Saturday, May 30, 2020

சிரங்கை சுரண்டாது மருந்தை தேடுகின்றார் வைத்தியர் அசோகன். பீமன்.

தமிழ் மக்களின் வாழ்வியலும் அரசியலும் பிச்சைக்காரன் கைப்புண் என்ற நிலைக்குவந்து தசாப்தங்கள் கடந்துவிட்டது. அஹிம்சைப்போராட்டமென்றும் ஆயுதப்போராட்டமென்றும் தமிழ் மக்களிடம் ஆணையைப்பெற்றவர்கள் யாவரும் தமிழ் மக்களின் அவலங்களை சிரங்காக வைத்துக்கொண்டு அதை சொறிந்து இன்பம் காண்பவர்களாகவே இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டுமக்கள் அடுத்த 5 வருடங்களுக்கு சட்டவாக்க சபைக்கு 225 பேரை அனுப்புவதற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றனர். அஹிம்சைப்போராட்டத்தில் தோற்றவர்கள் என்று சொல்லப்படுகின்ற தமிழரசுக் கட்சியினரும் ஆயுதப்போராட்டத்தில் தோற்றவர்கள் என்று சொல்லப்படுகின்ற முன்னாள் ஆயுதக்குழுக்களான புளொட் , ரெலோ இணைந்த தேர்தல்கூட்டான தமிழ் தேசியக் கூட்டமைப்பை இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி எதிர்கொள்கின்றது.

இலங்கையில் காணப்படுகின்ற அரசியல் கட்சிகளில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொடர்பாக நிறையவே பேசலாம், பேசவும் படுகின்றது. உலக நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டு, தடை செய்யப்பட்டுள்ள, நாகரிக சமூகத்தினால் கதவுகள் இழுத்துமூடப்பட்டுள்ள அமைப்பொன்றிலிருந்து பிரிந்த குழுவொன்றினால் ஆரம்பிக்கப்பட்டதுதான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.

இக்கட்சியின் ஆரம்ப நாட்கள் அருவருக்கத்தக்கவை. கொலை, கொள்ளை, கப்பம் என மனிதகுலம் வெறுக்கின்ற அத்தனை செயற்படுகளையும் தமது தாய்க்கட்சிபோன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் தொடர்ந்துகொண்டே வந்தது. ஆனாலும் அக்கட்சியின் தலைமைக்கு ஜனநாயக வழிமுறைகளை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அள்ளிவழங்கப்பட்டதுடன், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக வழிமுறைகள் தொடர்பில் கற்றுக்கொள்வதற்கும் அவர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள்.

யாழ் மிதவாத தலைமைகளின் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகளிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளவேண்டுமென்ற கிழக்கு மக்களின் அரசியல் அவா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மீது:
கட்சியை மக்கள் மயப்படுத்து!
மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளி!
கட்சியின் உட்கட்டமைப்பை சீர்செய்!
என்ற பாரிய அழுத்தங்களை கொடுத்தது.

மக்களின் எதிர்பார்ப்புக்களை நூறுவீதம் அக்கட்சி நிறைவேற்றியிருக்காவிட்டாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேட்டுக்குடி அரசியல் செயற்பாட்டில் எள்ளளவும் ஏற்படாத மாற்றம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைத்தவிர மட்டக்களப்பு மக்களுக்கு மாற்றுத்தேர்வு இல்லை என்ற நிலைக்கு கொண்டுவந்துள்ளது. இதன் பலாபலன்களை கடந்த உள்ளுராட்சி மன்றத்தேர்தல்களில் கண்டிருந்தபோதும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்பட்டியல், கட்சி மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளது என்ற திருப்தியை தருகின்றது.

இத்தேர்தலில் மக்கள் எதிர்பார்த்ததுபோல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் , கிழக்குவாழ் புத்திஜீவிகள் மற்றும் பொதுநோக்கு கொண்டோர் போட்டியிடுகின்றனர். அப்பட்டியலில் வைத்தியர் அசோகன் இடம்பெறுகின்றார். அஷோகன் அவர்களிடம் பேசியதில் அவர் பிச்சைக்காரன் கைப்புண் அரசியலைக்கைவிட்டு புண்ணுக்கு மருந்தைக்தேடும் முயற்சியில் ஈடுபடுவார் என்பது தெளிவாகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்தியத்துறையில் காணப்படும் குறைபாடுகளை இனம்கண்டுள்ள அவர் அதற்கான தீர்வுகளை தெளிவாக குறிப்பிடுகின்றார். கிழக்கிலுள்ள சகோதர இனமொன்று அரசியல்பலத்தை பயன்படுத்தி வைத்திய மற்றும் சுகாதாரதுறைகளின் அரசவளங்களை தமது சமூகம்சார்ந்து எவ்வாறு திசைதிருப்பியுள்ளார்கள் என்பதை அடையாளம் காட்டும் அவர், அவற்றைவைத்து தமிழ் மக்களை உணர்சியூட்டி வாக்கு வசூலிக்கும் வங்குரோத்துத்தனத்தை நிராகரித்து , அரசியல்பலம் கிடைப்பின் எவ்வாறு அந்த வளங்கள் தமிழ் மக்களுக்கும் கிடைக்கப்பண்ணலாம் என்ற நாகரிகமான பொறிமுறை தொடர்பில் தெளிவுறுத்துகின்றார்.

வைத்தியதுறையில் மாத்திரமின்றி மாவட்டத்தின் கல்வி, உள்கட்டுமானம், அரசநிர்வாக கட்டமைப்பு, உள்ளுராட்சி அலுவல்கள், மீன்பிடி , விவசாயம் , கலாச்சாரம் , பொதுவாழ்வியல் என்ற சகல துறைகளிலுமுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான தனது செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என்பதை தெட்டத்தெளிவாக எடுத்துரைக்கும் வைத்தியர் அஷோகன் தனது அரசியல் பிரவேசமானது செல்வம் சேர்ப்பதற்கானதன்று என்கின்றார்.

வைத்தியதுறையில் நீண்டசேவை செய்துள்ள அவருக்கு , அரசியலில் நுழைந்து செல்வம் தேடவேண்டியில்லை என்பதை மாவட்டத்திலுள்ள சமூகநோக்கர்கள் பலரும் நம்புகின்றனர். அரசியல் பிரவேசம் செல்வம் சேர்ப்பதற்கானது அல்ல என்பதற்கு ஆதாரமாக அவர் ஒரு புதிய, எடுத்துக்காட்டான செயலை முன்னெடுக்கவுள்ளதாக உறுதிகூறுகின்றார். தான் பாராளுமன்று தெரிவுசெய்யப்படும் பட்சத்தில் கிடைக்கக்கூடிய வரிச்சலுகை வாகனத்தின் பணத்தினை கொண்டு அறக்கட்டளையொன்றை நிறுவி அதனூடாக மாவட்த்தில் பாரிய கூட்டுறவுப்பண்ணையொன்றை கட்டியெழுப்பவுள்ளதாகவும் அப்பண்ணையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரமற்றுள்ளோருக்கு நிரந்தர தொழில்வாய்பினை வழங்கவுள்ளதாகவும் கூறுகின்றார்.

இவ்வாறு பல்வேறுபட்ட தொலைநோக்கு திட்டங்களுடன் களமிறங்கும் வைத்தியர் அசோகன் போன்றோரது திட்டங்களுக்கு மக்கள் வலுச்சேர்க்கப்போகின்றார்களா? அன்றில் தொடர்ந்து எமாற்றுப்பேர்வழிகளின் பசப்பு வார்த்தைகளை நம்பி மேலும் 5 வருடங்களுக்கு தமது தலைவிதியை தமிழ் தேசிய மாயையிடம் அடகு வைக்கப்போகின்றார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com