Monday, March 16, 2020

சுகதேகிகளில் நோய்கள் வருமுன் காக்கும் தடுப்பு முறையாக ஹிஜாமா கப்பிங் (Cupping) சிகிச்சை காணப்படுகின்றது.

கேள்வி:- ஹிஜாமா கப்பிங் (Cupping) சிகிச்சை என்றால் என்ன?

பதில்:- ஹிஜாமா கப்பிங் (Cupping) சிகிச்சை முறை என்பது பண்டைய காலம் தொட்டு யூனானி சிகிச்சை முறையில் மேற்கொள்ளப்படும் முக்கியமான சிகிச்சை முறையாகும். இச்சிகிச்சையானது பல்வேறுபட்ட நோய்களுக்கான நிவாரணமாகவும் சுகதேகிகளில் நோய்கள் வருமுன் காக்கும் தடுப்பு முறையாகவும் மேற்கொள்ளப்படுகின்றது.

இம்முறைமூலம் வெவ்வேறு நோய் நிலைமைகளுக்காக உடலில் காணப்படும் பிரத்தியேகமான பகுதிகளில் இருந்து இரத்தம் உறுஞ்சி வெளியேற்றப்படுகின்றது. இதனாலேயே இம்முறைக்கு ஹிஜாமா என பெயர் வந்தது. ஹிஜாமா என்ற சொல் ஹஐம் என்ற அரபு சொல்லில் இருந்தே வருகின்றது. அரபியில் ஹஐம் என்றால் உறுஞ்சி வெறியேற்றல் முறையாகும்.

கேள்வி:- ஹிஜாமா செய்வதன் நோக்கம் என்ன?

பதில்:- ஹிஜாமா செய்வதன் மூலமாக உடலில் நோயை ஏற்படுத்தக் கூடிய ஆரோக்கியமற்ற பதார்த்தங்கள் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு நகர்த்தப்பட்டு அவை குருதியுடன் சேர்த்து வெளியேற்றப்படுகின்றது. இதனால் அந்த ஆரோக்கியமற்ற பதார்த்தங்களினால் அப்பகுதியில் ஏற்படக்கூடிய வலி, வீக்கம் (Inflamation) என்பன இல்லாமல் போகின்றது. அத்துடன் உடலின் உள் உறுப்புக்கள் தூண்டப்படுவதோடு உடலின் மேற்பரப்புக்கான குருதிச் சுற்றோட்டம் அதிகரிப்பட்டு அதன் மூலமாக உடலில் நோயை ஏற்படுத்தக்கூடிய ஆரோக்கியமற்ற பதார்த்தங்களை வெளியேற்றப்படுவதாகும்.

கேள்வி:- ஹிஜாமா சிகிச்சையை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் உள்ளனவா? அவைகள் என்ன?

பதில்:- பல வகை ஹிஜாமா சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் நோயாளர்களின் தன்மை, நோய்களின் தன்மை, நோய்களின் வீரியம் என்பவற்றைப் பொறுத்தே வைத்தியர்களினால் பொருத்தமான முறை தீர்மானிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது. அதில் Hijama Bila Shurt, Hijama Bil Shurt, Mahajim Nariya, Massage Cupping போன்ற வழிமுறைகளை மேற்கொள்வோம்.

Hijama bila surt (Dry Cupping):- இம்முறை மூலம் குருதி வெளியேற்றப்பட மாட்டாது. உடலின் குறிப்பிட்ட பகுதியில் இதற்கான கப் இடப்பட்டு இழுவையை ஏற்படுத்துவதன் மூலம் உடலின் ஆழமான பகுதிகளில் உள்ள ஆரோக்கியமற்ற பாய்மங்கள் உடலின் மேற்பரப்புக்கு வந்து அது குருதியுடன் பரவுகின்றது. பின்னர் அவை இலகுவாக வியர்வை, சிறுநீர் ஊடாக வெளியேற்றப்படுகின்றன. இம்முறையானது உடலின் ஆழமான பகுதிகளில் ஏற்படும் நோய்களை குணமாக்குவதற்கு சிறந்த முறையாகும். இன்னும் உடலின் ஆழமான பகுதிகளில் உள்ள உடல் உறுப்புக்கள் இம்முறை மூலம் அதிகமாக தூண்டப்படுவதனால் அவ்வுறுப்புக்களின் செயற்பாடுகள் சீராக அமைகின்றது. இம்முறையானது அதிகமாக வயிற்றுப்பகுதியில் சிகிச்சையளிப்பதற்கு கையாளப்படுகின்றது.

Mahajam Nariya (Fire Cupping):- இம்முறையிலும் குருதி வெளியேற்றப்படமாட்டாது. இம்முறையில் ஹிஜாமா செய்ய வேண்டிய இடத்தில் கப் இடப்படுவதற்கு முன்னர் அவ்விடத்தில் கற்பூரம் அல்லது மொக்சா மூலமாக சூடேற்றப்பட்டு பின்னர் கப் இட்டு கேற்கொள்ளும் சிகிச்சை முறையாகும்.
Hijama bil Surt (Wet Cupping):- இம்முறை மூலம் குருதி வெளியேற்றப்படுகின்றது. உடலின் குறிப்பிட்ட பகுதியில் இதற்கான கப் இடப்படுவதற்கு முன் அப்பகுதியில் கூரிய கருவி மூலம் சில மிக மெல்லிய கீறல் ஏற்படுத்தப்பட்டு அதன் பின்னர் அப்பகுதியின் மேல் இதற்கான கப் இடப்பட்டு இழுவையை ஏற்படுத்துவதன் மூலம் குருதி மெது மெதுவாக வெளியேறுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது. இவ்வாறு குருதி வெளியேறும்போது அக்குருதியுடன் இணைந்து அவ்விடத்தில் காணப்பட்ட ஆரோக்கியமற்ற பாய்மங்களும் வெளியேறுகின்றது. இம்முறையே பிரதானமாக சரும நோய் உட்பட அதிகமான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு கையாளப்படுகின்றது.

Massage Cupping:- இம்முறையானது Dry Cupping இனை ஒத்த முறையாகும். இம்முறையின்போது உடல் முழுவதும் பொருத்தமான எண்ணை பூசப்பட்டு அதன் பின்னரே கப் இடப்படும். அதன் பின்னர் அந்த கப்பானது உரிய முறைப்படி உடலின் தேவையான பகுதிகளுக்கு அசைத்து நகர்த்தப்படும். இதன்போது கப்பின் இழுவை கப் நகர்த்தப்படும் முறை என்பன பிரதானமாகும். இம்முறையானது உடலில் ஏற்படும் தீவிர கிருமித் தொற்றான புரையோடுதல் Cellulitis எனப்படும் நோய்க்கு மிகவும் சிறந்த சிகிச்சை முறையாகும்.

கேள்வி:- உடலில் நோயை ஏற்படுத்தக்கூடிய ஆரோக்கியமற்ற பதார்த்தங்களை வெளியேற்றப்படும் முறைபற்றி குறிப்பிட்டீர்கள் அதுதொடர்பில் கூறமுடியுமா?

பதில்:- யூனானி மருத்துவ தத்துவத்தின் பிரகாரம் மனித உடலில் காணப்படும் உடற்பாய்மமானது நான்கு வகையானதாக வகுக்கப்படுகின்றது. Sanguine, Phlegmatic, Bilious, Melancholic இவை ஒவ்வொன்றும் அவற்றிகேயான தனித்துவமான இயல்புகளைக் கொண்டுள்ளன. அப்பதார்த்தங்கள் மனித உடலில் ஒரு குறிப்பிட்ட சமநிலையில் காணப்படுகின்றன. இச்சமநிலையானது சீராக காணப்படும் வரையில் மனிதன் ஆரோக்கியமானவராக வாழமுடியும்.

சுத்தமான சுற்றுச் சூழல், சமநிலையான உணவுப் பழக்கவழக்கங்கள், சீரான உடல் மற்றும் உள செயற்பாடும் ஓய்வும், சீரான தூக்கம், சீரான முறையில் உடல் கழிவுகளை வெளியேற்றல் என்பவற்றை தொடராக கடைப்பிடிப்பதன் மூலம் உடலில் மேற்குறிப்பிட்ட சமநிலையினை ஏற்படுத்த முடியும். இச்செயற்பாடுகளில் மனிதன் பொடுபோக்குடையவராக இருப்பார்களானால் உடலில் இச்சமநிலை பாதிக்கப்படுகின்றது. இதனாலேயே மனித உடலில் வியாதிகள் ஏற்படுகின்றன.

இவ்வாறு சமநிலை தழம்பிய உடற் பாய்மங்கள் ஆரோக்கியமற்ற இயல்புகளைக் கொண்டுள்ளமையினால் இவை வெவ்வேறு குணங்குறிகளைக் கொண்ட வியாதிகளை உடல்களில் உருவாக்குகின்றன. இவ்வாறு சமநிலை தழம்பிய உடற் பாய்மங்கள் உடலின் பல்வேறு பகுதிகளில் நீண்ட நாட்களாக தேங்கித் தேங்கி செறிவாகி இறுக்கமடைவதனால் அந்த இடங்களில் வலி, கட்டு, தோல் நோய்கள் உட்பட இன்னும் பல நோய்கள் ஏற்படுகின்றன.

இந்த இடங்களில் ஹிஜாமா செய்வதன் மூலமாக அந்த பகுதியில் உள்ள இறுக்கம் தளர்த்தப்பட்டு இரத்த ஓட்டம் அதிகரிக்கப்படுவதனால் அந்த இடத்தில் தேங்கிய ஆரோக்கியமற்ற உடற் பாய்மம் கலைகின்றது. அந்த இடத்தில் இருந்து குருதி வெளியேற்றப்படுவதால் குருதியுடன் சேர்ந்து ஆரோக்கியமற்ற உடற் பாய்மமும் வெளியேறுகின்றது. இதன் மூலமாக வலி, சரும நோய்கள் உட்பட ஏனைய நோய்களும் குணமடைகினறன.

இன்னும் அவ்விடங்களில் தேக்கமடைந்துள்ள உடலியல் சக்தியும் (Vital force) உடல் முழுவதும் சீராக பரவுவதனாலும் நரம்பு மண்டலம் தூண்டப்படுவதனாலும் உடல் புத்துணர்வடைகின்றது. அத்துடன் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கின்றது. இதனாலேயே இச்சிகிச்சை முறையானது நோய் வருமுன் காக்கும் தடுப்பு முறையாகவும் மேற்கொள்ளப்படுகின்றது.

கேள்வி:- ஏவ்வாறான நோய்களுக்கு ஹஜாமா சிகிச்சையை வழங்கி வருகின்றீர்கள்?

பதில்:- உடலில் எந்தவொரு மூட்டிலும் ஏற்படக்கூடிய வலிகள் மற்றும் வீக்கங்கள், குதிகால் வலி, இடுப்பு வலி, கால் வலி (Sciatic pain) கழுத்து மற்றும் தோழ்பட்டை வலி, மூட்டுக்களில் யூரிக்கமிலம் தேங்குவதால் ஏற்படும் வலி (Gout), தசைப்பிடிப்பு, பக்கவாதம், கை மற்றும் கால்களில் ஏற்படும் தசை பிடிப்பு மற்றும் தசைத் துடிப்பு போன்ற நோய்களுக்கும் மூலவியாதி, மற்றும் ஆசனவாயில் ஏற்படும் பிளவை (Fissure) நோய், துளைவை (Fistula) நோய் என்பவற்றுக்கும் சிகிச்சையளிக்கப்படுகின்றது.

ஆண்களில் ஏற்படும் ஆண்மை தொடர்பான குறைபாடுகள், பெண்களில் ஏற்படும் மாதவிடாய்க்கோளாறுகள், பிள்ளைப்பேறின்மை மற்றும் பெண்ணியல் தொடர்பான நோய்களுக்கும் ஹிஜாமா சிகிச்சை மூலம் சிறந்த தீர்வினைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

மேலும், தொடர்சியாக காணப்படும் சமிபாட்டுக் கோழாறுகள், நீண்ட நாள் மலச்சிக்கல், பல்வேறுபட்ட வயிற்று வலி என்பனவற்றுக்கும் சிறுநீரக நோய்கள், சீறுநீரக செயலிழப்பு என்பவற்றுக்கும் இதன் மூலம் குணம் கிடைக்கின்றது. இது தவிர உளவியல் பிரச்சினைகளான பதட்டம், மன அழுத்தம், தூக்கமின்மை, படுக்கையில் சிறுநீர் கழிதல் மற்றும் உளவியல் நோய்கள் போன்றவற்றுக்கும் சிகிச்சையளிக்க முடியும்.

இருதய நோய்கள், மாரடைப்பு, உயர்குருதி அழுத்தம், சீனி வியாதி, சுவாசக்கோளாறுகள், அதிக உடற்பருமன், புற்றுநோய் போன்ற பிரதானமான தொற்றா நோய்களுக்கும் இம்முறை மூலம் சிகிச்சையளிக்க முடியும். இன்னும் கொலஸ்ரோல், ஈரலில் கொழுப்பு படிதல் (Fatty Liver) கால்களில் ஏற்படும் நாளப்புடைப்பு (Varicose Veins) யானைக்கால் போன்றவற்றுக்கும் நீண்ட நாள் தலைவலி, ஒற்றைத் தலைவலி, தலை சுற்றுதல் போன்றவற்றுக்கும் இதன் மூலம் சிறந்த நிவாரணம் கிடைக்கின்றது.

கண் வலி, குளுக்கோமா (Glucoma), பார்வைக் குறைபாடு, கண் வறட்சி போன்ற கண் தொடர்பான நோய்களுக்கும் மற்றும் கேட்டல் குறைபாடு, காது இரைச்சல் போன்ற காது தொடர்பான நோய்களுக்கும் சிறந்த தீர்வைப் பெற்றுக் கொள்ளமுடியும். பேச்சுத்திறன் குறைபாடு, வலிப்பு, மனநல குறைபாடு, கற்றல் குறைபாடு போன்றவற்றுக்கும் சிறந்த தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கேள்வி:- ஹிஜாமா செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?

பதில்:- ஹிஜாமா சிகிச்சையானது குருதிச் சுற்றோட்டம், நிணநீர் சுற்றோட்டம், என்பவற்றை துரிதப்படுத்துவதனாலும் நரம்புத் தொகுதியினை துண்டுவதனாலும் உடலுக்கு பொதுவாக பல்வேறு நன்மைகளை வழங்குகின்றது. உடலில் பெரும்பாலான நோய்கள் சீரான குருதிச் சுற்றோட்டமின்மையினாலேயே ஏற்படுகின்றது.

ஹிஜாமா சிகிச்சையானது குருதி நாடி நாளங்களில் சற்று தளர்வை ஏற்படுத்துவதனால் உடலில் குருதிச் சுற்றேட்டம் துரிதப்படுத்தப்பட்டு பல்வேறு நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கின்றது. இன்னும் நிணனீர் தொகுதியிலும் இதேமாதிரியான தாக்கம் ஏற்படுவதனால் உடலில் நிணனீர் ஓட்டம் சீராக்கப்பட்டு உடலில் ஏற்படுகின்ற வீக்கம் போன்ற நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கின்றது.

அத்துடன் உடலின் தெறிவினைப்பகுதிகள் (Reflex Zone) தூண்டப்படுவதனால் உடல் உறுப்புக்களின் ஆரோக்கியத்தன்மை மூளையினால் உணரப்படுகின்றது. குருதிக்கும் தோல், உடற்தசை, இழையங்களுக்கிடையில் காணப்படும் நச்சுப்பொருட்கள் அகற்றப்படுவதனால் குருதி தூய்மைப்படுத்தப்படுகின்றது. குருதிச் சுற்றோட்டம் சீரின்மையினாலும் வெளித்தாக்கங்களினாலும் தோலுக்கடியில் குருதி உறையும் தன்மை இச்சிகிச்சை மூலம் வெகுவாக குணமடைகின்றது.

நரம்பு மண்டலம் தூண்டப்படுவதனால் சுறுசுறுப்பின்மை, மன அழுத்தம் மற்றும் உளப்பாதிப்புக்கள் என்பன சீராகின்றது. ஊடலின் இயற்கையான நோயெதிர்ப்பு சக்தி (Immune System) தூண்டப்படுவதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்பட்டு நோய்கள் வருமுன்னே காக்கும் தடுப்பு முறையாகவும் இச்சிகிச்சை முறை அமைகின்றது. அத்துடன் மூளையின் பேச்சு, அசைவு, கேட்டல், ஞாபக மற்றும் பார்வை மையங்கள் தூண்டப்படுவதனால் இச்செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படுகின்றது.

நரம்பு மண்டலம் தூண்டப்படுவதனால் முகவாதம் (Facial Palsy), பக்கவாதம் (Hemiplegia), முகத்தில் ஏற்படும் Trigeminal Neuralgia எனப்படும் வலி, காலில் ஏற்புடம் வலி (Sciatica) என்பன துரிதமாக குணமடைகின்றது. அத்துடன் பிரதானமாக சொறிச்சல் சிரங்கு போன்ற சரும நோய்களுக்கும் மிகச்சிறந்த சிகிச்சை முறையாகும். நீண்ட நாட்களாக ஆறாமல் காணப்படும் காயங்கள் துரிதமாக குணமடைகின்றது. திடீரென அதிகரிக்கும் குருதி அமுக்கத்தினை (Acute onset of Hypertension) வெகுவாக குறைப்பதற்கு மிகச் சிறந்த சிகிச்சை முறையாகவும் இது அமைகின்றது.

குருதியில் யூரிக்கமிலத்தின் அளவினைக் குறைப்பதன் மூலம் உடலில் மூட்டுவலி ஏற்படாமல் தடுக்கின்றது. இன்னும் குருதியில் காணப்படும் அன்டி ஒக்சிடன்ட் எனப்படும் பதார்த்தம் தூண்டப்படுவதனால் உடலில் புற்று நோய் ஏற்படாமல் பாதுகாப்புக்கிடைக்கின்றது. ஹிஜாமா சிகிச்சை மூலம் குருதியில் கோர்டிசோன் அளவு அதிகரிக்கப்படுவதனால் உடலில் திடீரென ஏற்படும் அழர்ச்சியில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கின்றது. அத்துடன் குருதியில் ஆரோக்கியமற்ற கொலஸ்ரோலான Low Density Lipoprotein (LDL) இன் அழவு குறைக்கப்பட்டு அத்தியாவசி கொலஸ்ரோலான High Density Lipoprotein (HDL) அளவு அதிகரிக்கப்படுகின்றது.

கேள்வி:- ஹிஜாமா சிகிச்சை மூலம் ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படுமா?

பதில்:- இச்சிகிச்சையினை முறையான பயிற்சியும் அனுபவமும் கொண்ட மனித உடற்கூறியலை (Anatomy) அறிந்த மருத்துவர்களினால் வழங்கப்படும்போது பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைவாகும். இது ஓரு வைத்தியரின் பூரண கண்காணிப்பின் கீழ் செய்யப்பட வோண்டியது கட்டாயமாகும். இல்லாத பட்சத்தில் அதிக குருதிப் பெருக்கு, அவ்விடத்தில் கொப்புளம் என்பன ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. இன்னும் Dehydration, Hypovolemic Shock, Palpitation, Nervousness போன்ற பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவேதான் இச்சிகிச்சை முறையானது ஒரு தகுதிவாய்ந்த மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும்.

கேள்வி:- தகுதிவாய்ந்த மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் இச்சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டீர்கள் அவர்கள் யார் என்று சொல்லமுடியுமா?

பதில்:- கொழும்பு பல்கழைக்கழக உன்னாட்டு மருத்துவ கல்வி நிறுவகத்தில் அல்லது பல்கழைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கழைக்கழகம் ஒன்றில் யூனானி மருத்துவத்துறையில் பட்டம் பெற்று ஆயுர்வேத மருத்துவ சபையில் பதவு செய்யப்பட்ட அனைத்து யூனானி மருத்துவர்களும் இச்சிகிச்சையினை வழங்க முடியும். அத்துடன் இலங்கை மற்றும் பல்கழைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கழைக்கழகம் ஒன்றில் ஆயுர்வேத மற்றும் சித்த வைத்தியத் துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டு அதன் பின்னர் ஹிஜாமா சிகிச்சை முறையினை விசேட துறையாக பயின்ற ஆயுர்வேத மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்களும் இச்சிகிச்சையினை மேற்கொள்ள முடியும்.

கேள்வி:- இச்சிகிச்சையினை எல்லோரும் பெற்றுக்கொள்ள முடியுமா?

பதில்:- இல்லை. இச்சிகிச்சையானது பின்வரும் நிலைமைகளில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அவர்கள் யாராக இருப்பார்கள் என்றால், குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பினி தாய்மார்கள், ஊடல் பலவீனமானவர்கள், குருதிச்சோகை உள்ளவர்கள், அதி தீவிர நிலையிலுள்ள ஈரல் மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், குருதி உiறாய நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு இச்சிகிச்சையினை வழங்க முடியாது. இருப்பினும் சர்க்கரை வியாதி உள்ளவர்களின் சர்க்கரையின் அளவு கவனத்தில் கொள்ளப்பட்டு இச்சிகிச்சை வழங்கப்படும்.

டாக்டர் எம்.பி.எம்.ரஜீஸ்
(BUMS,PGCC on Cupping and leach therapy
PGD in Coun Psychology)
வைத்திய அத்தியட்சகர்
தள ஆயர்வேத வைத்தியசாலை
அட்டாளைச்சேனை.


நேர்காணல்:- பைஷல் இஸ்மாயில்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com