Friday, January 3, 2020

ஈரானின் இராணுவத்தளபதியை ஈராக்கில் கொன்றது அமெரிக்கா

ஈராக்கில் உள்ள பாக்தாத் சர்வதேச விமான நிலையம் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் நாட்டின் முக்கிய படைப்பிரிவின் தளபதி உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர்.

ஈராக்கில் கடந்த வாரம் ஹிஸ்புல்லா அமைப்பின் தளம் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை கண்டித்து, ஹிஸ்புல்லா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராடிய அவர்கள், தூதரகத்தை சூறையாடினர்.

தூதரகம் சூறையாடப்பட்டதற்கு ஈரான் தான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது ரொக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் வெடித்து சிதறின. விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும் பகுதியில் ரொக்கெட் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன.

இந்த தாக்குதலில் ஈரானிய புரட்சி பாதுகாப்பு படையின் குத்ஸ் படைப்பிரிவு தளபதி காசிம் சொலைமனி, ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய கமாண்டர் அபு மகாதி உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர்.

ஈரான் இராணுவத் தளபதி கொல்லப்பட்டதை உறுதி செய்த பென்டகன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com