Friday, February 21, 2020

கோட்டாவின் படை வன்னியை கைப்பற்றுமாம்! தளபதி எஹியான் உறுதிபடக்கூறுகின்றார்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பெறுவெற்றியில் கைப்பற்றும் என்று மன்னார் முசலி பிரதேச சபை முன்னாள் தவிசாளரும், நாடாளுமன்ற வேட்பாளருமான டபிள்யூ.எம்.ஏ. எஹியான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் பொதுஜன முன்னணி சார்பில் மன்னார் மாவட்டத்தில் அவர் போட்டியிடவுள்ள நிலையில் வவுனியாவில் வியாழக்கிழமை ஊடக சந்திப்பொன்றை நடத்தினார்.

இதில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு அவர் கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின்போது பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு பன்னிரண்டாயிரம் வாக்குகளை வன்னி மாவட்ட வாழ் மக்கள் எனக்கு வழங்கியிருந்த போதிலும் எங்களுடைய கட்சியானது ஒரு பிரதிநிதித்துவத்தை மட்டும் பெற்ற காரணத்தினால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

தற்போது இந்நாட்டிலே இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்சாவும் கட்சியின் உயர் பீடங்களும் என்னை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக களமிறங்குமாறு கூறி எனக்கு ஒரு வாக்குறுதியைத்தந்து என்னை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளார்கள்.

இதையடுத்து ஒவ்வொரு கிராமங்களாகவும் மக்கள் சந்திப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றோம். எங்களுடன் இன மத பேதமின்றி தமிழ் சிங்கள முஸ்லிம் சகோரதர்களும் புத்திஜீவிகள், கல்வியலாளர்கள், மாற்று அறிஞர்கள் போன்றவர்கள் ஒற்றுமையாகவும் அனைவருடனும் இணைந்து ஒன்றாகப்பயணித்து கொண்டிருக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்திலுள்ள பிரதி தவிசாளர்கள் இருவர் உட்பட பல தமிழ் முஸ்லிம் பிரதேச சபை உறுப்பினர்கள் 15பேருக்கு மேல் எங்களுடன் இணைந்து பயணித்து கொண்டிருக்கின்றனர். இதேபோல ஏனைய மாட்டங்களிலுள்ள தவிசாளர்கள் , உறுப்பினர்கள் எங்களுடன் இணைந்து பயணிப்பதற்காக ஆலோசனைகளை நடாத்திக்கொண்டிருக்கின்றோம்.

இன்னும் ஓரிரு நாட்களில் அவர்களும் எங்களுடன் இணைந்து பயணிப்பார்கள். நிச்சயமாக எதிர்வரும் பாராளுமனறப் பொதுத் தேர்தலிலே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வன்னி மாவட்டத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட ஆசனங்களைப் பெறக்கூடிய வாய்ப்புக்கள் நிச்சயமாக உள்ளது. எங்களுடைய வளர்ச்சியைப் பொறுக்க முடியாத சிலர் போலிப்பிரச்சாரங்களை எல்லாம் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இவற்றை எல்லாம் நீங்கள் நம்பவேண்டாம். எதிர்வரும் காலங்களிலே வன்னி தேர்தல் தொகுதியில் அமோகமாக வாக்காளர்களின் வாக்கைப் பெற்று நாங்கள் வெற்றி பெறுவது என்பதில் எவ்வித ஜயமும் இல்லை. இந்த நாட்டிலே இனவாதம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்சா முன்மாதிரியான ஒரு நாட்டை நடாத்திக்கொண்டிருக்கின்றார்.

வன்னி மாவட்டத்தில் அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். இது ஒரு மாற்றத்தை நோக்கிய பயணமாகும் என்று மேலும் தெரிவித்தார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com