Tuesday, January 21, 2020

சிறிதரனுக்கும்,வேழமாலிகிதனுக்கும் ஏதிராக வர்த்தகர் சாகும் வரை உண்ணாவிரதம்

கிளிநொச்சி தமிழரசு கட்சியின் ஆளுகையில் உள்ள கரைச்சி பிரதேச சபையினரால் மக்களிடம் அதிக வீதத்தில் ஆதனவரி அறவிடப்படுவதற் எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி நகரில் பிரபல வர்த்தககர் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளார்.

இறுதி யுத்தத்தால் முற்று முழுதாக அழிவடைந்த ஒரு மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகிறது. இங்கு மக்கள் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் படிப்படியாக மீள் குடியேற்றப்பட்டு முன்னேறி வருகின்ற சூழலில் தற்போது கரைச்சி பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் கிளிநொச்சி தமிழரசு கட்சியினர் மக்கள் மீது அதிக வரிச் சுமையை சுமத்தி வருகின்றனர்.

இலங்கையில் அதிக ஆதன வரியை அறவிடுகின்ற உள்ளுராட்சி சபையாக கரைச்சி பிரதேச சபை காணப்படுகிறது. அதிகளவான வசதியானவர்கள் வாழ்கின்ற யாழ் மாநகர சபை, நல்லூர் பிரதேச சபைகளில் நான்கு, ஐந்து வீதங்களில் ஆதன வரி அறவிடப்படுகின்ற போது இலங்கையில் வறுமையில் முதல் இடத்தில் கிளிநொச்சியில் கரைச்சி பிரதேச சபையினரால் மக்களிடம் பத்து வீதம் ஆதன வரி அறவிடப்படுகிறது.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனிடம் பல தடவைகள் அதிகரித்த ஆதனவரி தொடர்பில் எழுத்து மூலமும் நேரடியாகவும் எடுத்துக் கூறியும் அவர் ஏதேச்சதிகாரமாக மக்கள் மீது அதிக வரியை சுமத்தியுள்ளார். பல்வேறு ஊழல்கள் முறைகேடுகளில் ஈடுப்பட்டு வரும் தவிசாளர் மக்களின் நலனை புறக்கணித்தே செயற்பட்டு வருகின்றார். அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் கவனத்திற்கு இவ் விடயத்தை கொண்டு சென்ற போதும் அவரும் வேழமாலிகிதனின் செயற்பாடுகளை கண்டுகொள்ளவில்லை எனறும் தெரிவித்த அவர் இவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக தண்ணீர் கூட அருந்தாமல் தான் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

வடக்கில் உள்ள ஏனைய பிரதேச சபைகளோடு ஒப்பிடுகையில் எவ்வாறு ஆதனவரி அதிகம் அறவிடப்படுகிறதோ அவ்வாறே அதிகளவு ஊழல்களும், மோசடிகளும் இடம்பெறுகின்ற சபையாக கரைச்சி பிரதேச சபை காணப்படுகிறது எனவும் பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com