசியலுக்கு வரும்போது இருந்த ஒரே தகுதி மாவையின் மகன். வந்ததும் பட்டமேற்படிப்பு படித்து இரவிராஜின் மருமகன் என்ற புதிய தகுதியையும் பெற்றுள்ளார். அவ்வளவே.....!

- நக்கீரன்.



Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com