Friday, January 10, 2020

உக்ரையன் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரானே - மேற்குலநாடுகள்

ஈரானில் புதன்கிழமையன்று விழுந்து நொறுங்கிய உக்ரைன் பயணிகள் விமானம் இரான் ஏவுகணை ஒன்றினால் சுட்டுத்தள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள காணொளியில், டெஹ்ரான் வான் வெளியில் இரவு நேரத்தில் ஏவுகணை பாய்ந்து, சிறிது நேரத்திலேயே விமானம் மீது மோதுகிறது. 10 விநாடிகள் கழித்து, தரையில் ஒரு பெரும்சத்தம் கேட்கிறது. தீப்பிடித்த விமானம் பறந்து கொண்டிருந்தது.

176 பேர் உயிரிழந்த இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

எனினும், விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்று ஈரானின் சிவில் விமான போக்குவரத்து தலைவர் கூறுகிறார் தாங்கள் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா எந்த நேரமும் பதிலடி தரலாம் என்று முன்னெச்சரிக்கையாக இருந்த ஈரான், இந்த பயணிகள் விமானத்தை அமெரிக்காவின் போர் விமானம் என்று தவறுதலாக எண்ணி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் ஊகிக்கின்றன.

அமெரிக்க செயற்கைகோள் ஒன்றுக்கு ஏவுகணைகள் ஏவப்பட்டதற்கான இரு அகச்சிவப்பு கதிர் சமிக்ஞைகள் கிடைத்ததாகவும், அதன்பின் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததற்கான ஒரு சமிக்ஞை கிடைத்ததாகவும் அமெரிக்க புலனாய்வு துறைமூலம் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக சி.பி.எஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 'தோர் எம்-1' ஏவுகணை மூலம் பிஎஸ்752 எனும் அந்த உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் மற்றும் மூத்த அமெரிக்க மற்றும் இரானிய அதிகாரிகள் கருதுவதாக நியூஸ்வீக் செய்தி கூறுகிறது.

நிலத்தில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணை மூலம் இந்த விமானம் வீழ்த்தப்பட்டதாக தமக்கு பல்வேறு இடங்களில் இருந்து தகவல் கிடைத்திருப்பதாகவும், அவ்வாறு தாக்கும் நோக்கம் இரானுக்கு இல்லாமலேயே தவறுதலாக தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com