Saturday, October 5, 2019

ரிசாட் பதியுதீனின் நிலை ஆப்பிழுத்த குரங்கின் நிலையாகி விட்டது. மயோன் முஸ்தபா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் சமகால விடயங்கள் தொடர்பாகவும் வெள்ளிக்கிழமை(4) மாலை 5 மணியளவில் முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் எம்.எம்.மயோன் முஸ்தபாவினால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாடும் மக்கள் சந்திப்பும் கல்முனை வரவேற்பு மண்டபம் ஒன்றில் நடைபெற்றபோது மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர் கூறுகையில்:

2009 யுத்த வெற்றியின் பிற்பாடு வடக்கிலும் புத்தளம் மற்றும் வில்பத்து போன்ற இடங்களில் மீள்குடியேறிய மக்களுக்கு புதிய கிராமங்களை உருவாக்கி மீள்குடியேற வைத்தவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆவார். எவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவை அளித்திருந்தாலும் குறிப்பாக அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆதரவளித்திருக்க கூடாது என்பதுடன் அவரது உள்ளம் முழுமையாக பொதுஜன பெரமுனவை ஆதரித்தாலும் அவர் நடைமுறையில் ஐக்கிய தேசிய கட்சியியை ஆதரிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

இவரது இந்த நிலையானது ஆப்பிழுத்த குரங்கின் நிலை போல் ஆகிவிட்டது. அத்துடன் 2000 ஆண்டில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸை அமைச்சர் றவூப் ஹக்கீம் பொறுப்பேற்றதன் பின்னர் முஸ்லீம் மக்களிற்கு செய்தது என்ன? இந்த தேசத்திற்கும் செய்தது எதுவும் கிடையாது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கிழக்கில் முஸ்லீம் மக்களை ஒருவித மயக்க நிலையில் வைத்துள்ளது. அந்த மயக்க நிலையினால் தான் இன்றும் அக்கட்சிக்கு மக்கள் வாக்களிக்கின்றனர். ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக சஜீத் பிரேமதாசவை தகுதியற்றவர் என்ற குழப்பத்தின் மத்தியில் ஒருவித அழுத்தத்திற்கு ஆளாகிய பிற்பாடே அவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற முஸ்லீம் பங்காளி கட்சிகளின் ஒப்பந்தங்கள் ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவுடன் இருட்டறை ஒப்பந்தங்களாக நடந்தேறி விட்டன.

இந்த ஒப்பந்தமானது முஸ்லீம் மக்களிற்கு தீர்வான ஒப்பந்தமா அல்லது தனி நபருக்கு இலாபமான ஒப்பந்தமா என முஸ்லீம் மக்கள் நன்கு அறிவர். ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமை பொறுத்தமட்டில் மத கருத்துக்களை கூறி சாணக்கியம் பேசி மக்களை ஏமாற்றும் பழைய புராணமாகவே அவரது அரசியல் காணப்படுகிறது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேண்டபாளர் ஒரு இனவாதி என்ற கருத்தை மக்கள் மத்தியில் முன்வைக்கும் இந்த முஸ்லீம் பங்காளி கட்சிகள் ஒரு விடயத்தை மறந்தவிட கூடாது. முஸ்லீம் மக்கள் மத்தியிலும் இனவாதம் காணப்படுகிறது. குறிப்பாக சொல்லப்போனால் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பாக முஸ்லீம் தரப்பினரால் வழங்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் இனவாத கருத்துக்களாகவே காணப்படுகிறன.

முஸ்லீம்களின் பெயர்கள் கூட இன்று மோசமான நிலையில் உள்ளன. குறிப்பாக போதைவஸ்து கடத்தல், பாதாள உலக செயற்பாடுகள், தீவிரவாத செயற்பாடுகள் போன்றவற்றிற்கு துணைபோகின்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இவ்வாறான மோசமான நிலைகளை களையெடுக்கபட வேண்டும். இவ்வாறு களையெடுக்க வேண்டுமாக இருந்தால் அதற்கு தகுதியான ஒருவரே ஜனாதிபதியாக வேண்டும். அதற்கு தகுதியானவர் பொதுஜன பெரமுனவின் பலம் பொருந்திய வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவே ஆவார் என்றும் எமது சமூகத்தின் நாசகார சக்திகள் கலையப்பட வேண்டும் மீண்டும் தேசிய கட்சில் இருந்து கொண்டு எமது அரசியல் பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்பதற்காகவே தேசிய அரசியலில் இணைந்து எமது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com