Friday, August 30, 2019

தமிழ் மக்கள் எம்மை நம்புகின்றார்கள். த.தே.கூ ஐ.தே.கட்சியை கைவிட்டு எம்முடன் இணையவேண்டும். கோருகின்றார் கோத்தா

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனியும் சலுகை அரசியலுக்கு அடிபணியாமல் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க எம்முடன் கைகோர்க்கவேண்டும். தமிழ் மக்கள் எம்மை நம்புகின்றார்கள். எனவே, எம்முடன் கைகோர்க்குமாறு கூட்டமைப்புக்கு பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“ஐக்கிய தேசியக் கட்சியை இனியும் தமிழ் மக்கள் நம்பக் கூடாது. ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்ய முடியாத அந்தக் கட்சியா தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்கப் போகின்றது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 ஆண்டுகளாக ரணில் அரசுடன் திரைமறைவில் செய்த நடவடிக்கை எல்லாம் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். தமிழ் மக்கள் சிறுபிள்ளைதனக்காரர்கள் அல்லர்.

ஜனாதிபதி வேட்பாளராகக் கடந்த 11ஆம் திகதி நான் அறிவிக்கப்பட்டபோது, தமிழ் மக்கள் பெருமளவில் அந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள். தமிழ் மக்கள் எம்மை நம்புகின்றார்கள். எனவே, எம்முடன் கைகோர்க்குமாறு கூட்டமைப்புக்கு பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் – முஸ்லிம் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து தேசிய அரசு ஏற்கும் வகையில் தீர்வைப் பெற்றுக் கொடுப்போம்.

என் மீது சில தரப்பினர் வீண் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகின்றார்கள். நான் அப்படியான குற்றச்சாட்டுக்கள் எவையும் புரிந்தவன் அல்லன். இந்த நாடு மூவின மக்களுக்கும் சொந்தமானது. மூவின மக்களும் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து நிம்மதியாக வாழும் சூழ்நிலையை எமது ஆட்சியில் ஏற்படுத்த நாம் தீர்மானித்துள்ளோம். எனவே, சிங்கள மக்கள் மட்டுமன்றி தமிழ் முஸ்லிம்களாகிய தமிழ் பேசும் மக்களும் எமக்கு ஆதரவு வழங்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com