Thursday, April 16, 2020

நாளாந்த பொருளாதார செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடல் நடைபெற்றது.

தேசிய பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நாளாந்த பொருளாதார செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்கக் கூடிய வாய்ப்புகளை கண்டறியும் நோக்குடன் மாகாண மட்டத்தில் தகவல்களை கேட்டறிவதற்கான விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

நாட்டின் அனைத்து மாகான வைத்திய பணிப்பாளர்கள் உள்ளிட்ட சுகாதார துறை அதிகாரிகள் தமது மாகாணங்களின் தற்போதைய நிலைமை குறித்து இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கினர்.

தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு கைத்தொழில் நிறுவனங்கள், விவசாய மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னர் போன்று முன்னெடுப்பதற்கு தேவையான பணிப்புரைகளை சுகாதார பணிப்பாளரின் ஊடாக உடனடியாக முன்வைக்குமாறு ஜனாதிபதி அவர்கள் மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

மாகாண மட்டத்தில் கிடைக்கப்பெறும் சுகாதார பரிந்துரைகளை கருத்திற் கொண்டு தற்போதைய கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து தீர்மானிக்கப்படும்.

நாளாந்த ஊதியம் பெறுவோரின் வாழ்வாதாரம் குறித்து விசேட கவனம் செலுத்துவதும் முக்கிய நோக்கமாகும்.

அந்தந்த மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள், அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் மற்றும் தற்போது செயற்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. நாளாந்தம் இடம்பெறும் நோயாளிகளை கண்டறியும் பரிசோதனை சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
நோய்த்தடுப்பு மத்திய நிலையங்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் கேட்டறிந்தார்.

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகள் மிகவும் பயனுறுதிவாய்ந்தவை என மாகாண சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சுகாதார துறையின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலைமைகளை மீளாய்வு செய்வதற்கு இதனை சந்தர்ப்பமாக ஆக்கிக்கொள்ளுமாறும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்த்தன, பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானியும் இராணுவத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி அட்மிரல் பியல் டி சில்வா, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ், பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன, சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com