Friday, May 1, 2020

Lock Down கக்கிய வரலாற்று உண்மை.. தொழிலாளியின் வாக்குமூலம்..

உலக இயக்கத்தின் வேகத்துடன் பம்பரமாய் சுழன்றுகொண்டிருந்த மனிதன் lock down காரணமாக தேங்கிக்கிடக்கின்றான். மனைவி பிள்ளைகளுடன் பேசுவதற்கு கூட நேரமின்றி ஓடி உழைத்துக்கொண்டிருந்த உழைப்பாளிகள் இன்று அசைய முடியாதவர்களாக முடக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு ஒட்டமும் நடையுமாகவே சந்தித்துப்பழகிய சகோதரர் ஒருவரை நேற்றுக்கண்டேன். அவருக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை. தமிழ் என்ற ஒருகாரணத்திற்காக மட்டும் கண்ட இடத்தில் ஒரு நிமிடம் நின்று சுகம் விசாரித்துவிட்டு கடிகாரத்தை காட்டிவிட்டு வேலைக்கு நேரமாகின்றது என்று பறந்து விடுவார்.

தற்போதைய சூழ்நிலையில் அவருக்கு நிறையவே பேச நேற்று நேரமிருந்து.

கண்டவுடன் வழமைபோல் அண்ண எப்படி இருக்கிறயள் என்றார்..

„ஏதோ இருக்கிறம்" என்று விட்டு „ஊர்ப்பாடுகள் என்னவாம்" என்ற வழமையான கேள்வியை அவிட்டுவிட்டேன்..

கோதாரி பிடித்த சிங்களவன் தமிழனை அழிக்கப்போறான், கொரோணா பிடித்த ஆமிக்காரனுகளை வடகிழக்கு எங்கும் கொண்டுபோய் தனிமைப்படுத்தப்போறானுகளாம் என்று ஆள் பல்லை நறும்பினார்.

என்னால் எந்த பதிலையும் கொடுக்க முடியவில்லை. ஏன் இப்படிச் சொல்றயள்? என்ன பிரச்சினை என்றேன்..

கோப்பாய், வவுனியா என்று வடகிழக்கெங்கும் கொண்டு கொரோணாவை பரப்பப்போறானுகள். சனம் றோட்டிலை இறங்கி சத்தம்போடுதுகள் என்று தனது உள்ளக்கிடக்கைகளை கொட்டத்தொடங்கியவர் புலிகள் தனது உழைப்பை எவ்வாறு உறுஞ்சினார்கள் என இறுதியாக விபரித்ததை இன்று மே நாள் பதிவாகவிடுகின்றேன்.

இது ஓர் தொழிலாளியின் வாக்குமூலம்..

நாங்கள் இங்கு வந்து உழைக்க தொடங்கின பிறகு இலங்கையிலை போராட்டமும் சூடு பிடிக்க தொடங்கிற்று. போராட்டத்தை முடித்து வைக்கிறதென்றால் மக்களிட பங்களிப்பு அவசியம் என்று சொன்னாங்கள். நாங்களும் அதை ஏற்றுக்கொண்டம், உதவினம், மாதம் 100 பிராங்குளை செலுத்திவந்தன். ஒரு கட்டத்திலை 25000 பிராங் வங்கிக்கடன் எடுத்துக்கேட்டாங்கள், அதையும் எடுத்துக்கொடுத்தன். ஆனால் அந்தக்கடனை அவையள்தான் கட்டினவை.

2009 ம் ஆண்டு என்னுடைய மனைவியின் தகப்பனாரை பிடித்துக்கொண்டு அடைத்து வைத்திட்டாங்கள். அவருக்கு வயது 80. ஏன் இந்த வயதிலை அவரை கொண்டு போட்டாங்கள் என்று விசாரித்தால் , அவருடைய மகன், என்ர மனைவியின்ர தமயனை கட்டாயப்பயிற்சிக்கு பிடித்துக்கொண்டு போயிட்டாங்கள். இரண்டு பிள்ளைகளின் தகப்பனான அவர் முன்னணி காவலரனில் விடப்பட்டிருந்தபோது தப்பி ஓடிட்டார். அவரை கொண்டுவா என்று கேட்டுத்தான் 80 வயது கிழடை கொண்டு போயிருக்கின்றார்கள்.

சுவிஸ் பொறுப்பாளராகவிருந்த குலத்திடம் சென்று எனது மாமனாரை விடுவித்து தருமாறு கோரினேன். அவர் சூரிச் காரியாலயத்தில் சென்று பேசுமாறு கூறினார். சூரிச் நகரத்தில் ஜோசப் ஸ்றீட் ல் இருந்த புலிகளின் காரியாலயத்திற்கு சென்றேன். அங்கு லோகன் என்பவர் இருந்தார். மானாரை விடுவித்துதருமாறு கோரினேன். 10000 சுவிஸ் பிராங்குகள் தந்தால்தான் விடுவிக்க முடியும் என்று கூறினார். 80 களின் இறுதிப்பகுதியில் தொடங்கி இன்றுவரை மாதாந்தம் 100 பிரங்குகள் செலுத்திவருவதையும் மேலதிகமாகவும் பல உதவிகள் செய்துள்ளதையும் கூறினேன். அவர் இரங்கவில்லை. மாமன் வேண்டுமென்றால் வை பத்தாயிரம் பிராங் என்றார்.

வீடுதிரும்பி மனைவியிடம் தயக்கத்துடன் 10000 பிராங் கேட்கிறாங்கள் கொடுத்திட்டு எடுப்போம் என்றேன். இருங்கள் வாறேன் என்று வெளிக்கிட்டுச்சென்றார். நான் நினைத்தேன் ஏதோ வங்கியில் சேமித்து வைத்திருக்கின்றார் அதை எடுக்கப்போகின்றார் என. ஆனால் அவர் நேரே பொஸிஸ் நிலையத்திற்கு சென்றிருக்கின்றார். அங்கே சென்று ஐயோ என்ர அப்பாவை கொல்லப்போறானுகள் காப்பாற்றுங்கோ என்று சத்தம்போட்டு கத்தியிருக்கின்றார். பொலிஸ் நேரே புலிகளின் காரியாலயம் சென்றுள்ளது. உடனடியாக அவர் விடுவிக்கப்படவேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்கள். பொலிஸ் சூரிச்சிலுள்ள புலிக்காரியாலயத்திற்கு சென்று இந்த உத்தரவை இட்டது சுவிஸ் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு. மாமனார் இலங்கை நேரப்படி இரவு 9 மணிக்கு விடுதலை செய்யப்பட்டுவிட்டார்.

மறுநாள் காலை விடியும் வரை எனக்கு நித்திரை வரவில்லை. விடிந்ததும் பல்லை விளக்கிக்கொண்டு நேரே வங்கிக்கு சென்றேன். புலிகளுக்கு மாதாந்தம் 100 பிராங் வழங்குவதற்கு கொடுத்திருந்த கட்டளையை (ஸ்ரேண்டிங் ஒடர்) வாபஸ் பெற்றேன்.

அதன் பின்னர் புலிகள் பலதடவைகளில் வந்து வீட்டு கோலிங் பெல்லை அழுத்தினார்கள். ஆனால் எனது கதவு இன்றுவரை அவர்களுக்கு மூடியிருக்கின்றது. நாங்கள் வியர்வை சிந்தி உழைத்து கொடுத்த பணத்தில் இன்று புலிகளின் பலர் இந்த நாட்டிலே காணி , வீடு , சொத்து என சுகபோகம் அனுபவிக்கின்றார்கள்..


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com