Wednesday, December 4, 2019

கட்சித் தலைமையை தராவிட்டால் புதிய கட்சி என மிரட்டும் சஜித், நாளை முதல் சகல விகாரைகளுக்கும் செல்ல முடிவு.

சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் மற்றும் அடுத்த பொது தேர்தலில் UNP யை வழிநடத்த பூரண அதிகாரங்கள் கிடைக்கப்பெறாவிடின் UNP யில் இருந்து நீங்கி வேறு கட்சி ஒன்றை உருவாக்குவதற்கு சஜித் தரப்பின் தலைவர்கள் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய இந்த நாட்களில் புதிய கட்சியில் பொது தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் தயார்படுத்தல் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு பிரதான காரணம் UNP தலைவர் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்பாக மக்களிடம் உள்ள அதிருப்தியே என சஜித் தரப்பு தெரிவித்துள்ளது.

இறுதியில் அதற்காக இழப்பீடு வழங்க வேண்டியிருப்பது சஜித் பிரேமதாசவுக்கு என அவர்கள் வாதிடுகின்றனர். இதுபோன்று மீண்டும் நிகழாமல் தடுக்க, சஜித் பிரேமதாசவுக்கு UNPயின் முழு தலைமை வழங்கப்பட வேண்டும், அல்லது சஜித் UNPயை விட்டு வெளியேறி புதிய கட்சியை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தொடர்ந்தும் UNPயுடன் தங்கியிருப்பதனால் அடுத்த தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு பாதகமான நிலை ஏற்படும் என்பதால் உடனடியாக இறுதி தீர்மானத்தை எடுக்குமாறு சஜித் தரப்பின் தலைவர்கள் சஜித் பிரேமதாசவுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

இதன் பிரகாரம் சஜித் பிரேமதாஸ, நாளை வியாழக்கிழமை முதல் தனது புதுவித அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விகாரைகளுக்கும் நாளை மறுதினம் முதல் விஜயம் செய்யவும் சஜித் பிரேமதாஸ தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து சஜித் பிரேமதாஸ அரசியலைத் தொடர்வதற்காக ஓய்வெடுத்திருந்தார் என்றும், பொதுத் தேர்தல் நெருங்கிவருகின்ற நிலையில் தேர்தலுக்காக பலவித முடிவுகளை எடுத்திருப்பதால் மீண்டும் புதுவிதப் பயணமொன்றை ஆரம்பிக்கின்றார் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சஜித் அணி உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

பௌத்த மக்கள் மத்தியில் வீழ்ந்துள்ள செல்வாக்கினை தூக்கி நிறுத்துவதற்காக அவர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறியமுடிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com