Monday, January 27, 2020

ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை வைத்திருக்கமுடியுமா? (தொடர்ச்சி) வை எல் எஸ் ஹமீட்

முதல் பகுதியின் சுருக்கம்:

ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. எனவே, அவர் ஒருபோதும் அமைச்சராக முடியாது. அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் இல்லையென்பதனால் அரசியலமைப்பு அவர்களுக்கு விசேட சரத்தினூடாக அமைச்சுக்களை வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கியது.

அவ்வாறு பாராளுமன்ற உறுப்பினராக இல்லாதபோதும் அமைச்சுக்களை வைத்திருக்க சந்தர்ப்பம் வழங்கிய சரத்துக்கள் தற்போது இல்லாத நிலையில் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை தன்னகத்தே வைத்துக்கொள்ளமுடியுமா? இதுதான் இப்பாகத்தில் நாம் ஆராயப்போகும் கேள்வி.

இறைமை ( கேள்விக்குட்படுத்தமுடியாத முழுமையான அதிகாரம்) மக்களுடையது. அது அரச அதிகாரங்களையும் உள்ளடக்குகின்றது; என்று சரத்து 3 கூறுகிறது. இந்த சரத்தில் ஒரு எழுத்தை மாற்றுவதானாலும் சர்வஜன வாக்கெடுப்பு தேவை.

மக்களினுடைய இறைமை எவ்வாறு செயற்படுத்தப்படும்; என்று சரத்து 4 கூறுகின்றது.

அதில் 4(b) - இலங்கையின் பாதுகாப்பு உட்பட நிறைவேற்றதிகாரம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியினால் செயற்படுத்தப்படும்; எனக்கூறுகிறது.

சரத்து 4 ஐத் திருத்துவதற்கு சர்வஜனவாக்கெடுப்பு தேவையென்று அரசியலமைப்பில் கூறப்படவில்லை. ஆயினும் மேற்படி சரத்திற்கு கொண்டுவரப்படும் எந்தவொரு திருத்தமும் சரத்து 3 இல் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துமானால் சர்வஜனவாக்கெடுப்புத் தேவையாகும்.

சரத்து 4, சரத்து 3 இல் குறிப்பிடப்பட்ட ‘இறைமை’ எவ்வாறு செயற்படுத்த வேண்டும்; என்று விபரிக்கின்றது. ஆனால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புத் துறையை ஜனாதிபதியிடம் இருந்து எடுப்பது அல்லது அந்தத்துறையை ஜனாதிபதி செயற்படுத்தமுடியாதென்பது இறைமையுடைய மக்கள் ஜனாதிபதிக்கு வழங்கிய பாதுகாப்புத்துறை அதிகாரத்தை நிராகரிப்பதாகும். அதை மக்களின் ஆணையில்லாமல் பாராளுமன்றம் செய்யமுடியாது.

இதன்பொருள், 19 இனூடாக பாராளுமன்றம் செய்த மாற்றம் 4(b) இனூடாக மக்கள் வழங்கிய பாதுகாப்புத்துறையை ஜனாதிபதியிடம் இருந்து எடுப்பதாக இருந்திருக்க முடியாது. அவ்வாறு நீக்கியதாக எதுவித சரத்துக்களும் நேரடியாக இல்லை. 4(b) இலும் நேரடியாக எதுவித திருத்தங்களும் செய்யப்படவில்லை.

அவ்வாறாயின் ஏன் பாதுகாப்பு அமைச்சை வைத்திருக்க முடியாதென்கிறார்கள்?

காரணம் 19 வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்ட ( அப்போதைய ஜனாதிபதி வைத்திருப்பதற்கு) மூன்று விடயதானங்களுள் பாதுகாப்பும் ஒன்றாகும். அந்த சரத்து தற்போது செயற்படாத நிலையில் எவ்வாறு பாதுகாப்பு அமைச்சை வைத்திருக்கமுடியும்? என்ற கேள்வியாகும்.

இந்தக் கேள்விக்கான அடிப்படை 19 இன் இடைக்கால சரத்தான S51 இல் பாதுகாப்பு அமைச்சையும் வைத்திருக்கலாம் என்று குறிப்பிட்டதனால்தான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு பாதுகாப்பு அமைச்சை வைத்திருக்க முடிந்தது. அதாவது ஏனைய இரண்டு அமைச்சுக்களையும்போல் பாதுகாப்பையும் வைத்திருக்கின்ற தற்காலிக அதிகாரம் S51 இன் பிரகாரம்தான் முன்னாள் ஜனாதிபதிக்கு கிடைத்தது; என இவர்கள் கருதுகிறார்கள்.

அவ்வாறல்ல. ஏனைய இரு விடயதானங்களைப் பொறுத்தவரை S 51 தான் அதிகாரம் வழங்கியது. பாதுகாப்பைப் பொறுத்தவரை 1978ம் ஆண்டிலிருந்து சரத்து 4( b) தான் ஜனாதிபதிக்கு அதிகாரத்தை வழங்குகிறது.

அவ்வாறாயின் S 51இல் ஏன் குறிப்பிடவேண்டும்?

S 51 இல் குறிப்பிடப்பட்டிருக்காவிட்டாலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம்தான் பாதுகாப்பு அமைச்சு இருந்திருக்கும். ஆனால் அவ்வாறு வெளிப்படையாக குறிப்பிடாமல் விட்டிருந்தால் அங்கு ஒரு முரண்பாடு தோன்றியிருக்கும்.

அதாவது விசேட அதிகாரத்தின்மூலம் வழங்கப்படுகின்ற மகாவலி மற்றும் சுற்றாடலைக் குறிப்பிட்டு இந்த அமைச்சுக்களை வைத்திருக்கலாம்; எனக்குறிப்பிட்டுவிட்டு அவருக்கு இயல்பாக உரித்தான பாதுகாப்பைக் குறிப்பிடாவிட்டால் அங்கு வீணான வியாக்கியான குழப்பங்கள் ஏற்படும்.

அது அவரது பாதுகாப்பு தொடர்பான அதிகாரத்தைக் குறைத்திருக்காது. ஆனால் வீணான குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும். நீதிமன்றத்தை நாடவேண்டிய தேவையை ஏற்படுத்தியிருக்கும்.

உதாரணமாக, ஒரு உயர்தர உத்தியோகத்தருக்கு ஒரு பென்ஸ் கார் நிரந்தரமாக வழங்கப்பட்டிருக்கின்றது. ( அந்தப்பதவிக்கு யார் வந்தாலும்). அதேநேரம் அவருக்கு வேண்டிய எத்தனை வாகனங்களையும் அவர் பாவிக்கலாம்; என்றும் அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த வசனம் இல்லாவிட்டால் அவரால் பென்ஸ் வாகனம் பாவிக்கமுடியாதா? முடியும். ஆனால் ஏனைய வாகனங்களைப் பாவிக்கமுடியாது.

பின்னர், எத்தனை வாகனங்களை வேண்டுமானாலும் பாவிக்கலாம்; என்ற வாசகம் நீக்கப்பட்டு, அவர்- பென்ஸ், ஒரு பி எம் டப்ளியூ, ஒரு வொல்வோ ஆகிய கார்களை பாவிக்கலாம்; என்ற வாசகம் புகுத்தப்படுகிறது.

இப்பொழுது அந்த வாசகமும் இல்லை. ஆனாலும் அவர் பென்ஸ் பாவிக்கலாம்; என்ற வாசகம் அப்படியே இருக்கிறது. இப்பொழுது பென்ஸ் பாவிக்கலாமா? இல்லையா? தாராளமாகப் பாவிக்கலாம். இதேபோன்றுதான் 44(2) மற்றும் 51 இல்லாதபோதும் 4(b) இன் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சை வைத்திருக்கலாம்.

அமைச்சுக்கும் விடயதாத்துக்கும் என்ன வித்தியாசம்?
===========================
இங்கு ஒரு கேள்வி எழலாம். அதாவது ஜனாதிபதிதான் தற்போதும் முப்படைத் தளபதி. ஜனாதிபதிதான் யுத்தத்தையும் சமாதானத்தையும் பிரகடனப்படுத்துபவர். எனவே, 4(b) இல் குறிப்பிடப்பட்ட “ பாதுகாப்பு” என்பது அதனைக் குறிக்காதா? “ பாதுகாப்பு அமைச்சைத்தான்” குறிக்கின்றது; என்று எந்த அடிப்படையில் முடிவுக்கு வருவது?

இங்கு விடயதானங்களும் செயற்பாடுகளும் ( Subjects and functions) மற்றும் அமைச்சுக்கள் என்று இரண்டு விடயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு அமைச்சருக்கும் குறித்த விடயதானங்கள்/செயற்பாடுகள் ஒதுக்கப்படுகின்றன. அவற்றைச் செயற்படுத்துவதற்கான பொறிமுறைதான் அமைச்சுக்களாகும்.

பாதுகாப்பு என்பது ஒரு விடயதானமாகும். அந்த விடயதானத்தை இன்னுமொருவருக்கு கொடுத்துவிட்டு பாதுகாப்பை எவ்வாறு ஜனாதிபதி தன்னகத்தே வைத்திருக்கமுடியும்.

1972ம் ஆண்டு யாப்பின்கீழும் நிறைவேற்றதிகாரம் இல்லாதபோதும் ஜனாதிபதிதான் முப்படைத் தளபதி, அவர்தான் யுத்தத்தையும் சமாதானத்தையும் பிரகடனப்படுத்துபவராக இருந்தார். ஆனால் பாதுகாப்பு அமைச்சராக இருக்கவில்லை.

பாதுகாப்புக்கு பொறுப்பாக பாதுகாப்பு அமைச்சரே இருந்தார். அது பிரதமராகவோ, யாராகவோ இருக்கலாம்.

எனவே, 1978ம் ஆண்டு யாப்பின்கீழ் இன்றுவரை ஜனாதிபதியே பாதுகாப்பு என்ற விடயதானத்திற்கு பொறுப்பாகும். பாதுகாப்பு என்ற விடயதானத்தை கையாளும் பொறிமுறை பாதுகாப்பு அமைச்சு என்பதால் அது ஜனாதிபதியின்கீழே இருக்கவேண்டும். யாருக்கும் கையளிக்க முடியாது.


அரசியலமைப்பு நேரடியாக பாதுகாப்பு விடயதானத்தை ஜனாதிபதிக்கு வழங்கியிருப்பதால் அதுதொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் கட்டாயமில்லை. வெளியிடுவது தடையுமில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com