Wednesday, June 3, 2020

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொதுப் போக்குவரத்து சேவை வழமைக்குத் திரும்புகிறது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொதுப் போக்குவரத்து சேவையை வழமை போன்று முன்னெடுப்பதற்கு போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.

அடுத்துவரும் சில தினங்களில் மக்களின் செயற்பாடுகள் மற்றும் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பில் சுகாதாரப் பிரிவு வழங்கும் ஆலோசனைகளை கருத்திற் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை வழமைக்கு கொண்டுவர போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு உட்பட்ட 5,300 பஸ்களும் தனியார் துறையைச் சேர்ந்த 23,000 பஸ்களும் இருந்தபோதிலும் தற்போதைய நிலைமையில் பயணிகளின் போக்குவரத்துக்கு இவை போதுமானதல்ல என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ரயில் மற்றும் பஸ் சேவைகள் உரிய முறைப்படி இடம்பெறும். இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் காரணமாக ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் போக்குவரத்து கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சாதாரண பொதுப் போக்குவரத்துச் சேவையை முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. எதிர்காலத்தில் தற்போதுள்ள தனியார் மற்றும் அரச பஸ் போக்குவரத்துச் சேவையை உயர்ந்தபட்ச அளவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தவிர, பாடசாலை போக்குவரத்து பஸ்கள் சுற்றுலா மற்றும் யாத்திரிகைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பஸ்கள் மற்றும் பதிவு செய்யும் ஆவணத்தில் சேர்க்கப்பட்டுள்ள பஸ்கள் தற்காலிகமாக பிரயாணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும். இந்த பஸ்களை தற்காலிகமாக பதிவு செய்யும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பமாகும்.

ரயிலிலும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகள் அனுமதிக்கப்படுவதால், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் போது அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் பயணங்களை மட்டுப்படுத்துமாறு அமைச்சர் மகிந்த அமரவீர பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com