Wednesday, January 6, 2021

இச்சா – ஷோபா சக்தியின் ‘மட்டரக காக்ரெயில்’ தயாரிப்பு: நட்சத்திரன் செவ்விந்தியன்

திட்டமிட்டு ஒரு MASTER PLAN உடன் உருவாக்கிய சண்டிகார் நகர்போல் உருவாகுவதல்ல நல்ல நாவல். அது ஆதி பஞ்சாபிய நிலத்தில் உருவாகிய சிந்து நதியின் ஐந்து பஞ்சாபிய நில ஊற்றாறுகள் போல உருவாகுவது.


ஒரு நாவலை எப்படி எழுதுவது என்பதில் இரண்டு கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். முதல் கட்சிக்காரர்கள் சேதனபூர்வமாக (Organic) எழுதுகிறவர்கள் எனப்பட மற்ற கட்சிக்காரர்கள் அசேதனபூர்வமாக எழுதுகிறவர்கள் எனப்படுவர். சேதனபூர்வமாக எழுதுகிறவர்கள் எழுத எழுத கதையும் பாத்திரங்களும் தன்னிச்சையாக வந்து விழுந்து பறக்கத்தொடங்கும். அதன் சேதனபூர்வமான பறத்தலை தங்களால் திட்டமிட்டு கட்டுப்படுத்த முடியாது என்பார்கள். அசேதனபூர்வமாக எழுதுபவர்கள் ஒவ்வொரு பாத்திரம், கதை, கதை விபரணம் என்பவற்றை முன்கூட்டியே மிகக் கச்சிதமாக திட்டமிட்டுக் கொண்டுவந்து ஒவ்வொரு பக்கம் பக்கமாக பொருத்துவார்கள்.

ஒரு கட்டடக் கலைஞர் எப்படியான வீடு கட்டப்போகிறார் என்பதற்கு முதலில் ஒரு வரைபடம் வரைவார். அறைகளின், நடைபாதைகளின், குசினியின், வரவேற்பறையின், தியேட்டர் அறையின், பல்கனியின், சூரிய ஒளி அறையின், கழிவறையின், பின் கட்டின், மாடிப்படிகளின் பரப்பையும் அவற்றின் துல்லியமான லொக்கேசனையும் முதலில் குறிப்பார். பிறகு கூரையின் உயரம், எவ்வகையான கூரை, கூரையின் சரிவு, எவ்வகையான தரை, எவ்வகையான சுவர்கள், பயன்படுத்தவுள்ள கட்டடப் பொருட்கள்(செங்கல், கொங்கிறீற், மரத்தளபாடம், மாபிள், இன்னபிற கட்டடப்பொருட்கள், யன்னல்களும் கதவுகளும் அமையவுள்ள இடங்களும் அவற்றுக்கு பயன்படுத்தவுள்ள பொருட்களும்) எற்பவற்றை தெரிவார். கட்டிமுடித்த வீடு எப்படி வரும் என்பது அக்கணத்திலேயே அக்கட்டடக் கலைஞருக்கு அச்சொட்டாக தெரியும். இந்த கட்டடக் கலைஞருக்கு ஒப்பானவர்கள் அசேதனபூர்வமான எழுத்தாளர்கள். சேதனபூர்வமாக எழுதுகிறவர்களுக்கு இறுதி நாவல் எப்படி இருக்கும் என்கிற சித்திரம் அதனை எழுதி முடிக்கும் வரை தெரியாது.

ஒரு நல்ல நாவல் உருவாகும்போதே அதற்கான வடிவத்தையும் மொழியையும் கட்டமைப்பையும் விதிகளையும் உருவாக்கிக்கொள்கிறது. திட்டமிட்டு ஒரு Master plan உடன் உருவாக்கிய சண்டிகார் நகர்போல் உருவாகுவதல்ல நல்ல நாவல். அது ஆதி பஞ்சாபிய நிலத்தில் உருவாகிய சிந்து நதியின் ஐந்து பஞ்சாபிய நில ஊற்றாறுகள் போல உருவாகுவது. ஆறுகள் மலையில் பிறந்து பள்ள நிலங்கள் வழியாக கடலை நோக்கிப்பாய்கிறபோதே தன் பாதையை உருவாக்கிகொள்கிறது. தீபெத்திய மேட்டில்(இப்போ சீனா) உருவாகும் சிந்துநதி இப்போது பாக்கிஸ்தானிய இந்திய தேச மாநிலங்களான பஞ்சாபிய மண்ணூடாக பாக்கிஸ்தான் முழுக்க ஓடி கராச்சியில் அரபிக்கடலில் விழுகிறது. அது GPS, தேசம், இனம், மதம், மொழி, ஜாதி, பால் எல்லைகள் பார்த்து தன் வழியை தெரிவு செய்ததில்லை. அது போலத்தான் நல்ல நாவல். அதற்கு கருத்தியல்/Ideology/ Doctrine இருக்காது.

நல்ல எழுத்தாளர்களிடம் Story Architecture என்கிற அடிப்படை கதைக்கட்டமைப்பு (பூர்வாங்கமான மையக்கதை, மையப்பாத்திரங்கள் கதை சொல்லியின் கோணம்) இருக்கும். இந்த கதைக்கட்டமைப்பு தான் வெற்றிபெற்ற எழுத்தாளர்களின் இரகசியம். இவர்கள் பெரும்பாலும் குறித்த Story Architecture கைவசத்தோடு சேதன- organic முறையிலேயை எழுதுவார்கள். மார்க்கியூஸ் ஒரு பேட்டியில் இதனை ஒப்புவித்தார். அவர் அசேதன முறையில் எழுதிய ஒரே நாவல் The chronicle of a death foretold. மீதி எல்லாம் சேதனபூர்வமாக எழுதப்பட்டவை. ஜெயமோகனின் ரப்பர் சேதனமுறையில் எழுதப்பட்ட அசல் நாவல். விஷ்ணுபுரம் அசேதனமுறையில் செயற்கையாக எழுதப்பட்ட நாவல். எஸ்.பொவின் சடங்கு சேதன நாவல். தீ அசேதனமுறையில் எழுதப்பட்ட Pornography.

ஷோபாசக்தியின் கொரில்லா எழுதத்தொடங்க முன் அவரிடம் அந்த Story Architecture இருந்தது. பெரும்பாலான ஆரம்பகால எழுத்தாளர்களைப்போல அது அவரது சுய கதை (Autobiographical) கலந்த புனைவு; சேதனபூர்வமான முறையிலேயே ஷோபாசக்தி அதனை எழுதி முடித்தார். அதுதான் கொரில்லாவின் வெற்றி.

‘சேனன்’ அசேதனபூர்வமான எழுத்தாளர். அவருடைய ‘லண்டன்காரர்’ நாவலும் தற்போதைய ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்களும்’ அசேதனபூர்வ முறையைப்பாவித்து எழுதப்பட்டவை. ஈழப்போர் முடிவின் பின் வந்த ஷோபாசக்தியின் இரு நாவல்களான பொக்ஸ், இச்சா இரண்டும் அசேதன முறையில் எழுதப்பட்ட குப்பைகள். ஷோபாசக்தி திட்டமிட்ட, ஒரு வணிக (ஆனந்தவிகடன்) சந்தைக்காக எழுதப்பட்டவை. சேதனமுறையில் நாவல் எழுதுபவர்கள் தங்களது பிரதியை பலரிடம் படிக்கக்கொடுத்து ஆலோசனைகேட்டு பின் அதில் திருத்தங்களும் எடிட்டிங்கும் செய்வதில்லை. தமது படைப்பை தாமே கனகச்சிதமாக சார்பு இன்றி ஈவு இரக்கமின்றின்றி மதிப்பிட அவர்களால் முடியும். படைப்புச்செயற்பாட்டிற்போது அவர்களது படைப்பாற்றலுக்கேற்ப திறமைகளும் உத்திகளும் படைப்பாற்றலும் அவர்களே அதிசயிக்கும் வகையில் வந்துவிழும். சேனனைப் போலத்தான் சயந்தனும் அசேதன முறையிலேயே எழுதுபவர். இதனால்தான் சயந்தனின் ‘ஆதிரை’ பூர்வாங்கப்பிரதி முதலில் தமிழினி பதிப்பக அதிபரால் படிக்கப்பட்டு அவர் சொன்ன ஆலோசனைகளின் அடிப்படையில் திருத்தங்களும் மேலதிக அதிகாரங்களும் இணைக்கப்பட்டன. தமிழ்கவியின் ஊழிக்கால நாவலும் பலரது ஆலோசனைகளுக்கேற்ப திருத்தப்பட்டே வந்தது. ஜெயமோகனது விஷ்ணுபுரத்தை ஜெயமோகன் எழுத்தாளர் சுஜாதாவிடம் கொடுத்து எடிற் பண்ணமுடியுமா என்று கேட்டிருந்தார். சுஜாதா அதற்கு “முடியும். அதனை நீங்களேதான் எடிற்பண்ணவேண்டும்” என்று சொல்லியிருந்தாராம். அசேதன முறையில் எழுதப்படும் பல நாவல்கள் சிறப்பாக வராமைக்கு காரணம் அதனை எழுதுபவர்கள் படைப்பாற்றலில் பின்தங்கி இருப்பதுதான்.

முதல்முறையாக ஒரு நாவல் எழுதுபவர்கள் தமது பிரதியை மற்றவர்களிடம் படிக்ககொடுத்து manuscript editing செய்வது வேறு. அது தேவையானது. ஆனால் ஏற்கெனவே எழுத்தாளர் என்று பெயர்பெற்றவர்கள் மற்றவர்களின் ஆலோசனைகளைக்கேட்டு தாமோ வேறொருவரோ Manuscript editing செய்வது வேறு. தமிழில் தொழில்சார் (Professional) Manuscript editing இல்லை. Manuscript Editing என்பதே ஒரு விரிவான துறை. இலக்கணத்தையும் தரிப்புக்களையும் பந்தி பிரிப்புக்களையும் செய்வது ஒன்று. விரிவாக கதை, கதைப்பின்னல், பாத்திரங்கள் என்பவற்றையே மாற்று விரிவாக்கி மெருகூட்டி செய்வது வேறு. இந்த இரண்டாவது முறையில் குறித்த எழுத்தாளரைவிட manuscript editor திறமையாக இருந்து இறுதியாக வருகிற பிரதியே ஒரு ரகசிய Ghost Writer எழுதிய இலக்கிய திருட்டாக வர வாய்ப்பு இருக்கிறது.

புனைவினுடைய/கலைப்படைப்பினுடைய பலமே அது உருவாகிற சேதன முறையிலேயே இருக்கிறது. புனைவு சாரா/அ-புனைவு(Non Fiction) ஆய்வுக்கட்டுரைகள், கலாநிதிப்பட்ட ஆய்வுகள் முற்றிலும் அசேதன முறையில் ஆராய்ச்சிசெய்து தருக்க பலம், தரவுகளின் நம்பகத்தன்மை என்பவற்றின் அடிப்படையில் திட்டமிட்டு அதற்கெனவே ஒரு methodology-ஐப் பயன்படுத்தி எழுதப்படுபவை. புனைவுக்கு methodology கிடையாது. ஏறத்தாள மனித மூளைக்கும் (Analog), Artificial Intelligence (Digital)-க்கும் இடையிலான வேறுபாடுதான் சேதனபூர்வமான எழுத்துக்கும், அசேதனபூர்வமான எழுத்துக்குமிடையிலான வேறுபாடு. புனைவை எழுதுபவர்கள் ஆராய்ச்சி செய்யக்கூடாது என்பதல்ல பிரச்சனை. ஆராய்ச்சி மட்டுமே இலக்கியமாக முடியாது என்பதுதான் நான் கூற வருவது.

2009ல் ஈழப்போர் முடிந்தபின் தமிழ் உணர்வை சனரஞ்சகமான கச்சாப்பொருளாக்கி சுமாரான மற்றும் மோசமான ஈழப்போர் சம்பந்தமான நாவல்கள் வெளிவந்தன. ஆனந்த விகடன் போன்ற வியாபார நிறுவனங்கள் ஊக்குவித்த இந்த போக்கின்படி தமிழ்க்கவி, தமிழ்நதி, சயந்தன், குணா கவியழகன், தீபச்செல்வன் முதலியோர் எழுதிய நாவல்கள் வெளிவந்து சனரஞ்சக மதிப்பைபெற்று பிரபல்யமாகின்றன. இந்த நாவல்களை எழுதியவர்களுக்கு தமிழகத்தில் கிடைக்கும் பிரபல்யத்தால் மனங்குமைந்து “ரென்சனான” ஷோபாசக்தி தனக்கு இருக்கும் தெரிவுகளை ஆராய்கிறார். ஷோபாசக்திக்கு தனது படைப்பாக்கச் சரக்கும், இலக்கிய திறமைகளும் தீர்ந்துபோனது தெரியும். புலி எதிர்ப்பாளன், புலி விமர்சகன் போன்ற தனக்கு எதிராக இருக்கிற வணிக சாபங்களையும் சமரசம் செய்து குத்துக்கரணமடித்து புலியாதரவு நாவலாகவே எழுதுவதைத்தவிர தன்னிடம் திராணி இல்லை, என்பதை உணர்ந்த ஷோபாசக்தி ‘கொரில்லா’ போன்று சேதனபூர்வமுறையில் தன்னால் எழுதமுடியாது என்பதையுணர்ந்து அசேதன முறையில் முற்றிலும் திட்டமிட்டு உத்திகளால் எழுதியவைதான் பொக்ஸ் நாவலும், இச்சாவும்.

இச்சாவில் முதல் 28 பக்கங்களும் தேவை இல்லாத ஆணிகள். வெறும் மலின வித்தைகள். இலங்கை ஈஸ்ரர் குண்டு வெடிப்பு, மர்லின் டேமி, Urovan கற்பனை மொழி, ஒர் ஐரோப்பிய இலக்கிய மன்றம் ஷோபாசக்திக்கு நிசத்தில் வழங்கிய ஒருமாதகால எழுத்து வசிப்பிட சன்மானம் என்கிற இந்த தேவை இல்லாத ஆணிகள் வாசகர்களையும் மொக்கை விமர்சகர்களையும் பயமுறுத்தவும், படங்காட்டவும் ஷோபா பயன்படுத்துகிற மலின விளம்பரங்கள். சித்தார்த்தனின் விநோத சம்பவங்கள் நாவலில் ‘ரோகிணி விஜயகுமார’ ஆகிய பாத்திரம் சாதனா பற்றிய தகவல்களை அறிய கதை சொல்லியை தேடுவது இச்சாவில் ‘மர்லின் டேமி’ ஆலாவின் கதையைச்சொல்ல ஒரு கதைசொல்லியைத் தேடிவருவதாக வருகிறது. சேனனின் கதைப்பின்னலை ஷோபாசக்தி பட்டப்பகலில் கொள்ளையடித்து கையும் களவுமாக மாட்டுப்படுகிறார். பக்காத் திருடர்களுக்கே வியாபார தந்திரங்களுண்டு. பத்து ரூபா கொள்ளையடித்து பிடிபட்டு மானங்கெடுவதை விட பத்து லட்சம் கொள்ளையடிப்பது மேல். ஆனால் அசேதனபூர்வமாக எழுதும் ஷோபா போன்ற எழுத்தாளர்களுக்கு திருட்டும் எளிய பிச்சைக்காரன் அளவு திருடுமளவுக்கு சீரழிவது சாத்தியமே. அவர்கள் திருட்டின் வறுமை அவ்வளவு. இதற்கு மேற்சொன்ன வணிகரீதியான சந்தைக்கெழுதும் காரணங்களுமிருக்கின்றன.

"நல்ல நாவல் காலத்தை வென்று வாழும். அதில் நீதி போதனைகள் இருக்காது. செய்தி இருக்காது. கருத்தியல்/IDEOLOGY/ DOCTRINE இருக்காது. இவை இருந்தால் அது பிரச்சாரமாயிருப்பதோடு கலையாகத் தேறாது."


திருக்குறள் கலையான இலக்கியம் அல்ல. அது அறம்சார் தத்துவ நூல். சிலப்பதிகாரம் கலையான இலக்கியம். ஷோபாசக்தியின் பல்முனை விளம்பரங்கள், Public Relations நடவடிக்கைகளையும் தாண்டி பொக்ஸ், இச்சா நாவல்கள் மொக்கை என்பது வாசகர்களால் உணரப்பட்டிருக்கிறது. தமிழ் விமர்சகர்களும் மொக்கையாக இருப்பதால் நேர்மையான வாசகர்களின் குரல் வெளியே வரவில்லை. கண்டபாட்டுக்கு வாசகர்கள் கதையுடன் ஒன்றிப்போகமுடியாதவாறு ஏராளமான தேவையில்லாத ஆணிகள், உப கதைப் பின்னல்கள், அலங்கார சோடனைகள் வந்து குழப்புகிறது. பொக்ஸ் நாவலை வாங்கிய பலரால் சில அத்தியாயங்களுக்கு மேல் படிக்கமுடியாமல் இருந்தது என்பது உண்மை. இச்சா நாவல் மலினமானது என்றாலும் குறைந்தபட்சம் ‘ஆலா’ என்கிற பெண்கரும்புலியின் கதை ஒரு கதையென்ற அளவில் படிக்ககூடியதாக இருக்கிறது. ஆனால் இச்சாவிலும் வாசகர்களின் உற்சாகத்தைக்குறைக்கிற பல சுமையான விபரங்கள் வருகிறது. முக்கியமாக ஆலாவின் கிழக்கு மாகாண பதுமர் குடி பற்றிய அலங்கார விபரணைகள்.

ஆலா இயக்கத்தில் சேர்ந்ததிலிருந்து கரும்புலியாக வெடிக்கமுயற்சிப்பது வரைதான் மலினமானதாயினும் கதையாக இருக்கிறது. அவர் கைது செய்யப்பட்டபின் சிறையில் நடப்பதாக வருபவை மிகை அதீதங்கள். பின் திருமணஞ் செய்து ஆலா ஐரோப்பா போன பின் நடப்பவை, பத்தாம் பசாலித்தனமான Melo Drama.

ஈழப்போருக்குப் பின் வந்த ஆனந்தவிகடன் மற்றும் சமூக வலைத்தளங்கள் உருவாக்கிய சூழலில் மொக்கை விமர்சகர்கள் பேரிலக்கியங்களை தேடுகிற சூழலில் Quality ஐவிட Quantity முன்னுக்கு வருகிறது. அதாவது புத்தகத்தின் தரத்தைவிட புத்தகத்தின் நிறையை வைத்து மதிப்பிடுகிறார்கள். ஷோபாசக்திக்கும் இதற்காகவே அதிக பக்கங்களில் எழுதவேண்டிய நிர்ப்பந்தம்.

ஆலா பெருமளவுக்கு ஒரு இலட்சியவாத(Ideal) பாத்திரம்தான். அந்தக்கால மு.வரதராஜனின் இலட்சியவாத நாவல்களின் பண்பு பொக்ஸ் இலும் இச்சாவிலும் உண்டு. புலிகள் தமிழ் மக்களை அடகுவைத்து நடாத்திய அறமற்ற பாசிஸப் போரை ஷோபாசக்தி ஒரு இலட்சியவாத நியாயமான போராகத் திட்டமிட்டு கட்டமைக்கிறார். பெண் குழந்தைப்போராளியும் கத்தோலிக்க புனிதருமான ஜோன் ஆர்க் ஐ விழித்து இந்நாவலை எழுதத்தொடங்குவேன் என்று இச்சாவை ஆரம்பிக்கிறார். தற்கொலைப் போராளிகள் இலட்சியவாதிகள் அல்லர். உலகம்பூராகவும் தற்கொலைப் போராளிகளின் தனிப்பட்ட சிக்கல்கள், தனிப்பட்ட காரணங்களால்தான் அல் கெய்டா, புலிகள் போன்ற பயங்கரவாதிகளின் பிரச்சாரத்துக்குள் விழுந்து பலி ஆடுகளாகிறார்கள். ஷோபாசக்தி தன்னுடைய இலட்சியவாதக் கதையாடலுக்கேற்றவகையில் ஆலாவை பலியிடுகிறார். ஆலா தன் முதிய உறவினரால் பாலியல் இம்சைக்குள்ளான தருணத்தில், ஆலா அவரை கிணற்றில் தள்ளிவிட பின்னர் வந்த பெண்புலித்தளபதி விசாரித்து தன் கைத்துப்பாக்கியால் கிணற்றில் வைத்தே அம் முதியவரை கொல்வதாக வருகிற பகுதி அப்பட்டமான ஜோக்(Farce). ஆலாவை சிங்கள ஊர்காவல் படையினர் கொல்வதற்காக கூட்டிச்செல்கிறபோது ஒரு புலிக் குழந்தைப் போராளி வந்து அவர்களைச்சுட்டு ஆலாவை காப்பாற்றுவது அடுத்த ஜோக்.

பொக்ஸ், இச்சா இரண்டிலும் தமிழக சந்தைக்காக வலிந்து புகுத்தப்பட்ட சாதீய சிக்கல்கள் இருக்கும். இது ஷோபாசக்தி என்கிற பிராண்டின் Trade Mark. இரண்டாயிரம் ஆண்டுகளின் முதல் பத்தாண்டுகளில்(2000 – 2009) பதின்ம வயதுகளிலிருந்த ஆலாவின் தலைமுறையைச் சேர்ந்த ஈழத்தின் வடக்கு போராளிகள் சாதி வேறுபாடுகள் அறியாமல் வளர்ந்தவர்கள். அந்த தலைமுறை குழந்தைப் போராளிகள் சாதி வேறுபாடுகளுக்காக அடிபட்ட வரலாறு இல்லை. ஆனால் இச்சாவின் 157வது பக்கத்தில் பின்வரும் பகுதி வருகிறது.

“புதிதாகப் பயிற்சிக்கு வந்திருக்கும் இந்த அணிக்குள்ளும் (ஆலாவின் தலைமுறை) அரசல் புரசலாக சாதிய பேச்சுக்கள் இருந்தன. எவராவது இந்தக்குற்றச்சாட்டில் அகப்பட்டால் செந்தூரி அக்கா வழங்கும் தண்டனை மிகக்கடுமையானதாக இருக்கும்”

மிக அப்பட்டமாக திட்டமிட்டு எழுதப்பட்ட பிரச்சாரம் இது.

பொக்ஸ், இச்சா நாவல்கள் மலினமான இலக்கியம் என்பதை கால் மார்க்ஸ் கணபதி(பொக்ஸ்) அ.யேசுராசா, சித்தாந்தன் சபாபதி ஆகியோர் எழுதிய மதிப்புரைகளில் கண்டு சொல்லியிருக்கிறார்கள். மூவரும் அவர்களுடைய முற்சார்பால் பொக்ஸ், இச்சா புலியெதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து எழுதப்பட்டவை என்று கூறுவது அவர்கள் பார்வைக் குறைபாட்டால் வருகிறது. பொக்ஸ், இச்சா நாவல்கள் இலக்கியத்தை கலைப்படைப்பாக அணுகத்தெரியாத புலிச்சார்பாளர்களால்தான் சமூக வலைத்தளங்களில் ஊக்குவிக்கப்பட்டன என்பது உண்மை.

யேசுராசா ஜீவநதி இதழில் பொக்ஸ், இச்சா நாவல்களில் வரும் பாலியல் வக்கிரமான சித்தரிப்புக்கள் வக்கிரமானவை என்று கூறுவது சரியானதும் கவனத்துக்குரியதும். Pornography வாசகர்களையே கடுப்பேத்தும் அளவுக்கு எழுதும் ஷோபாசக்தியின் பாலியல் விபரிப்புக்களை படித்தபோது எனக்கேற்பட்ட சந்தேகம் ஷோபா போதைவஸ்துக்களின் தாக்கத்திலிருந்தா இவற்றை எழுதுகிறார் என்பதே. (ஷோபாசக்தி போதைவஸ்துப் பயன்படுத்துபவர் என்பதை அவரே பேட்டியொன்றில் பகிரங்கமாகச் சொல்லியுள்ளார். – ‘போர் இன்னும் ஓயவில்லை, ஷோபாசக்தியுடன் உரையாடல்’, பக்கம் 42 – எனது சந்தேகம், அவற்றின் தாக்கத்திலிருந்தா எழுதுகிறார் என்பதே.)

ஒரு நாவலின் அடிப்படைக் கூறுகளான plot, theme, setting, conflict, character, point of view ஆகிய அனைத்திலும் எழுத்தாளர் திண்டாடுகிறார். ஒரு ஊரிலுள்ள அனைவரையும் கவரக்கூடிய, ஒரேயொரு கள்ளச்சாராயம் (கசிப்பு) உற்பத்தி செய்ய பகீரதப்பிரயத்தனம் செய்து தோற்கின்ற ஒருவனையே, மிகுந்த சிரமப்பட்டு இச்சாவை படித்து முடித்தபோது எனக்கு ஷோபாசக்தி நினைவுபடுத்தினார். இலட்சியம், வணிகம், பாவனை எல்லாம் கலந்த ஒரு மட்டரக காக்ரெயில்தான்(Cocktail) இச்சா.

இச்சா தொடர்பான நட்சத்திரன் செவ்விந்தியனின் விமர்சனம் நட்சத்திரன் செவ்விந்தியன் ‘வசந்தம் 91’, ‘எப்போதாவது ஒருநாள்’ என்ற கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர். பல்வேறு பத்திரிகைகள், இணைய இதழ்கள், சஞ்சிகைகளில் எழுதிய விமர்சனங்கள், குறிப்புகள், அரசியல் கட்டுரைகள் இன்னும் தொகுக்கப்படாமல் விரவிக்கிடக்கின்றன.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com