Monday, June 15, 2020

ரிஎம்விபி யிலிருந்து ஜெயத்தை பிரிந்து செல்லக்கோரும் பரிதாபநிலையில் எதிராளிகள்!

ரிஎம்விபி என்கின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரும் அக்கட்சியின் பிரதித் தலைவருமான ஜெயம், தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் முன்னிலை தளபதிகளாக இருந்தவர். சமூக வலைத்தளங்களில் சிறிதும் பேசப்படாத, ஆனால் வாகரை பெருநிலப்பரப்பில் சந்து பொந்தெங்கும் வாழும் மக்களால் நன்கு அறியப்பட்டவராகவும் அவர்களின் மதிப்புக்குரியவராகவும வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்றால் மிகையாகாது.

ஜெயத்தின் கடந்தகால உழைப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்கு மென்மேலும் வலுச்சேர்த்துள்ளது. அதன் பிரதிபலிப்பு எதிர்வரும் தேர்தலில் எதிராளிகளை தோற்கடிக்குமென பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ரிஎம்விபி யை பலவீனப்படுத்தவேண்டுமாயின் கட்சியிலிருக்கின்ற பலமானவர்களை கட்சியிருந்து உடைக்கவேண்டுமென எதிராளிகள் கருதுகின்றனர். அதன்பொருட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினுள் ஜெயம் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்தியொன்று புனையப்பட்டுள்ளது.

அச்செய்தியில் கட்சியினுள் பிரசாந்தனின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவும், பிள்ளையானின் சகோதரர்களால் ஜெயம் கட்டுப்படுத்தப்படுவதாகவும், அவருக்கு பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட விருப்பிருந்தபோதும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை யாவும் முற்றிலும் புனையப்பட்ட , தோல்வியிலிருந்து தப்புவதற்கான சோடனையாகும். பிரசாந்தன் கட்சியின் பொதுச் செயலாளருக்கான கடமைகளை முன்னெடுக்கின்ற அதேநேரத்தில் கட்சியின் தலைமைச் செயற்பாடுகள் ஜெயத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டு சில காலங்களின் பின்னர் கட்சியின் தலைமைப்பதவியை ஜெயத்தினை பாரமெடுக்குமாறு சந்திரகாந்தன் கோரியிருந்தபோதும், அதனை ஜெயம் நிராகரித்துள்ளார். அத்துடன் ஜெயத்திற்கு பாராளுமன்று செல்லும் நோக்கம் இதுவரை ஏற்பட்டிருக்கவில்லை என்பதும் இம்முறை தேர்தலில் கட்சியின் உறுப்பினர்கள் அல்லாத பொதுமக்களுக்கு வேட்பாளர் பட்டியலில் அதிக இடம்கொடுக்கவேண்டும் என்ற திட்டத்தினை முன்மொழிந்து அதனை செயற்படுத்துவதற்கும் அவர் முற்றுமுழுதாக உழைத்துள்ளார் என்பதை அக்கட்சியின் வேட்பாளர்கள் ஊடாக அறியமுடிகின்றது.

ஜெயம் கட்சியிலிருந்து உடைந்து செல்லவேண்டுமென எதிர்பார்ப்போர் அறிந்திராக மறுபக்கமொன்றுள்ளது. ஜெயம் கட்சியிலிருந்து பிரிந்து செல்வதற்கு மாறாக அவர் மட்டக்களப்பில் பலமான மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியல் கட்சியொன்று உருவாக வேண்டுமென எதிர்பார்க்கின்றார். அதன்பொருட்டு ஆரம்ப நாட்கள் முதல் இன்றுவரை கருணா-பிள்ளையான் ஆகிய இருவரும் பரஸ்பர விட்டுக்கொடுப்புக்களுடன் ஒன்றுணையவேண்டுமென விரும்புகின்றார். அதற்காக அவர் பலமுறை இருவருடனும் பேசியிருக்கின்றார் என்பது பலரும் அறியாத உண்மை. எனவே ஜெயம் கட்சியிலிருந்து பிரிந்து செல்லவேண்டுமென்போரின் கனவு நிறைவேறாது. ஆகையால் அவர்கள் மக்களுக்கு நன்மை பயக்கத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வாக்குகளை பெற்றுக்கொள்ள முன்வரவேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com