படிக்காத, அநாகரிகமான அரசியல் கலாச்சாராத்தை துடைத்தெறிவோம். தடலகே..
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நேற்று நள்ளிரவுடன் நிறைவு பெற்றுள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தல் பிரச்சாரங்களின்போது குறிப்பாக வடகிழக்குக்கு வெளியே மக்களிடம் வேண்டப்பட்ட விடயம் யாதெனில் , படித்த , அரசியல் அறிவுள்ள , மோசடி குற்றச்சாட்டுக்கள் அற்ற , மக்களுக்கு சேவை செய்யும் தூய எண்ணத்துடன் போட்டியிடுகின்றவர்களுக்கு வாக்களியுங்கள் என்பதாக இருந்தது.
இந்த வேண்டுதல் வடகிழக்குக்கு வெளியே போட்டியிடும் பிரதானமான நான்கு கூட்டணிகளான பொதுஜன பெரமுக , ஐக்கிய தேசியக் கட்சி , தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியிடமிருந்து ஓங்கி ஒலித்திருந்தது.
மேற்படி கட்சிகள் படிப்பறிவற்ற , ஊழல் மோசடிகளுள்ள , போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுகின்ற , பாதாள உலகக்;கோஷ்டிகளுடன் தொடர்புடையவர்களுக்கு தேர்தலில் சந்தர்ப்பம் வழங்கியுள்ள அதே நேரத்தில் படித்த , அரசியல் தெளிவுள்ள, மோசடிக்குற்றச்சாட்டுக்கள் அற்ற , சமூக சேவகர்களாக தங்களை செயற்பாடுகளுடாக நிரூபித்துக்காட்டியுள்ளவர்கட்கும் தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்கியுள்ளனர்.
இது ஒரு முரண்பாடானதும் முன்முதாரணமானதுமான செய்பாடாக காணப்படுகின்றது. அதாவது அரசியல் கட்சிகள் பொருத்தமற்ற வேட்பாளர்களையே மக்களுக்கு கொடுக்கின்றபோது சிறந்தவர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாக மக்களிடமிருக்கின்றது. இக்குற்றச்சாட்டுக்கு தமிழர் தரப்பு நெடுங்காலமாக முகம்கொடுத்து வருகின்றபோதும் அவர்கள் மாற்றத்தை நோக்கிச் செல்வதற்கு தயாராக இல்லை. ஆனாலும் பெரும்பாண்மைக் கட்சிகள் அந்த மாற்றத்திற்கான வழியை விட்டுள்ளதுடன் தெட்டத்தெளிவான செய்தியொன்றையும் மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.
அந்தச் செய்தி குறிப்பாக இன்றைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடமிருந்தும் வந்துள்ளது. பொருத்தமானவர்களை, படித்தவர்களை, ஊழலற்றவர்களை பாராளுமன்றுக்கு அனுப்புங்கள் என அவர் மக்களிடம் நேரடியான வேண்டுதலை விடுத்துள்ளார். இவ்வேண்டுதலானது சர்வ சாதாரணமானது அல்ல. காரணம் மஹிந்தவுடன் உள்ளவர்களில் பலர் மரபுவழி மோசடிக்காரர்கள்.
எது எவ்வாறாயினும் கட்சிகள் இவ்விடயத்தில் நிதானமாக நடந்து கொண்டுள்ளது. அதாவது மக்களால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்திவந்த உறுப்பினர் ஒருவருக்கு போட்டியிடும் வாய்ப்பை கட்சியொன்று மறுக்குமானால் அவரதும் அவரை தெரிவு செய்தவர்களதும் உரிமைகள் மீறப்படுகின்றது. அதனால்தான் இம்முறை மரபு ரீதியான கள்வர்களுக்கும் இடம்கொடுத்து மாற்றுத்தேர்வுக்கும் இடம்கொடுத்துள்ளனர். எனவே மக்கள் இம்முறை சிறந்தவர்களை தேர்ந்தெடுப்பதை தவறவிட்டுவிட்டு பாராளுமன்றிலுள்ள 225 பேரும் கள்வர்கள், தியவன்னாவவுக்கு அப்படியே குண்டுபோடவேண்டுமென சபிக்கவேண்டாம் என்ற செய்தியும் சொல்லப்பட்டுள்ளது.
அத்துடன் புதிதாக நுழைந்துள்ள வேட்பாளர்கள் நேரடியாகவே மரபு ரீதியான கள்வர்களை ஓதுக்குமாறு தமது பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். அதன் பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற முன்னாள் நிர்வாக சேவை மூத்த அதிகாரி ஒருவர் படிப்பறிவற்றவர்களை நிராகரியுங்கள் என்ற கோஷத்தை தனது துண்டுப்பிரசுரத்தில் நேரடியாகவே முன்வைத்துள்ளார்.
எது எவ்வாறாக இருந்தபோதும் நாம் ஒன்றை இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும் படிப்பறிவற்றவர்களை ஒதுக்கவேண்டும் என்பதற்காக தேர்தலில் போட்டியிடும் தங்களை கற்றறிந்தோர் எனக்குறிபிடுவோரின் வினைத்திறன் தொடர்பில் கேள்வி எழுகின்றது. படிப்பறிவற்றோரை ஒதுக்கவேண்டும் என்பதற்காக வினைத்திறனற்ற , காலத்திற்கு காலம் அரசியல்வாதிகளின் அடியாளாக செயற்படும் உதயகுமார் போன்றவர்களை தேர்ந்தெடுக்கமுடியாது. எனவே ஆற்றல் அனுபவம் இரண்டும் இங்கு பிரதான காரணமாகின்றது.
0 comments :
Post a Comment