Tuesday, January 7, 2020

முன்னாள் அமைச்சரை கடும் ஊழியத்துடன் 3 வருடம் கம்பி எண்ணுமாறு உத்தரவிட்டது நீதிமன்று!

முன்னாள் பெற்றோலிய வளத்துறைப் பிரதி அமைச்சரான சரண குணவர்தனவுக்கு நீதிமன்றம் 03 ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மூன்று ஆண்டுகள் சிறைதண்டனைக்கு மேலதிகமாக 03 இலட்சம் ரூபா தண்டப் பணமும் அவர் மீது நீதிமன்றம் இன்றைய தினம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய பிரதமரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பெற்றோலிய வளத்துறைப் பிரதியமைச்சராக பதவிவகித்த சரண குணவர்தன, அப்போதைய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகவும் கடமையாற்றியிருந்தார்.

அந்த காலகட்டத்தில் அபிவிருத்தி லொத்தர் சபைக்கு புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்யும் விடயத்தில் தலைமைதாங்கி மேற்கொண்ட முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன, அதுசம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் முறைகேடு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

இதுகுறித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் இன்றைய தினம் அதற்கான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன, நிதிமுறைகேடு செய்தமை உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு 03 ஆண்டுகால சிறைதண்டனையை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதேபோன்று, 03 இலட்சம் ரூபா தண்டப் பணத்தையும் அவர் செலுத்துவதற்கான உத்தரவை நீதிமன்றம் இன்று வழங்கியது.

இதேவேளை கடந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பெற்றோலிய வளத்துறை பிரதியமைச்சராக சரண குணவர்தன கடமையாற்றிய போது நாடளாவிய ரீதியில் தரங்குறைந்த மற்றும் கழிவுகலந்த பெற்றோல் எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com