தமிழர்களுக்கான அரசியல் தீர்வை என்னால் மட்டுமே வழங்க முடியும் - மஹிந்த
தமிழர்களுக்கான அரசியல் தீர்வை என்னால் மட்டுமே வழங்க முடியும். எனவே தமிழ் மக்கள் எமது வெற்றிக்காக பணியாற்றுங்களென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை (26) மட்டக்களப்பு மாவட்ட பொது ஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் ப.சந்திரகுமாருடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக ப.சந்திரகுமார் தெரிவித்தார்.
இது குறித்து சந்திரகுமார் நேற்று ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது ஜன பெரமுன கட்சிக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்சியின் மாவட்ட அமைப்பாளர் என்ற வகையில் எமது கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவை வியாழக்கிழமை சந்தித்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பான எமது கட்சியின் அடுத்த கட்ட செயற்பாடு குறித்து பேசினேன்.
இதன் போது தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் குறித்தும் தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்தும் பேசினேன், இதன் போது எமது தலைவர் மஹிந்த ராஜக்ஷ மிக தெளிவாக கூறினார்.
தமிழ் மக்களை நான் இனி ஒருபோதும் மாற்றாந் தாய் மனநிலையில் பார்க்க மாட்டேன். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை என்னால் மட்டுமே வழங்க முடியும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றுபவர்களுக்கு பின்னால் சென்று தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றது. எனவே தமிழ் மக்கள் எமக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவார்களாக இருந்தால் நிச்சயமாக நாம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுத் தருவோம்.
எனவே தமிழ் மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து எமது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவை வெற்றியடைய செய்யுங்கள் என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment