சைவத் தமிழ்ச் சங்கிலியனும் சட்டத் தொடர்ச்சியும். மறவன்புலவு க. சச்சிதானந்தன்
இலங்கையில் மூவர் அமரும் நீதிமன்றங்கள் அமைவது மிகக் குறைவு. ஆங்கிலத்தில் Trial-at-Bar எனச் சொல்வார்கள்.
சங்கிலி மன்னனின் கடைசிக் காலங்களை 1976ஆம் ஆண்டு கொழும்பில் மூவர் நீதிமன்றத்தின் முன் பேசினர். சூடானில் நடந்தவை, சிம்பாப்வேயில் நடந்தவை, அவற்றுக்கும் சங்கிலி மன்னனுக்கும் என்ன தொடர்பு?ஆனாலும் நீதிமன்றத்தில் பேசினர்.
குலேந்திரன், மகேந்திரன் அல்லது குலோதரன், மகோதரன் என்ற யாழ்ப்பாண (நாகநாடு) மன்னர்களை மகாவமிசம் கூறும்.
முதலாம் கயவாகுவை மணம் முடித்தவள் யாழ்ப்பாண மன்னர் மகள் என மகாவமிசம் கூறும்.
பூம்புகார்ச் சோழ மன்னன் கிள்ளிவளவன் மணம் முடித்ததும் யாழ்ப்பாண மன்னனின் மகள் என்று மணிமேகலை கூறும்.
ஓர் அரசனிடமிருந்து மற்றோர் அரசனுக்கு ஆட்சி கைமாறும். அரசன் இறந்தால் இளவரசன் / இளவரசி அரசராகுவர். அரசன் போரில் தோற்றால் வென்ற அரசன் அரசனாவான். வாரிசு அரசன் ஆகலாம். போரில் வென்றவன் அரசன் ஆகலாம். அங்கே இறைமைத் தொடர்ச்சி, ஆட்சித் தொடர்ச்சி, சட்டத் தொடர்ச்சி.
மகாவம்சம் கூறும் மகோதரனுக்கு முன்பும் பல அரசர். பின்பும் பல அரசர். இடை இடையே குறுகிய காலங்கள், சேரர் சோழர் பாண்டியர் எனத் தமிழரே யாழ்ப்பாணத்தைத் தொடர்ச்சியாக ஆண்டனர். போரில் வென்றதால் ஆண்டனர்.
நீண்ட ஆட்சியாக யாழ்ப்பாணத் தமிழ் அரசர்கள் ஆண்டனர். இடையே கலிங்க மாகன் ஒருவன், சாவகச் சந்திரபானு மற்றவன், யாழ்ப்பாணத்தை வீழ்த்தித் தமது ஆட்சிக்குள் கொண்டுவந்தனர். இவர்கள் இருவருமே தமிழர் அல்லாத அரசர்.
வரலாறுக்கு முற்பட்ட காலங்களிலிருந்து தொடர்ச்சியாக யாழ்ப்பாண அரசைத் தமிழரான வாரிசு அரசர்கள், போரில் வென்ற அரசர்கள் ஆண்டனர்.
இடையில் திடீரென்று முளைத்த எவரும் அரசர் ஆகவில்லை. கலிங்க மாகனையும் சாவகச் சந்திரபானுவையும் தவிர அன்னியர் ஆட்சியில் யாழ்ப்பாணம் ஒருபோதும் இருந்ததில்லை.
முடியாட்சிக் காலத்தில் இறைமைத் தொடர்ச்சி, ஆட்சித் தொடர்ச்சி, சட்டத் தொடர்ச்சி என யாழ்ப்பாணத்தில் பல நூற்றாண்டுகளுக்கு ஊடாக நிலையான ஆட்சி. தமிழரான செண்பகப் பெருமாளின் 16 ஆண்டு கால ஆட்சியைச் சிங்கள ஆட்சி எனலாமா?
சங்கிலியனைப் போர்த்துக்கேயர் வீழ்த்தும் நாளில் தமிழரின் நீண்ட தொடரச்சியான முடியாட்சி அற்றது. சைவத் தமிழச் சங்கிலி மன்னனிடம் இருந்த தமிழர் இறைமை, கத்தோலிக்கப் போர்த்துக்கேய மன்னனைச் சென்றடைந்தது. போத்துக்கேயர் தாம் பெற்ற இறைமையை, ஆட்சி உரிமையை கிறித்தவ ஒல்லாந்த மன்னரிடம் கையளித்தனர். ஒல்லாந்தரும் அவற்றைக் கிறித்தவ ஆங்கிலேய மன்னரிடம் கையளித்தனர்.
ஆங்கிலேயர் விட்டுச் சென்ற பொழுது சோல்பரி அரசியலமைப்புக் கொண்ட இலங்கை, விடுதலை பெற்று ஆங்கிலேய மன்னரின் கீழ் குடியாட்சி (Dominion) நாடாகியது.
இலங்கையின் உச்ச நீதிமன்றத்தை நாடுவோர், அதன் தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்து அரசவை நீதிமன்றத்துக்கு விண்ணப்பிக்கலாம், தீர்ப்பைக் கோரலாம். 1948-1972 ஆக 24ஆண்டுகளாக இந்த நிலை.
1795 தொடக்கம் 22 மே1972 வரை சங்கிலிய மன்னன் கையளித்த சைவத் தமிழர் இறைமை ஆங்கிலேய அரசியிடம்.
இலங்கை நாடாளுமன்றமே அரசியலமைப்பைத் திருத்தாமல், சட்டத் தொடர்ச்சி இன்றி, புதிய அரசியலமைப்பு யாக்க அவையை, கொழும்பு ரோயல் கல்லூரி மண்டபத்தில், நவரங்கல மண்டபத்தில் 1971 ஸ்ரீமாவோ ஆட்சியின் கீழ் கூட்டிய பொழுது சங்கிலியன் கையளித்த தமிழரின் இறைமையை யார் பயன்படுத்துவது? என்ற வினா.
புதிய அரசியல் அமைப்பு யாக்க அவையில் தமிழர் பங்கு பற்றாததால் சைவத் தமிழச் சங்கிலியன் கையளித்த சைவத் தமிழரின் இறைமை கத்தோலிக்கப் போர்த்துக்கேயர், கிறித்தவ ஒல்லாந்தர், கிறித்தவ ஆங்கிலேயர், சோல்பரி அரசியலமைப்பு எனச் சட்டத்தொடர்ச்சியாக 1972 மே 22ஆம் நாள் மீண்டும் தமிழரிடம் வந்தது.
படைப் புரட்சி வழியாகச் சூடான் நாட்டில் சட்டத் தொடர்ச்சியற்ற ஆட்சியை அமைத்தார்கள்.
தமக்குத் தாமே விடுதலையை (Unilateral Declaration of Indrpendence) அறிவித்துச் சட்டத் தொடர்ச்சியற்ற ஆட்சியை சிம்பாப்வேயில் வெள்ளையர் அமைத்தனர்.
இலங்கையில் நாடாளுமன்றத்துக்கு அப்பால், சோல்பரி அரசியலமைப்புக்கு அப்பால், நவரங்கல மண்டபத்தில் கூடி, நாடாளுமன்றத்துக்கு வெளியே கூடி, சட்டத் தொடர்ச்சியற்ற ஆட்சியைச் சிங்களவர், புத்த சமயத்துக்கு முன்னுரிமையுடன் அமைத்தனர்.
சைவத் தமிழ் மன்னன் சங்கிலியன் கையளித்த தமிழரின் இறைமையை, ஆட்சி உரிமையாக்கப் புதிய அரசியலமைப்பு இடம் தராது. சட்டத் தொடர்ச்சியற்ற அரசியலமைப்பு இடம் தராது எனக் கொழும்பில், மூவர் நீதிமன்றத்தின் முன் 1976இல் இராணியின் வழக்குரைஞர், சட்டத்தரணி திரு மு. திருச்செல்வம் அவர்கள் வாதிட்டார்.
தமிழரின் ஆட்சியின் எதிர்காலம் சைவத் தமிழ்ச் சங்கிலியன் விட்டுச் சென்ற சட்டத் தொடர்ச்சிப் பங்களிப்பு இன்றி இல்லை, எனத் திரு மு. திருச்செல்வம் அவர்கள் வாதிட்டார்.
அவருடைய வாதத்துக்கு அமையச் சங்கிலியன் கையளித்த இறைமையைத் தமிழரின் ஒப்புதலின்றி ஆட்சியுரிமை ஆக்க எவராலும் முடியாது. ஈழத் தமிழரின் இறைமை, போரில் தமிழரிடம் இருந்து பறிபோன நாள், அதன் நினைவு நாள், அதன் 401ஆண்டு ஆண்டு நினைவு நாள் இன்று. (10 June)
கலியுகம் 4720, சகாப்தம் 1541, திருவள்ளுவராண்டு 1650, விபவ ஆண்டு, 27 வைகாசி புதன்கிழமை (05.06.1619) தேய்பிறை எட்டாம் நாள் அட்டமி பூரட்டாதி நட்சத்திரம் அன்று சைவத்தமிழ் அரசு வீழ்ந்தது. வீழ்த்தியவர்கள் மேலைநாட்டுக் கத்தோலிக்கப் போர்த்துக்கேயர்.
கலியுகம் 5121, சகாப்தம் 1942, திருவள்ளுவராண்டு 2051, சார்வரி ஆண்டு, 30, வைகாசி சனிக்கிழமை (13.06.2020) தேய்பிறை எட்டாம் நாள் அட்டமி பூரட்டாதி நட்சத்திரம் அன்று சைவத்தமிழ் அரசு வீழ்ந்து 401ஆவது ஆண்டு. அதுவே சங்கிலியன் நினைவு நாள்.
0 comments :
Post a Comment