Monday, December 2, 2019

சஜித்திற்கு வாக்குகள் கிடைக்காது போனதற்கான காரணம் பற்றி EPRLF!

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு ஏற்ற ஒரு தலைமையை வழங்கவியலாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதனால், மிக விரைவில் தமிழ் மக்களுக்குச் சிறந்ததொரு தலைமைத்துவத்தை வழங்குவதற்கு மாற்றுத் தலைவர் ஒருவர் தேவை என ஈ.பீ.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வவுனியாவில் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் அக்கட்சியின் பிரமுகர்கள் ஊடகச் சந்திப்பொன்றை மேற்கொண்டு இவ்வாறு குறிப்பிட்டனர். அங்கு தொடர்ந்து பிரேமச்சந்திரன் கருத்துரைக்கும்போது,

‘‘ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ வெற்றியீட்டுவதற்கு மூல காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் கூட்டங்களை நடாத்தியமை, வடக்கில் உள்ள தமிழ்ப் பேசும் மக்கள் தங்கள் விருப்புக்கு வாக்களிக்காது அவர்கள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் நடந்துகொண்ட முறையானது சிங்கள வாக்குகள் குறைவதற்குக் காரணமாகியது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த சம்பந்தன், மாவை சுமந்திரன் போன்றோர் எடுக்கும் முடிவுகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் முடிவாக இருந்தது. இதனால்தான் கஜேந்திர குமார் பொன்னம்பலம், தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியைப் போலவே ஈ.பீ.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்த நாங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஒதுங்கினோம். இதற்கு தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களே காரணமாகினர்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போதும் சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் இதைப்போல பல்வேறு வாக்குறுதிகள் அளித்தார்கள். பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியுடன் எதிர்க்கட்சியாக ஆளும் கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கினர். அரசாங்கம் பிரச்சினைகளைச் சந்தித்த போதெல்லாம் அரசாங்கத்தைப் பாதுகாத்தனர். ஜெனீவாப் பிரச்சினையின் போதும் அரசாங்கத்தைப் பாதுகாத்தனர்.

அன்று மனித உரிமைகள் பேரவையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரிவர செயற்பட்டிருந்தால், தமிழ் மக்களின் மனித உரிமைப் பிரச்சினையை மனித உரிமைப் பேரவையின் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் சமர்ப்பித்திருக்கலாம். தேசிய பிரச்சினைக்குத் தீர்வினைப் பெறும்வகையில் புதிய அரசியல் யாப்பினைக் கொண்டுவருவதாகவும், அதுவரை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் புதியதொரு யாப்பினைக் கொண்டுவரவுள்ளதாகவும் குறிப்பிட்டனர். என்றாலும், இன்றுடன் நான்கரை ஆண்டுகள் சென்றுவிட்டன. அரசியல் வரைவும் குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டுள்ளது. இதனைச் சொல்லிச் சொல்லி தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை, தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை முதலிய அடிப்படைப் பிரச்சினைகள் பலவற்றில் கவனவீனமாக இருந்து தமிழ்க் கூட்டணி செயற்பட்டது.

2000 ஏக்கர் பெற்றுக்கொண்டதாகச் சொன்னார்கள். என்றாலும் பல ஏக்கர் காணிகள் இன்னும் இராணுவத்தினர் வசமே உள்ளன. தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை, தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை முதலியன அனைத்துப் பிரச்சினைகளுக்கும் புதிய யாப்பில் தீர்வு கிடைக்கும் என்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் அதிருப்தியாகவே தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். அதனைச் நடந்துமுடிந்த மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகளின் மூலம் தெரிய வந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளில் 50% வீழ்ச்சி கண்டுள்ளது.

சென்ற நான்கரை ஆண்டு கால செயற்பாடுகளின் மூலம் தான் தோல்வியடைந்துள்ளதை சுமந்திரன் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தத் தோல்வியின் பின்னரும் மீண்டும் ஐக்கியம் பற்றிப் பேசி மக்களைப் பகடைக்காய்களாக மாற்றிவருவது வாக்குக் கொள்ளையிடுவதற்கே என்று நான் நினைக்கிறேன்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியில் இருந்தாலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டது. வடக்கு கிழக்கு அரசின் பிரதிநிதிகளாக செயற்பட்டு வந்தது. என்றாலும் வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் நன்மைக்காக எதுவும் செய்யவில்லை.

பிரதான இரு கட்சிகளுக்கும் தென்பகுதி சிங்கள மக்கள் வாக்களித்தாலும்கூட, வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பெரும்பாலும் அவ்வாறு வாக்களிக்கவில்லை. இதனால் மாற்றுச் சக்தி அல்லது பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதை நிறுத்துவதற்குத் தேவையில்லை.

புதிய அரசு மூன்றில் இரண்டு வாக்குகளைப் பெற்று அதிகாரத்திற்கு வந்தால் 19 ஆவது யாப்புத் திருத்தம் இல்லாமலாகும். ஒருவர் நீண்ட காலம் ஜனாதிபதியாக இருப்பதற்குரிய சாத்தியக்கூறுகள் உள்ளன. அதன் மூலம் சிங்கள மக்களே துன்பங்களை அனுபவிக்க வேண்டிவரும். தமிழ் மக்கள் பல்வேறு முறைகளில் துன்பங்களை அனுபவித்து வந்துள்ளனர். எங்கள் பாதுகாப்புத் தொடர்பில் நாங்கள் சிரத்தையோடு இருப்பதைத் தவிர, மூன்றில் இரண்டு அதிகாரத்தைப் பிடிப்பதற்கு முயற்சிப்பதை நிறுத்துவதற்கு ஆவன செய்வதாகச் சொல்வது சுமந்திரனின் சூழ்ச்சியில் தமிழ் மக்களுக்கான ஏமாற்றமே‘‘ எனவும் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

(கலை)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com