Monday, April 27, 2020

பாராளுமன்றை கூட்டுவீர்! எதிர்கட்சிகள் கூட்டுக்கோரிக்கை..

நாட்டில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமைகளுக்கு மத்தியில் அவசர ஆட்சி விடயங்கள் குறித்து கலந்துரையாட கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை மீள கூட்ட வேண்டும் என எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, மனோ கணேசன், இரா.சம்பந்தன், ரிசாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த யோசனையை எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் இதய சுத்தியோடு முன்வைப்பதமாகவும் அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை எனவும் அவர்கள் தங்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் முழுமையாக பிரச்சார நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக அமைய வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் கடந்த சில நாட்களாக எடுத்த நடவடிக்கை பாராட்டதக்க வகையில் காணப்பட்டாலும் தற்போதைய நிலையில் அந்த நம்பிக்கை தளர்ந்து போயுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சூழலில் பாராளுமன்றத்தை மீள கூட்டி விடயங்களை ஆராய்வதே சிறந்தது எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுவர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com