Monday, March 2, 2020

தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற பொதுநல சக்திகளை த.தே. கூ ஒதுக்கி வைத்துள்ளது! அழுகின்றார் லோகநாதன்

தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்ற பொதுநல சக்திகளை பங்காளிகளாக ஒன்றிணைத்து ஒருமித்து பயணிப்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தேச்சையான நழுவல் போக்கையே கைக்கொள்கின்றது என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.

தனது காரைதீவு இல்லத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஊடகவியலாளர்களை சந்தித்து சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் முன்னெடுப்புகள் தொடர்பாக பேசியபோது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கு ஆரோக்கியமானதாக இல்லை. புலிகள் இயக்கம் இன்றும் இருந்திருக்குமானால் கடிவாளம் பூட்டப்படாத குதிரையை போல தமிழ் தேசிய கூட்டமைப்பு நடந்து கொள்ள நேர்ந்து இருக்காது.

தமிழ் மக்கள் மாத்திரம் அன்றி தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்ற பொதுநல அமைப்புகள் பலவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது பாரிய அதிருப்தி நிலைப்பாட்டிலேயே காணப்படுகின்றனர். அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கமும், அதன் அரசியல் பிரிவான அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சியும் அதே மன நிலையில்தான் இருந்து வருகின்றன.

எமது தொழிற்சங்கம் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக உழைக்கும் மக்களுக்காக உரக்க குரல் கொடுத்து வருகின்றது. அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் விடிவு, விமோசனம் ஆகியவற்றுக்காக பல வடிவங்களிலும் போராடி வந்திருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலம் தொட்டு அதை எமது சங்கம் ஆதரிப்பதையே தார்மீக கடமையாக வரித்து கொண்டது. அதே நேரத்தில். எமது சங்கம் கடந்த 10 வருடங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் பங்காளியாக இணைவதற்கு பகீரத முயற்சிகளை முன்னெடுத்து வந்திருக்கின்றபோதிலும் அவர்கள் எம்மை ஏற்று அங்கீகரிப்பதாக இல்லை.

சம்பந்தன், மாவை சேனாதிராசா உள்ளிட்ட தலைவர்களை நாம் பல தடவைகள் சந்தித்து எமது இக்கோரிக்கையை முன்வைத்தோம். எழுத்துமூலம்கூட கோரி இருக்கின்றோம். அவர்களிடம் இருந்து இப்போது வரை எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவே இல்லை. தேர்தல் காலங்களில் மாத்திரம் கறிவேப்பிலைகளாக எங்களை பயன்படுத்துகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இயங்குகின்ற, எமது மக்களுக்காக குரல் கொடுக்கின்ற ஏனைய பொதுநல அமைப்புகள் மீது இனம் தெரியாத ஒரு அச்சம் இருக்கின்றது. இந்நிலையில்தான் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்ற பொதுநல சக்திகளை பங்காளிகளாக ஒன்றிணைத்து ஒருமித்து பயணிப்பதில் தொடர்ந்தேச்சையான நழுவல் போக்கை கைக்கொள்கின்றது.

இந்நிலையில் எமது சங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பை இனி மேலும் தொடர்ந்து ஆதரிக்க வேண்டுமா? என்று சிந்திக்க நேர்ந்து உள்ளது. எமது சிந்தனை வருகின்ற பொது தேர்தலுக்கான ஆதரவு நிலைப்பாட்டில் நிச்சயம் பிரதிபலிக்கும். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான ஆதரவை மீள்பரிசீலனை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளோம். அடுத்த வாரம் இது தொடர்பாக எமது அதியுயர்பீடம் கூடி தீர்க்கமான தீர்மானத்தை எடுக்கும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com