Sunday, May 16, 2021

இஸ்ரேலின் போர்க்குற்றங்களும், “மனித உரிமைகள்” ஏகாதிபத்தியத்தின் பாசாங்குத்தனமும். Bill Van Auken

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் புதன்கிழமை வெளியுறவுத்துறை பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டமை, அவர் எதனுடன் அடையாளம் காணப்படுகிறாரோ, முற்றிலும் கேவலமான அந்த "மனித உரிமைகள்" ஏகாதிபத்தியம் குறித்து ஒரு பொருள் பொதிந்த பாடத்தை வழங்கியது.

வெளிப்பார்வைக்கு "சர்வதேச மத சுதந்திரம்" குறித்த அறிக்கையை முன்வைப்பதற்காக என்ற பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அந்த நிகழ்வை, அவர், “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் முஸ்லீம் வீகர்ஸ்களுக்கு எதிரான இனப்படுகொலை" செய்வதற்காக சீனாவைக் கண்டனம் செய்ய பயன்படுத்தினார்.

"மத சுதந்திரம்" குறித்து வெளியுறவுத் துறையின் முக்கிய பிரமுகர் டானியல் நாடெல் குறிப்பிட்டதையே அவரும் எதிரொலித்தார், "ஜின்ஜியாங்கில், PRC அரசாங்கம் நடத்தி வரும் கொடூரங்கள் முற்றிலும் தெளிவாக உள்ளது. நாங்கள் இது குறித்து பேசியே ஆகவேண்டும் என்பதால் தான் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்,” என்று நாடெல் அறிவித்திருந்தார்.

காசா வான்வழித் தாக்குதல்களில் 17 குழந்தைகள் உட்பட பலர் பலியாக்கப்பட்டு, அதேவேளையில் ஏவுகணைகளைக் கொண்டு உயரடுக்கு கட்டிடங்களைச் சிதைத்ததன் மூலமாக அந்த வறிய ஆக்கிரமிப்பு பகுதியின் ஒட்டுமொத்த மக்களும் மிரட்டப்பட்டுள்ள நிலையில் தான், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த இரண்டு பிரதிநிதிகளும் கருத்துரைத்தனர்.

இஸ்ரேலுக்குள்ளேயே, பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாஹூவின் நிலையற்ற ஊழல் வலதுசாரி அரசாங்கம், முன்னதாக ஆக்கிரமிப்பு காசா பகுதிகள் மற்றும் மேற்கு கரையோடு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஒரு வித அடக்குமுறையை, பாலஸ்தீன இஸ்ரேலிய குடிமக்களின் முன்னோடியில்லாத கிளர்ச்சிக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டு வருகிறது. கலகம் ஒடுக்கும் பொலிசார் மற்றும் குவிக்கப்பட்ட படைப்பிரிவுகளால் பல நூறு போராட்டக்காரர்கள் காயமடைந்துள்ளனர். உள்நாட்டு எதிர்ப்பை அடக்குவதற்காக அரசாங்கம் எல்லைப் படையினரையும், வழக்கமான ஆயுதப்படை பிரிவுகளையும் கூட அனுப்பி வருகிறது, அதே நேரத்தில் வியாழக்கிழமை நெத்தனியாஹூ அறிவிக்கையில், குற்றச்சாட்டுக்களோ அல்லது வழக்கு விசாரணைகளோ இல்லாமல் காலவரையின்றி சிறையில் அடைக்க அனுமதிக்கும் வகையில், "கலகக்காரர்களுக்கு" எதிராக "நிர்வாக தடுப்புக்காவலை" மேற்கொள்ள அவர் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

வெளியுறவுத்துறையில் யாருமே இந்த போர்க்குற்றங்கள் குறித்தும் மற்றும் இந்த "கொடூரங்களுக்கு" எதிராக பேசவோ அல்லது பேச நிர்பந்திக்கப்பட்டதாகவோ உணரவில்லை.

அதற்கு பதிலாக, பிளிங்கனும் ஏனைய அமெரிக்க செய்தி தொடர்பாளர்களும் சியோனிச அரசு "பயங்கரவாதிகளை இலக்கில் வைப்பதையும்", இஸ்ரேல் மீது "கண்மூடித்தனமாக ராக்கெட்டுகளை வீசும்" “பயங்கரவாத" ஹமாஸையும் ஒன்றாக ஒப்பிட முடியாது என்று வலியுறுத்தியதோடு, அதேவேளையில் "இஸ்ரேலுக்குத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு" என்ற மந்திரத்தையே முடிவின்றி உச்சரிக்கின்றனர்.

ஜனாதிபதி ஜோ பைடென் வியாழக்கிழமை அறிவிக்கையில், இஸ்ரேல் தரப்பில் "குறிப்பிடத்தக்க அதிக எதிர்வினை இல்லை" என்று அறிவித்து, பாலஸ்தீனர்கள் மீதான படுகொலையை தீவிரப்படுத்துவதற்குத் தவறுக்கிடமின்றி பச்சைகொடி காட்டியதுடன், அதை செய்வதற்கு தேவைப்படும் அமெரிக்க பணம் மற்றும் ஆயுத பரிவர்த்தனை தடையின்றி தொடரும் என்பதற்கும் உத்தரவாதமளித்தார்.

உண்மையில் பழைய காசா ராக்கெட்டுகளுக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் உயர் தொழில்நுட்ப கொலை இயந்திரத்திற்கும் இடையே ஒப்பிடுவதற்கும் ஒன்றும் இல்லை தான். கடந்த 15 ஆண்டுகளில் நடந்துள்ள இதுபோன்ற ஒவ்வொரு மோதலிலும் நடைமுறையளவில், காசாவில் பாலஸ்தீனியர்களின் இறப்புகள் இஸ்ரேலியர்களின் இறப்பு எண்ணிக்கையை விட ஒன்றுக்குப் பத்தை விட அதிக எண்ணிக்கையில் இருந்துள்ளது. உலகின் மிகப்பெரிய திறந்தவெளி சிறை என்று நியாயமாக விவரிக்கப்படும் அதன் அடிப்படை உள்கட்டமைப்பு, மீண்டுமொருமுறை, துண்டுதுண்டாக சிதைக்கப்பட்டு, அந்த மக்கள் முன்பினும் ஆழ்ந்த வறுமைக்குள் தள்ளப்பட்டு வருகிறார்கள்.

வெளியுறவுத்துறை செயலாளர் பிளிங்கனும் அவரது துணை செயலரும் "பாதுகாத்து கொள்வதற்கும் தற்காத்து கொள்வதற்கும்" பாலஸ்தீனர்களுக்கும் உரிமை உண்டு என்ற ஒரு சம்பிரதாயமான அறிக்கையைக் கொண்டு இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலுக்கான அவர்களின் பாதுகாப்பை சமாளித்தார்கள். ஆனால் இந்த உரிமை அமைப்புரீதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் மறுக்கப்பட்டுள்ளது, அது வழமையாக பாலஸ்தீனர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும், கொன்றும், ஊனமாக்கியும், குழந்தைகள் உட்பட அவர்களை விசாரணையின்றி சிறையில் அடைத்தும், அவர்களின் நிலங்களைக் கையகப்படுத்தியும், சியோனிச குடியேற்றங்களைத் தீவிரமாக பரவ செய்ய வழி ஏற்படுத்துவதற்காக அவர்களின் வீடுகளை சிதைத்தும், அவர்களுக்கு இடம்பெயர்வதற்கான சுதந்திரத்தை மறுத்தும் வருகிறது.

போரை நோக்கி செல்வதைத் தடுக்க மிக மோசமான இத்தகைய குற்றங்களைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையிலுள்ள ஏனைய உறுப்பு நாடுகள் கொண்டு வந்த ஒரு சட்டக்கட்டுப்பாடற்ற தீர்மானம் வலியுறுத்தியதால், அதை ஒடுக்குவதற்காக அமெரிக்கா அந்த அவையில் அதன் வீட்டோ தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்தியது.

இஸ்ரேலிய அரசு நடத்தும் வன்முறையின் ஒரு பகுதியையாவது பெய்ஜிங் ஜின்ஜியாங்கில் நடத்தினால், பிளிங்கன் மற்றும் அவரது வெளியுறவுத்துறை கூட்டாளிகளின் எதிர்வினை எப்படி இருக்குமென்பதில் ஏதாவது சந்தேகம் இருக்க முடியுமா? வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் ஒரு குற்றச்சாட்டாக, வீகர்ஸ் மக்கள் மீதான சீனாவின் கொள்கை “இனப்படுகொலை” என்று வாஷிங்டன் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது.

சீனாவின் பிற இடங்களில் செய்வதைப் போலவே ஜின்ஜியாங்கிலும் அரசு அடக்குமுறை முறைகளைப் பெய்ஜிங் பயன்படுத்துகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இனப்படுகொலை குற்றச்சாட்டை ஆதரிக்க அங்கே எந்த ஆதாரமும் இல்லை என்பதோடு, ஆப்கானிஸ்தானிலும் மத்திய கிழக்கிலும் 20 ஆண்டுகாலமாக இடைவிடாமல் வாஷிங்டன் நடத்திய போர்களில் மில்லியன் கணக்கானவர்கள் பலியாகி உள்ளார்கள் என்ற நிலையில், இதை சுட்டிக்காட்ட வாஷிங்டனுக்கு எந்த தகுதியும் இல்லை.

ஆனால் "நீங்கள் ஒரு பொய்யை மிகப்பெரியளவில் கூறி, அதைத் திரும்பத் திரும்பச் சொன்னால், இறுதியில் மக்கள் அதை தவிர்க்கவியலாமல் நம்பி விடுவார்கள்," என்று தலைமை நாஜி பிரச்சாரகர் ஜோசப் கோயபல்ஸ் கோடிட்டுக் காட்டிய மூலோபாயத்தை அமெரிக்க வெளியுறவுத் துறை பின்பற்றுகிறது.

சீனாவுக்கு எதிரான இந்த பிரச்சார நடவடிக்கை பெருநிறுவன ஊடங்களில் தாராளமான ஆதரவையும் பகட்டாரவாரத்தையும் பெறுகிறது. இதைச் சுட்டிக்காட்டுவதற்கு, "சீனாவில், ஒவ்வொரு நாளும் கிறிஸ்டால்நாஹ்ட்" (Kristallnacht என்பது நாஜிகளால் யூத படுகொலை ஆரம்பிக்கப்பட்டதை குறிக்கும் நாள்) என்ற தலைப்பில் வாஷிங்டன் போஸ்ட் தலையங்க பக்கத்தில் ஆசிரியர் ஃப்ரெட் ஹியாட் எழுதிய நவம்பர் 2019 கட்டுரை குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

இந்த குறிப்பானது, நாஜி அதிரடிப் படையினர் ஜேர்மனி எங்கிலும் யூதர்களைக் கொடூரமாக படுகொலை செய்யத் தொடங்கிய நவம்பர் 9-10, 1938 இன் இரத்தந்தோய்ந்த சம்பவங்களைக் குறிக்கிறது. மொத்தம் 1,400 யூத வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான யூத வணிகங்கள் அழிக்கப்பட்டன, வீடுகள் சூறையாடப்பட்டன, மக்கள் தாக்கப்பட்டனர் மற்றும் கல்லறைகள் இடிக்கப்பட்டன. ஏறத்தாழ 30,000 யூதர்கள் சிறை வதை முகாம்களில் அடைக்கப்பட்டு சுமார் 1,500 பேர் கொல்லப்பட்டனர், இது மில்லியன் கணக்கானவர்களை நிர்மூலமாக்குவதில் போய் முடியவிருந்த ஒரு நிகழ்ச்சிப்போக்கை தொடக்கி வைத்தது.

இதுபோன்ற ஏதோவொன்று ஜின்ஜியாங்கில் "ஒவ்வொரு நாளும்" நடக்கிறது என்ற குற்றச்சாட்டு மசூதிகள் இடிக்கப்பட்டு கல்லறைகள் சிதைக்கப்பட்டன என்பதற்கு பஹ்ராம் சின்தாஷ் வழங்கிய சாட்சியமாக இருந்தது அதை ஆதரிக்க ஹியாட் சிறந்த முறையில் முன்வரக்கூடும்.

சின்தாஷ், உலக வீகர் மாநாடு மற்றும் அமெரிக்க வீகர் கூட்டமைப்பின் ஒரு கிளையான வீகர் மனித உரிமைகள் திட்டத்தின் செயல்பாட்டாளர் ஆவார், இவ்விரு அமைப்புகளும் முன்னதாக சிஐஏ ஆல் இரகசியமாக நடத்தப்பட்டு வந்த பொதுநிதி திரட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பான ஜனநாயகத்திற்கான தேசிய நிதி சேகரிப்பு ஆணையம் (National Endowment for Democracy – NED) என்பதிலிருந்து நிதியுதவி பெற்று வந்தன. 2004 இல் இருந்து வீகர் பிரிவினைவாத குழுக்களுக்கு அது கிட்டத்தட்ட 9 மில்லியன் டாலர்களை வழங்கி இருப்பதாக NED 2020 இல் பெருமைபீற்றியது. அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தீவிர வலதுசாரி சக்திகளுடன் பிணைந்துள்ள இந்த குழுக்கள், ஜின்ஜியாங்கில் ஓர் இனரீதியிலான-அரசை உருவாக்க முயல்வதுடன், வெளிப்படையாகவே “சீனாவின் வீழ்ச்சி” க்கு அழைப்பு விடுக்கின்றன.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "இனப்படுகொலை" என்பதற்கான சான்றுகள் வாஷிங்டனால் நேரடியாக நிதியளிக்கப்பட்ட கூறுபாடுகளால் வழங்கப்படுகின்றன, ஓர் அரசு சுற்றறிக்கை பிரச்சார நடைவடிக்கையான இதில் போஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் விரும்பத்திற்குரிய வடிகால்களாக சேவையாற்றுகின்றன.

இதற்கிடையே, காசாவில் நடத்தப்பட்டு வரும் போர் குற்றங்கள் மீது, மில்லியன் கணக்கான யூதர்கள் உட்பட உலகெங்கிலுமான மக்கள் உணரும் வெறுப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்தும் எவரொருவருக்கும் எதிராகவும் பழிசுமத்தும் வகையில் "யூத-எதிர்ப்புவாதிகள்" என்று குறிப்பிடுவதையும் கடந்த ஒரு நடைமுறையில், இஸ்ரேல் குற்றங்களை அம்பலப்படுத்துபவர்கள் "யூத-எதிர்ப்புவாதிகள்" என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். உண்மையில், ஒரு சிறிய இஸ்ரேலிய நிதிய மற்றும் பெருநிறுவன தன்னலக்குழுவின் நலன்களுக்காக ஆட்சி செலுத்தும் ஓர் அரசின் குற்றகரமான கொள்கைகளோடு எங்கெங்கிலும் உள்ள யூதர்களை அடையாளப்படுத்தும் விதத்தில், இந்த வரையறையே யூத-எதிர்ப்புவாதமாக உள்ளது.

இந்த குற்றங்கள் மற்றும் அதன் கொடூரங்கள் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் அலட்சியமாக இருப்பதற்கும், ஜின்ஜியாங்கை சம்பந்தப்படுத்தி "மனித உரிமைகளை" கையிலெடுப்பதற்கும் இடையிலான பாரிய இடைவெளி, எல்லா தார்மீக நெறிமுறைகளும் தார்மீக வர்க்க நெறிமுறைகளே என்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்கிறது. பிளிங்கன் போன்ற ஏகாதிபத்திய செயற்பாட்டாளர்களின் தார்மீக கோபம், ஆக்கிரமிப்பு போர்களை நியாயப்படுத்தவும், கொள்ளையடிக்கவும், அமெரிக்க நிதிய தன்னலக்குழுவின் நலன்களை முன்னெடுக்கவும் தேவைப்படும் போது மட்டுமே செயலுக்கு வருகிறது.

பால்கன் பகுதியிலும், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவிலும் நடத்தப்பட்ட போர்களை நியாயப்படுத்த முன்னர் எழுப்பப்பட்ட "மனித உரிமைகள்" என்ற இழிந்த பதாகையே இப்போது சீனா மற்றும் ரஷ்யாவுடனான "வல்லரசு" மோதலுக்கான தயாரிப்புகளின் பாகமாக முன்னெடுக்கப்பட்டு வருவது உலகளாவிய நிலைமையில் தீவிர பதட்டங்கள் மற்றும் அபாயங்களுக்கான ஒரு நடவடிக்கையாகும். காசா சம்பவங்களும் மற்றும் இஸ்ரேலிலேயே அதிகரித்து வரும் கட்டுப்பாடற்ற நெருக்கடியும், ஒரு பேரழிவுகரமான போருக்கு வழிவகுக்கும் விதத்தில், இந்த வெடிஉலைக்கு நெருப்பு பற்ற வைக்கும் சாத்தியக்கூறைக் கொண்டுள்ளன.

உலக சோசலிஸ வலைத்தளத்திலிருந்து..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com