Monday, December 16, 2019

அதிகாரப்பகிர்வு சாத்தியமா? காணாமல் போனோர் உயிரிழந்தார்களா? கோட்டாபய நேரடிப் பதில் !

இனப்பிரச்சினைக்கான அதிகாரப் பரவலை வழங்கமுடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசியர்களை இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்தபோதே அவர் இதனைக் கூறினார். பெரும்பான்மையின மக்கள் நிராகரிக்கின்ற ஒன்றை தம்மால் வழங்கமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் பல விடயங்களை ஜனாதிபதி தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் பற்றி இங்கு கருத்து வெளியிட்ட அவர், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் அதனால் அவர்களுக்கான சான்றிதழை அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு வழங்குவதுதான் சரியான வழி என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதரகத்திலுள்ள பெண் அதிகாரியொருவர் வெள்ளைவாகில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவமானது பொய்யான சம்பவம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இந்த விவகாரத்தில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தை தாம் குறைகூறப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்குவந்த சில தினங்களிலேயே கொழும்பிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர் வெள்ளைவானில் கடத்தப்பட்டு விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்திவருவதோடு ஐந்தாவது முறையாக சம்பந்தப்பட்ட பெண்ணிடம் இன்றைய தினம் வாக்குமூலத்தையும் பதிவுசெய்தது.

இந்நிலையில் இன்றைய இந்த சந்திப்பின்போது சுவிஸ் தூதரகப் பெண் கடத்தல் தொடர்பிலான கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சுவிஸ் தூதரகத்தில் பணிபுரியும் பெண் அதிகாரி எந்தவிதத்திலும் வெள்ளை வானில் கடத்தப்படவில்லை என்பதற்கு தொழில்நுட்பரீதியிலான சாட்சிகள் வந்திருக்கின்றன என்று கூறியதோடு குறித்த பெண் அதிகாரியின் வாக்குமூலத்தில் மாறுப்பட்ட கருத்துக்கள் காணப்படுகின்றமையினால் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்களுடனான இன்றைய சந்திப்பிற்கு முன்னதாக சுவிட்ஸர்லாந்து தூதரகத்துடன் உரையாடியதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி கோட்டாபய, சுவிட்ஸர்லாந்து தூதரகம் தனது கடமையை சரிவரச் செய்திருந்தாலும் சம்பந்தப்பட்ட பெண் பணியாளர் விசாரணைகளுக்கு உரிய வகையில் ஒத்துழைப்பு செய்வதில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் சுவிஸர்லாந்து தூதரகத்துடன் தமக்கு எந்தவித முரண்பாடுகளும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற தினத்தில் பதிவாகிய சி.சி.ரி.வி காணொளி, சம்பந்தப்பட்ட பெண் பயணித்த வாடகை கார் மற்றும் அவரது உறவினர்கள் போன்றவர்களின் சாட்சியங்களை ஒப்பிட்டுப்பார்க்கும்போது வெள்ளைவானில் அவர் கடத்தப்படவில்லை என்பது தெரியவந்ததாகவும், ஆனாலும் முழுமையான விசாரணை தற்சமயம் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இந்த சம்பவமானது தனது பெயருக்கு மேலும் கலங்கத்தை ஏற்படுத்திவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய சந்திப்பின்போது கவலை வெளியிட்டார்.

இதேவேளை இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அரச தலைவர் கோட்டாபய, 19ஆவது திருத்தம் இரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தமானது, பல குறைபாடுகளுடனான திருத்தம் என்று சுட்டிக்காட்டிய அவர் இந்த திருத்தச் சட்டத்தை விரைவில் இரத்துசெய்வதாகவும், மிகவும் பலவீனமான சட்டமான இதனை, அரசியலில் புலமைப்பெற்றோரும் அனுபவம் வாய்ந்தவர்களும் ஏன் கொண்டுவந்தார்கள் என்பது தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை மலையத்திலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

தாம் தற்போதே ஆட்சிக்கு வந்துள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், மலையக மக்களுக்கு மட்டுமன்றி நாட்டு மக்களுக்கும் மானிய உதவிகளை வழங்கவும் தான் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அந்த வகையில் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் குறைப்பு ஏற்படுத்தப்பட்ட போதிலும் அவை உரியவகையில் மக்களை சென்றடையவில்லை என்ற முறைப்பாடுகளும் கிடைத்திருப்பதாக ஜனாதிபதி இன்றைய ஊடக சந்திப்பின்போது கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com