Sunday, September 1, 2019

அசாத் சாலி எவ்வாறு பயங்கரவாதிகளை பூஜிதவுடன் இணைந்து காப்பாற்றினார் என்பதை போட்டுடைக்கின்றார் டிஐஜி!

அசாத் சாலி, றிசார்ட் பதுயுதீன் , ஹிஸ்புல்லா போன்றோருக்கு பயங்கரவாதிகளுடன் நேரடித் தொடர்புண்டு என்ற குற்றச்சாட்டுக்களை அவர்கள் நிராகரித்து வருகின்றனர். ஆனால் அசாத் சாலிக்கு பயங்கரவாதிகளுடனிருந்த தொடர்பு தொடர்பில் முன்னாள் கேகாலை மாவட்டத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் அம்பலப்படுத்தியுள்ளார்.

அசாத் சாலிக்கு மாவனல்லை புத்த சிலையை உடைத்த பயங்கரவாதிகளுடன் நேரடித் தொடர்பு இருந்தாகவும் அவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு அவர் நேரடியாக பொலிஸ் மா அதிபரை தொடர்பு கொண்டு எவ்வாறு பயங்கரவாதிகளை காப்பாற்றினார் என்பது தொடர்பாகவும் ஊடக நேர்காணல் ஒன்றின்போது வெளிப்படுத்தியுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் குறித்த விடயத்தில் அசாத் சாலி சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவதை தடுத்திருக்காவிட்டால், 300 உயிர்களை பலிகொண்டு 500 நபர்களை காயப்படுத்திய பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கு பொலிஸாரால் முடிந்திருக்கும் என்றும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அம்பலப்படுத்துகையில்:

மாவனல்லை தாக்குதலுக்கு தலைமை தாங்கினார்கள் என்று சந்தேகிக்கப்பட்ட சாதிக் மற்றும் ஷகீட் என்ற இருவர் தேடப்பட்டனர். அத்தருணத்தில் குறித்த நபர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோணைத் தொடர்பு கொண்ட பொலிஸ் மா அதிபர் தேடப்படும் சந்தேக நபர்கள் தொடர்பாக அசாத் சாலியை தொடர்பு கொள்ளுமாறும், அவர் குறித்த சந்தேக நபர்களை பொலிஸாரிடம் பாரமளிக்க தயாராகவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் வேண்டுதலின் பிரகாரம் , உதவி பொலிஸ் அத்தியட்சர் காமினி தென்னக்கோண் அசாத் சாலியை தொடர்பு கொண்டபோது, சந்தேச நபர்களை மறுநாள் மௌலவி ஒருவரூடாக பொலிஸாரிடம் பாரப்படுத்துவதாக உறுதியளித்துள்ளார். ஆனாலும் அவர் அதனை செய்யவில்லை. அவ்வாறு அவர்களை கைது செய்வதில் அசாத்சாலி இடையூறு விளைவிக்காதிருந்திருந்தால், குறித்த நபர்களை நாம் கைது செய்து ஈஸ்டர் தினத்தாக்குதல்களை தடுத்திருப்போம். காரணம் இதே நபர்களே ஈஸ்டர் தினத் தாக்குதல்களுக்கும் தலைமைத்துவத்தை வழங்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார் டிஐஜி.

மேலும் மாவனல்லை தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு வெளிநாட்டு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகள் உள்ளது என்பதை நாம் அறிந்துகொண்டு அது தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வேண்டியிருந்தோம். எமது அந்த வேண்டுதலுக்கு பதிலளித்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் இயக்குனர் ஷாணி அபயசேகர, குறித்த அமைப்பின் பெயர், அவர்களின் முகவரி, அந்த அமைப்பின் தலைவர்களின் விபரம் என்பவற்றை அறிவித்தாலன்றி எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என எழுத்துமூலம் அறிவித்தார். (அதன் பிரதி இங்கே உள்ளது) அந்த விபரங்கள் எங்களிடம் இருந்திருந்தால் நாம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவியினை நாடியிருக்கமாட்டோம். நாமே செயற்பட்டு அழிவினைத் தடுத்திருப்போம்.

அத்துடன் மாவனல்லை விடயம் தொடர்பான சிஐடி யிடம் உள்ள கோப்புக்களை எடுத்து பரிசீலனை செய்தால், அங்கே எவ்வாறு கடமையில் உதாசீனம் இடம்பெற்றுள்ளது என்பதை அதிகாரிகள் எவ்வாறு அசமந்த போக்குடன் செயற்பட்டுள்ளார்கள் என்பதையும் அறிந்து கொள்ளமுடியும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com