Saturday, September 14, 2019

வவுனியாவில் வறுமையால் பிள்ளைகளை தேரரிடம் ஒப்படைத்த தந்தை

வவுனியாவில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது ஆறு மற்றும் ஏழு வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகளை குடும்ப வறுமை காரணமாக பதுளையிலுள்ள பௌத்த தேரர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

இந்நிலையில் குடும்பத்தலைவியான தாயார் பொலிஸ் நிலையத்தில் தனது இரண்டு பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டபோது பௌத்த தேரரிடமிருந்து இரு பிள்ளைகளையும் அழைத்துவருமாறு தாய், தந்தை இருவருக்கும் பொலிசாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,வவுனியாவில் வசித்து வரும் குடும்பம் ஒன்று வறுமை காரணமாக தமது பிள்ளைகளை வளர்த்து எடுப்பதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட நிலையில், குடும்பத்தலைவர் தனது 6 மற்றும் 7 வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு மனைவியிடம் உறவினர்கள் வீட்டிற்குச் செல்வதாக தெரிவித்துவிட்டு பதுளையிலுள்ள பௌத்த தேரர் ஒருவரிடம் தனது நிலைமைகளைத் தெரிவித்து தனது பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு வவுனியா சென்று நடந்த சம்பவத்தை தனது மனைவியிடம் நேற்று இரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கிராமத்திலுள்ள பெண் சமூக ஆர்வலர் ஒருவரிடம் சென்ற குறித்த தாயார் கணவனின் செயற்பாட்டினைத் தெரிவித்து தனது நிலைமைகளைத் தெரிவித்துள்ளதுடன் பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி அழுது புலம்பியுள்ளார். இதையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளச் சென்போது மாமடுவ பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் தாயிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து தந்தையை அழைத்த பொலிசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் பௌத்த தேரருடன் தொடர்பினை ஏற்படுத்தி ஒப்படைக்கப்பட்ட இரண்டு ஆண் பிள்ளைகளையும் தாய், தந்தை ஆகிய இருவரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளதுடன் தாய் தந்தை இருவரும் அங்கு சென்று இரண்டு பிள்ளைகளையும் அழைத்து வருமாறு பொலிசாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com