Saturday, November 9, 2019

சஜித்திற்கு ரெலோ ஆதரவு தெரிவித்தனை எதிர்த்து, சில்வெஸ்ரர் தலைமையில் ரெலோ இரண்டாக உடைகின்றது !

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிறேமதாஸவிற்கு ஆதரவு தெரிவிப்பது என்ற முடிவினை தமிழீழ விடுதலை இயக்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததை அடுத்து அக்கட்சி இரண்டுபட்டுள்ளது. ரெலோ எனப்படுகின்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்டச் செயலாளர் சில்வெஸ்டர் நிக்கலஸ் தலைமையில் ஒன்றுகூடிய யாழ் மாவட்ட ரெலோ உறுப்பினர்கள் கட்சியின் தலைமையினால் எடுக்கப்பட்ட முடிவை நிராகரித்து தமது தனியான பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இன்று யாழ் மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்ற ஒன்றுகூடலில் சஜித் பிறேமதாஸ விற்கு ஆதரவு வழங்குவதன் சாதகபாதகங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் இறுதியாக கட்சிக் கிளையின் தீர்மானம் தொடர்பாக வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு அதிக உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் எதிர்வரும் தேர்தலில் ரெலோ அக்கட்சியின் மூத்த உறுப்பினரும் சுயேட்சை வேட்பாளருமான சிவாஜிலிங்கத்திற்கு தமது ஆதரவினை வழங்குவது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

யாழ் மாவட்டக்கிளையினரின் மேற்படி முடிவுடன் தமிழீழ விடுதலை இயக்கத் தலைமை உடன்படாத பட்சத்தில், யாழ் மாவட்ட கிளை அமைப்பிலிருந்து பிரிந்து செல்லுமா என யாழ் மாவட்டக் கிளையின் செயலாளர் சில்வெஸ்டரிடம் இலங்கைநெட் வினவியபோது, 'ரெலோவின் தலைமை தொடர்ந்தும் மக்களை ஏமாற்றுவதற்கு யாழ் மாவட்ட கிளை வழிவிடாது என்றும், தேவை ஏற்படின் பிரிந்து சென்று தனித்துச் செயற்படுவோம்' என்றும் அவர் தெரிவித்தார்.

தமது முடிவு தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:





தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்டக் கிளையின் விசேட கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர் சில்வெஸ்டர் நிக்கலஸ் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஐந்து தமிழ்க் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பில் பேச மறுத்த ஒருவருக்கு கட்சி எவ்விதம் ஆதரவு தெரிவிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும் தொல்பொருள் திணைக்களம் தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களான நீராவியடி மற்றும் கன்னியா ஆகிய இடங்களில் பெரும் தொல்லைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கும் போது அத்திணைக்களத்திற்குப் பொறுப்பான அமைச்சராக இருக்கும் சஜித் பிரேமதாஸ அதனைப் பற்றிக் கொஞ்சமும் கரிசனை கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி ஆயிரம் விகாரைகள் அமைக்கும் அவர்களின் திட்டமும் சிங்கள பௌத்த ஆட்சியை ஏற்படுத்துவேன் என்ற அவரது பிரகடனமும் தமிழர்களின் சுதந்திர எழுச்சிக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவால் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இருந்தும் தமிழரசுக் கட்சியைப் பின்பற்றி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எடுத்திருக்கும் சஜித் ஆதரவுத் தீர்மானம் இனத்துரோகமாகவே பார்க்கப்படும் என்றும் அவர்கள் கருத்து வெளியிட்டனர்.

ஒரு சில உறுப்பினர்கள் கட்சியின் ஒற்றுமை கருதி எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது என்ற கட்சித் தலைமைக்குழுவின் முடிவை நிராகரிக்கும் தீர்மானம் பிரேரிக்கப்பட்ட போது அதனுடன் திரு. சிவாஜிலிங்கம் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானமும் பிரேரிக்கப்பட்டு இணைத்துக் கொள்ளப்பட்டது.

தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு மிகப் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் இனத்தின் அடிப்படைக் கோரிக்கைகளை முன்னிறுத்தி ஓர் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் திரு. எம். கே. சிவாஜிலிங்கம் அவர்களுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்டக் கிளை தனது பூரண ஆதரவினை வழங்குகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com