Monday, October 7, 2019

கோத்தபாய எதற்காக சுமந்திரனை அழைத்தார்? ஐ.தே. கட்சியின் முகாமிலிருந்து சுமந்திரனால் வெளியேற முடியுமா? பீமன்

ஒரிரு தினங்களுக்கு முன்னர் கோத்தபாய ராஜபக்ச தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சர்வ வல்லமை கொண்டவர் என்று கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினரும் அக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளருமான மதியாபரணம் சுமந்திரனை அழைந்து எனது சகோதரர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஸில் ராஜபக்ஷ சகிதம் உங்களுடன் பேசவிரும்புகின்றேன் என்று தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ் மக்களின் பிரதிநிதியாக அழைக்கப்பட்ட சுமந்திரன் அவ்வழைப்பு தொடர்பில் அம்மக்களின் அல்லது அவர்களது சகபிரதிநிதிகளின் விருப்பு வெறுப்புக்களை பெற்றுக்கொள்ளாது : 'தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் அன்றாட – அவசர – நெருக்கடி ஆகியவற்றுக்கான தீர்வுகளாக நீங்கள் முன்வைக்கக்கூடிய யோசனைகள் தொடர்பில் உங்களிடம் ஒரு தெளிவான திட்டம் இல்லாமல் சந்தித்துப் பேசுவதில் பலன் விளையாது' என நிராகரித்துவிட்டதாக தமிழ் தேசியவாதிகள் எனத் தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்வோர் அல்லது சுமந்திரனின் செம்புதூக்கிகள் எக்காளமிடுகின்றனர்.

ஆனாலும் எமது யோசனைத் திட்டங்கள் தொடர்பாக பேசுவதற்காகவே நாம் உங்களை அழைக்கின்றோம் என கோத்தபாய ராஜபக்ச தனது நல்லெண்ணெத்தை வெளிப்படுத்தியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளபோதும் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்பில் என்ன முடிவைக்கொடுக்கப்போகின்றது என்ற விரிவான விளக்கம் தேவைப்படுகின்து.

இலங்கை அரசியல் வரலாற்றில் இருதரப்பினர் மாறிமாறி ஆட்சிப்பீடம் ஏறுகின்றனர். இருவரில் எவரும் இதுவரை தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக சரியான அணுகுமுறை ஒன்றை கொண்டிருக்கவில்லை என்பது வெள்ளிடைமலை. ஆனால் தமிழர் தரப்பின் கோரிக்கைகள் எவ்வளவு நியாயமானது? அக்கோரிக்கைகள் நிலையானதா? அது காலத்திற்கு காலம் மாற்றம் பெற்றுள்ளதா? அவற்றை அடைய தமிழ் தரப்பு நியாயமான வழிமுறைகளை பின்பற்றியுள்ளார்களா? பெற்றுக்கொள்ளக்கூடியவற்றை பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்களா? என்கின்ற கேள்விகளுக்கு இதுவரை தமிழர் தரப்பிலிருந்து வெளிப்படைத்தன்மையான எவ்வித பதில்களும் இல்லாத நிலையிலேயே போலித்தேசியவாதத்தின் பெயரால் போலித் தமிழ் தலைவர்கள் ஆட்சியாளர்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையே முரண்பாடுகளை தோற்றுவித்து தாங்கள் இராஜபோகம் அனுபவித்து வருகின்றார்கள்.

கடந்த காலங்களை விட நிகழ்கால அரசிற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நேரடியாக நிபந்தனைகளின்றி ஆதரவு வழங்குகின்றார்கள் என்பதைவிட அந்த அரசையே ஆட்சிக்கவிழ்பிலிருந்து காத்துவருகின்றார்கள். அதாவது தமிழ் மக்களின் வாக்குகளால் காக்கப்படும் ஆட்சி இது என்று வெளிப்படையாக கூறிக்கொள்ளமுடியும். இதற்காக தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைத்துவிடவில்லை என்று கூறமுடியாது. அது தூநோக்குடன் செயற்படுகின்றது. தூரநோக்குடன் செயற்படுகின்றது எனும்போது தமிழ் மக்களுக்கான நிரந்தர நலனுக்கான நோக்கு என்று நோக்கலாகாது. மக்களின் உதிரத்தை உறிஞ்சி எடுக்கும் வரிப்பணத்திலிருந்து மக்களுக்கான அபிவிருத்தி என்று சொல்லப்படும் கம்பரெலி எனப்படும் திட்டத்தினூடாக மக்களுக்கான உதவி என்ற பெயரில் தங்களது இருப்பை நிலைநிறுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

வெளிப்பார்வைக்கு கம்பரெலிய மக்களுக்கான அபிவிருத்தி திட்டமாக காணப்பட்டாலும் அதன்நோக்கம் கம்பரெலியவைக்காட்டி அடுத்த தேர்தலுக்கு மக்களை அபிவிருத்தியின் அடிமைகளாக்குவதாகும். அதாவது வடகிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக அபிவிருத்தி பூச்சாண்டி காட்டி அதனூடாக தனது ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்குகளை பெற்றுக்கொள்ளல் அடுத்து பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை வெற்றியீட்டப்பண்ணி அடுத்த ஆட்சியிலும் தமக்கு பொதி சுமக்கும் கழுதைகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை வைத்திருத்தல்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொதிசுமக்கும் கழுதைகளாக தொடர்ந்தும் இயங்குவதா அன்றில் சமவுரிமையுள்ள இலங்கை பிரஜைகளின் பிரதிநிதிகளாக சம அந்தஸ்துடன் மேசையில் உட்கார்ந்து கௌரவமான அரசியல் செய்வதா என நிர்ணயிக்கக்கூடியதோர் சந்தர்ப்பத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தட்டிக்கழித்து தமிழ் மக்களை தொடர்ந்தும் இந்நாட்டின் இரண்டாம்தர பிரஜைகள் அல்லது இந்நாட்டின் விசேட விருந்தாளிகள் என்ற மனநிலைக்கு கொண்டு செல்லப்போகின்றதா?

எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் எத்தரப்பை ஆதரிப்பது அதற்கான நிபந்தனைகள் யாது என்ற விடயத்தில் சுமந்திரன் எனப்படும் தனிநபரின் முடிவுகள் ஒருபோதும் தமிழ் மக்களின் முடிவாக இருக்க முடியாது. அவ்வாறு சுமந்திரன் தன்னிச்சையாக எடுத்திருக்கும் முடிவுகளால் தமிழ் மக்கள் நிறையவே இழந்திருக்கின்றார்கள்.

நான்கு வருடகால நல்லாட்சி என்று கூறிக்கொண்ட ஆட்சியில் ஜனாதிபதி – பிரதமர் இடையே இழுபறியேற்பட்டபோது கவிழ்கப்பட்ட ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்மூடித்தனமாக தூக்கி நிறுத்தியதில் தமிழ் மக்கள் சாதித்துக்கொண்டது யாது என்ற கேள்விக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு பதிலளிக்கவேண்டும். ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது மஹிந்த தரப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பகிரங்கமாகவே வேண்டி நின்றனர். ஆனால் அவ்வேண்டுதலை எட்டி உதைத்து ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்தனர்.

இங்கு மிகவும் கண்டனத்திற்கும் அருவருப்பிற்கும் உரிய விடயம் யாதெனில், மஹிந்த தரப்பினர் தமிழ் மக்களுக்கு எதைத் தருகின்றோம் என தெரிவித்தார்கள் என்பதை பகிரங்கப்படுத்துவோம் என சுமந்திரன் சிங்கள ஊடகங்கள் ஊடாக அத்தரப்பை பிளக்மெயில் பண்ணுமளவிற்கு சென்றிருந்தார். சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கருதப்படுகின்ற விடயங்களைக்கூட மஹிந்த தரப்பினர் கொடுப்பதற்கு தயாராக இருந்திருக்கின்றார்கள் என்பதனை இங்கு உணரவேண்டியுள்ளது. அவ்வாறாயின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலனை நட்டாற்றில் தள்ளிவிட்;டே ஐக்கிய தேசியக் கட்சிக்கு உதவியிருக்கின்றது என்ற உண்மையை மக்கள் தங்கள் மனதில் நிறுத்தவேண்டும்.

இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் சார்பான விடயங்களில் எத்தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடாத்தும் தகுதியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளதுடன் அதன் மீதான நம்பிக்கையும் தவிடுபொடியாகியுள்ளது. எனவே எதிர்வரும் காலங்களில் தமிழர் தரப்பு விடயங்கள் தொடர்பாக எத்தரப்பு தமிழ் மக்கள் சார்பாக எதை முன்வைக்கின்றது என்பது தமிழ் மக்களுக்கு நேரடியாக தெரியப்படுத்தப்படவேண்டும் என்பதுடன் அவ்வாறான பேச்சுவார்த்தைகளில் மக்கள் சார்பாக பொது நலன்கருதும் நபர்களும் ஊடகங்களும் நேரடியாக கலந்து கொண்டு தரப்புக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் முன்மொழிவுகள் அல்லது உறுதிமொழிகள் ஆராயப்படவேண்டும். அவ்வாறு ஆராய்ந்து அவற்றில் எத்தரப்பினருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான பொது முடிவு ஒன்று எட்டப்படவேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com