கோத்தபாயவின் செயற்பாடுகளுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். - ஐனாதிபதி செயலகம்
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்று கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் மக்களின் பாராட்டு கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
மிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதியை தடை செய்தல், 15 வீதமாகக் காணப்பட்ட வட் வரியினை 8 வீதமாகக் குறைத்தல், தொலைபேசி கட்டணங்களுக்காக அறவிடப்பட்ட வரியினை 25 வீதத்தினால் குறைத்தல், அரச நிறுவனத் தலைவர்களின் நியமிப்பின்போது விசேட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளல் மற்றும் அரச நிறுவனங்களில் ஜனாதிபதி மற்றும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்களின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்துவதற்கு பதிலாக அரச இலட்சினையை காட்சிப்படுத்தல் போன்ற ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும் இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையினை 16 ஆக மட்டுப்படுத்தி முன்மொழியப்பட்டுள்ள அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுமென மக்களுக்கு வாக்குறுதி அளித்தல், சுற்றாடல் தொடர்பில் பொலிஸார் மற்றும் ஏனைய தரப்பினரின் கவனத்தை பெற்றுக்கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள துரித வேலைத்திட்டம், 9 மாகாணங்களினதும் பாதுகாப்பு தொடர்பான விசேட பொறுப்பினை இராணுவத்தினர் ஏற்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமைக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளது.
பெரும்பான்மை வாக்கு வங்கி பற்றிய நம்பிக்கையை வெளியிடல் மற்றும் அதனுடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஏனைய இன மக்களுக்கும் அழைப்பு விடுத்தல், இந்தியா, சீனா போன்ற உலகின் பலசாலி நாடுகள் எமது நாட்டிற்கு வருகைத் தந்து, எம்மீது நம்பிக்கை வைத்து எமது தனித்துவத்தை மதிக்கும் வகையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்தல், ஜனாதிபதியின் ஆளணியினர், வாகனத் தொடரணி ஆகியவற்றை மட்டுப்படுத்தல் மற்றும் ஜனாதிபதி தமது உத்தியோகபூர்வ இல்லமாக தனது தனிப்பட்ட வசிப்பிடத்தை தேர்ந்தெடுத்தல் மற்றும் கோதுமை மா கட்டுப்பாடு தொடர்பில் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக ஏனைய இறக்குமதியாளர்களுக்கும் கோதுமை மாவினை இறக்குமதி செய்வதற்கு வாய்ப்பளித்தல் என்பவற்றையும் மக்கள் வரவேற்றுள்ளனர்.
0 comments :
Post a Comment