தமிழ் அரசியல்வாதி ஒவ்வொருவரும் ஏப்பம் விட்டுள்ள வரிவிலக்கு எவ்வளவு தெரியுமா? மீட்பது எவ்வாறு? பீமன்
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்கள் புதிய எதிர்பார்ப்புக்களுடன் பல்வேறு வாக்குறுதிகளை நம்பியவர்களாக 225 பேரை பாராளுமன்றுக்கு தெரிவு செய்கின்றனர். பாராளுமன்றுக்கு தெரிவாகின்ற உறுப்பினன் ஒவ்வொருவனும் தெரிவான அதே நாளிலிருந்து பாடையில் ஏறும்வரை செல்வச்செழிப்புடன் வாழ்வதற்கான உத்தரவாதம் கிடைக்கப்பெற்றுள்ளது எனப் பூரிப்படைகின்றான்.
1978ம் ஆண்டு ஜேஆர் ஜெயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பு அரசியல்வாதிகள் மக்களை சுரண்டுவதற்கான அத்தனை உத்தரவாதத்தையும் கொடுத்துள்ளது. மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்புரிமைகள் என்ற போலிமுலாத்துடன், அவர்கள் நாட்டின் சட்டத்தினை மீறவும், மற்றவர்களின் உரிமைகளை பறிக்கவும், மக்களுக்கு சேரவேண்டிய வரிப்பணத்தினை தங்கள் பொக்கட்டுக்குள் போட்டுக்கொள்ளவும், இந்த அரசியல் யாப்பு வழிவிட்டுள்ளது.
பாராளுமன்ற உறுபினரராக தெரிவு செய்யப்படும் ஒருவன், பாராளுமன்றினூடாக மக்களுக்கு என்ன சேவையை வழங்கியுள்ளான் என்ற எந்த ஆய்வும் செய்யாது, வாழ்நாள் முழுவதும் மக்கள் அவனை ஓய்வூதியம் வழங்கி பாதுகாக்கவேண்மென்ற பாரிய சுமையினை இந்த அரசியல்யாப்பு மக்கள் மீது சுமத்தியுள்ளது. நிதிநிர்வாகம் செய்வதற்கும் சட்டமியற்றுவதற்குமான பாராளுமன்று மக்களின் சொத்துக்களை தாங்கள் அனுபவிப்தற்கான சட்டங்களை இயற்றி வெகுஜன வாக்கெடுப்பின்றி அதற்கு ஆதரவாக தாங்களே வாக்களித்து மக்களுக்கு நடுவிரல்காட்டியுள்ள முக்கியமான விடயமொன்று தொடர்பில் பேசுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை 225 வாகனங்கள் அரசிற்கு வரிசெலுத்தாது நாட்டினுள் வருகின்றது. இதனால் நாட்டு மக்கள் 5 வருடங்களுக்கு ஒருமுறை சுமார் 700 கோடிகளை இழக்கின்றனர். மக்கள் பிரதிநிதிகள் 700 கோடிகளை ஏப்பம் விட, வரவுசெலவுத்திட்டத்தில் துண்டுவிழும் 700 கோடியை நிரப்புவதற்காக மக்கள் மீது வரிசுமை அதிகரிக்கப்படும். அதாவது நுகர்வுப்பொருட்களின் விலை அதிகரிக்கும். நேரடியாக கூறுவதானால் சம்பந்தன், டக்ளஸ், செல்வம், சித்தார்த்தன், சிறிதரன், சிறிநேசன் என்ற சிலர் சொகுசு வாகனத்தில் பயணிப்பதற்காக சிவக்கொழுந்தும், சின்னலெப்பையும், புஞ்சிபண்டாவும் சீனிக்கும், பால்மாவுக்கும் , பனடோலுக்கும் ஒவ்வொரு ரூபாய் மேலதிகமாக செலுத்தவேண்டும்.
இந்த அவலநிலைக்கான மாற்றம் அரசியல் யாப்பினூடாக கொண்டுவரப்படுகின்றதோ இல்லையோ மக்கள் மாற்றத்தினை ஏற்படுத்தவேண்டும். இலங்கை வரலாற்றில் சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா தொடக்கம் வியாளேந்திரன் வரை பாராளுமன்றை பிரதிநிதித்துவம் செய்திருக்கின்றார்கள். இவர்களுக்கு சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளுடன் மக்களின் வரிப்பணத்தில் சுமார் இரண்டரை லட்சம் ரூபா மாதாந்தம் வழங்கப்படுகின்றது. இதற்கு அப்பால் ஒவ்வொரு முறை பாராளுமன்று தெரிவு செய்யப்படும்போதும் சுமார் 3 கோடி ரூபா வரிச்சலுகையை பெறுகின்றார்கள். ஆனால் இவர்களை தெரிவு செய்த மக்கள் பெற்றுக்கொண்டது என்ன?P
பாராளுமன்றுக்கு தெரிவான எமது முதலைகள் நூற்றுக்கணக்கான கோடி ரூபாக்களை விழுங்கிவிட்டு மீண்டும்; அதே பழையே கோஷங்களுடன் அடுத்தசுற்றுக் கொள்ளைக்காக வெள்ளை வேட்டிகளுடன் மக்களின் வாசற்படி ஏறத்தொடங்கியுள்ளனர். ஆனால் மக்கள் இவர்களை பாராளுமன்றுக்கு அனுப்பியதனால் அடைந்தது என்ன? அவர்கள் விழுங்கியது எத்தனை கோடிகள்? என்ற கேள்விகளை கேட்க மக்கள் மறுக்கின்றனர்.
எனவே அவர்கள் விழுங்கியவற்றை மீட்கவேண்டிய காலகட்டத்திற்கு மக்கள் இப்போது வந்துள்ளனர். மக்கள் ஒன்று திரண்டால் அது செய்யமுடியாது காரியமும் அல்ல. அதனை எவ்வாறு செய்வது? ஏங்கிருந்து ஆரம்பிப்பது? ஏன்ற கேள்வி தோன்றலாம்.
கடந்த 5 பாராளுமன்றுகளை எடுத்துக்கொள்வோமானால், தமிழ் மக்கள் சுமார் 100 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளனர். அவர்களில் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, டக்ளஸ் தேவானந்தா, செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் 5 தடவைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமாக இணைந்து சுமார் 100 வரிச்சலுகை வாகனங்களை பெற்றுள்ளனர். இவற்றின் மொத்தப்பெறுமதி 300 கோடிகளாகும். ஆனால் இந்த வாகனங்களால் மக்களுக்கு கிடைத்த சேவை என்ன? எனவே அவை மீட்கப்படவேண்டும். ஆகக்குறைந்தது அவர்கள் பெற்றுக்கொண்ட வரிச்சலுகையில் மூன்றில் ஒரு பங்காவது மக்களுக்கு வழங்கப்படவேண்டும். அந்த வகையில் 100 கோடி ரூபா இந்த முதலைகளிடமிருந்து பறிக்கப்படவேண்டும்.
பறிக்கப்படும் பணத்தை கொண்டு உயரிய கட்டுப்பாடுகள் மற்றும் சீரான ஓழுக்கவிதிகளுடன் கூடிய தொழில் மேம்பாட்டு நிதியம் ஒன்று வடகிழக்கில் உருவாக்கப்படவேண்டும். அதனூடாக வடகிழக்கெங்கும் தொழிற்சாலைகள் , பண்ணைகள் நிறுவப்பட்டு தொழிலற்றோருக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கும் திட்டமொன்று உடனடியாக உருவாக்கப்படவேண்டும். நிதி மற்றும் நிறுவனங்களை பராமரிப்பதற்காக உழலற்ற கட்டமைப்பொன்று உருவாக்கப்படவேண்டும். அதன் வெளிப்படைத்தன்மையை பேணும்பொருட்டும் ஆலோசனைகளைப் பெறும்பொருட்டும் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் பிரதிநிதிகள் இணைத்துக்கொள்ளப்படவேண்டும்.
இவ்வாறானதோர் திட்டத்திற்கு அடித்தளம் வடகிழக்கிலிருந்து இடப்படும்பட்சத்தில் அந்நிதியத்திற்கு தாரளமான புலம்பெயர் உறவுகள் அதன் செயற்திறனை அவதானித்து ஒரே தடவையில் உதவி புரிவர். திட்டம் செயற்படுத்தப்படின் வடகிழக்கில் வலுவான உழைக்கும் வர்க்கத்தை உருவாக்கமுடியும். நேரடியாக கூறப்போனால் வாழ்நாள்முழுவதும் கையேந்தி வாழப்பழகியுள்ள மக்களை உழைப்பாளிகளாக மாற்றி கௌரவானதோர் வாழ்வு வாழ வழிவிடமுடியும். இதற்கு மேலதிக நிதி தேவைப்படின் மக்களின் பணத்தை ஏப்பம் விட்டுள்ள புலம்பெயர் புலிப்பினாமிகளின் கதவுகளையும் தட்டமுடியும்.
வாக்குகளை அபகரித்துக்கொண்டு மக்களுக்கு நடுவிரலை காட்டிவிட்டு நகர்ப்புறங்களில் சொகுசுவாகனங்களில் வாழ்ந்த அதிகார வர்க்கத்தினர் தற்போது பழைய குருடி கதவ திறடி என வேட்டி சால்வைகளுடன் மக்களின் வாசற்படிகளை மிதிக்கத்தொடங்கியுள்ளனர். எனவே இந்த ஈனப்பிறவிகளிடம் தாங்கள் பெற்றுக்கொண்ட வரிச்சலுகைப் பணத்தில் மூன்றில் ஒரு பகுதியை மேற்படி திட்டத்திற்கு பங்களிப்புச் செய்யுமாறு வலியுறுத்துவதற்கு தகுந்த தருணமாக நான் இத்தேர்தல் காலத்தை கண்கின்றேன்.
ஆகையால் கிராமங்கள்தோறுமிருக்கின்ற குறிப்பாக புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்து சமூக சேவை செய்கின்றோம் என பணம்பெற்று முகநூலில் விளம்பரம் தேடிக்கொண்டிருக்கின்ற குழுக்கள் , தங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகளை களைந்து மேற்படி திட்டத்திற்காக ஒன்றிணைந்து சகல அரசியல்வாதிகளிடமிருந்தும் அவர்கள் பெற்றுக்கொண்டுள்ள வரிச்சலுகைப்பணத்தில் மூன்றிலொரு பகுதியை பெற்றுக்கொள்வதற்கு அணிதிரளவேண்டும். இவ்விடயத்தில் மக்கள் போர்க்குணத்தை வெளிப்படுத்தி , மக்கள் புரட்சி உருவாக வேண்டும். அவ்வாறு பணத்தினை தரமறுப்பவர்கள் அம்பலப்படுத்தப்படுவதுடன், புதிய வேட்பாளர்களாக வந்திருக்கின்றவர்களுடன் , அவர்கள் வெல்லும் பட்சத்தில் வாகனவரிச்சலுகையினை பெறுவார்களாயின் மூன்றிலொன்றை மக்களின் தொழில் மேம்பாட்டு நிதியத்திற்கு வழங்குவோமென்ற ஒப்பந்தத்தை செய்துகொள்ள முன்னவருகின்றவர்களை இத்தேர்தலில் வெற்றிபெறவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
இத்திட்டம் இன்றியமையாதது என்று நினைக்கின்றவர்கள் இதனை வாசித்ததுடன் நின்றுவிடாது இம்முன்மொழிவை மக்களுக்கு கொண்டு செல்வதுடன் இது தொடர்பான ஆரம்ப வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவேண்டும். எனவே இவ்விடயம் தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டும் பொருட்டு இக்கட்டுரையை தங்கள் சமூகவலைப்பின்னல்களில் பகிர்ந்து விவாதங்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகின்றேன். நன்றி.
வரிச்சலுகை பெற்றுக்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களதும் அவர்கள் ஒவ்வொருவரும் எத்தனை வாகனங்களை பெற்றுக்கொண்டுள்ளார்கள் என்ற அண்ணளவான பட்டியலை இணைக்கின்றேன். இதை பகிர்ந்துதவுங்கள்..
0 comments :
Post a Comment