த.தே.கூ ல் எத்தனை பேர் பாராளுமன்றம் சென்றாலும் தமிழ் மக்களுக்கு எந்த பயன்பாடும் கிடையாது! கோபால கிருஷ்ணன்
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பாராளுமன்றத்துக்கு எவரை, எத்தனை பேரை அனுப்பினாலும் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் நடந்து விட போவதில்லை என்று வருகின்ற பொது தேர்தலில் அகில இலங்கை தமிழர் மகா சபையின் கப்பல் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்ற முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தேர்தல் நடவடிக்கை குழுவின் தலைவரும், கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் தலைவருமான செங்கதிரோன் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இவரின் தலைமையில் உருவாக்கப்பட்டு உள்ள தேர்தல் நடவடிக்கை குழு காரைதீவில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து கூறியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒட்டுமொத்த செயற்பாடுகளின் மீதும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் அதிருப்தி, சலிப்பு கொண்டிருக்கின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது முற்றாக நம்பிக்கை இழந்தவர்களாக செயற்பாட்டு திறன் மிக்க மாற்று அரசியல் பாதையை வேண்டி நிற்கின்றனர்.
கிழக்கு தமிழர் கூட்டமைப்பு அதன் பங்காளி கட்சிகளில் ஒன்றான அகில இலங்கை தமிழர் மகா சபையின் தலைமை வேட்பாளராக அம்மானை இறக்கி இருப்பதன் மூலம் மிக சரியான புதிய பாதையை அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு காண்பித்து உள்ளது.
எறியும் வித்தை தெரியாதவர்களிடமும், எறியும் வல்லமை இல்லாதவர்களிடமும்தான் இவ்வளவு காலமும் பொல் இருந்து உள்ளது. அதனால்தான் எமது மக்களுக்கு ஏமாற்றம் மிஞ்சி கிடக்கின்றது. அவர்களில் எவரை, எத்தனை பேரை பாராளுமன்றத்துக்கு அனுப்பினாலும் எந்த பயனும் இல்லை.
எறிகின்ற வித்தை தெரிந்த, அதற்கான ஆற்றல் உடையவனிடம்தான் பொல்லை கொடுக்க வேண்டும். அந்த வகையில்தான் இன்றைய கள நிலையில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு பிரதிநிதியாக இருப்பதற்கு மிக பொருத்தமானவர் அம்மான் என்றே பெரும்பாலான தமிழ் மக்கள் விசுவாசிக்கின்றனர்.
அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் நலன்களை பேணி பாதுகாத்து வளர்க்க கூடியவர் அவரேதான் என்று ஒப்பு கொள்கின்றனர். தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ள ராஜபக்ஸக்கள் மத்தியில் கிழக்கை பொறுத்த வரை செல்வாக்கு மிக்க தமிழ் தலைவராகவும் அவரே இருக்கின்றார்.
இவற்றின் காரணமாக அவருக்கான பேராதரவு பேரலை இம்மாவட்டத்தில் பெருகி கொண்டே செல்கின்றது. அம்மானை வெல்ல வைக்க வேண்டும். அம்மானின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்று.
0 comments :
Post a Comment