Friday, August 9, 2019

கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து எடுத்துள்ள முடிவுபற்றிச் சொல்கிறார் மகிந்தர்!

உயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என கார்டினல் கோருகிறார். அந்த விசாரணை நடாத்தப்பட்டே ஆக வேண்டும். ஒரு தலைப்பட்சமற்ற விசாரணை மேற்கொண்டு, அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க குற்றவாளிகளை இனவாதிகளை இனங்கண்டு கட்டாயம் அவர்களை நீதியின் முன் கொண்டுவர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

மொரட்டுவ மாநகர சபையின் புதிய கட்டம் திறந்து வைத்தல், பணியாளர்களை கெளரவித்தல், காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைத்து இவ்வாறு உரையாற்றினார். அவர் தொடர்ந்து பேசுகையில்:

எங்களது கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் இன்று பிற்பகல் ஒன்றிணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்கு சுயாதீனமான ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று கோருவது என முடிவுக்கு வந்தோம். அதேபோன்று நீதியாக விசாரணை நடாத்தப்பட்டு, குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த மற்றும் காயப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரவுள்ளோம்.

நாங்கள் 30 ஆண்டுகள் தொடர்ந்து நடந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்தோம். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பினோம். என்றாலும் ஒருசிலர் நாங்கள் வீழ்ச்சி கண்ட பொருளாதாரத்துடனேயே நாட்டை ஒப்படைத்ததாகக் குறை சொன்னார்கள்.

அண்மையில் அமைச்சர் ஒருவர், நான் உடைந்து தளர்ந்துபோன பொருளாதாரத்தையே பொறுப்பேற்றேன் எனக்கூறுவது எனது காதுகளுக்குக் கேட்டது. நாங்கள் அவர்களின் காலகட்டத்து மத்திய வங்கி அறிக்கையைக் கூறினால் அவர்கள் வாய்பொத்திக் கொள்வார்கள்.

தொழிலில்லாப் பிரச்சினை எங்கள் காலத்தில் குறைந்த முறை பற்றியும், அவர்கள் காலத்தில் தொழிலில்லாப் பிரச்சினை எந்த அளவில் இருக்கின்றது என்பது பற்றியும் அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

பொருளாதாரம் இன்று நசுங்குண்டு கீழே போய் விழுந்துள்ளது. இன்று மக்கள் வாழமுடியாமல் தட்டுத் தடுமாறுகிறார்கள். கடைக்குச் சென்று, சந்தைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது தொடர்பில் இரண்டு முறை சிந்திக்கிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் நொந்துபோயுள்ளார்கள்.

இப்போது ஜனாதிபதித் தேர்தல் பற்றிப் பேசப்படுகிறது. நல்லாட்சி மூலம் சீரான ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதாகச் சொன்னார்கள். என்றாலும் பல ஆண்டுகளாக மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படவில்லை. மாகாண சபைத் தேர்தல் நடாத்துவது தொடர்பில் இரண்டரை ஆண்டுகள் சண்டை செய்ய வேண்டியிருந்தது. அதன் பெறுபேற்றை அவர்கள் கண்டதனால் மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுகிறார்கள். நாங்கள் இருந்தபோது அந்தப் பிரச்சினை இருக்கவில்லை.

நாங்கள் பயமின்றி மாகாண சபைத் தேர்தலை நடாத்தினோம். யுத்தத்தை இல்லாதொழித்தோம். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பினோம். அதனால் தேர்தல்களை நடாத்த நாங்கள் பயப்படவில்லை. நாங்கள் வெற்றிபெற்றோம். 2015 இல் போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, சர்வதேசமும் NGO வும் ஒன்றிணைந்து எங்களைத் தோற்கடித்தது. இன்று அதன் உண்மைத் தன்மை பற்றி மக்கள் தெரிந்துகொண்டுள்ளார்கள்.

அதேபோல நாங்கள் எதிர்கட்சியினராக இருந்து அரசாங்கம் செய்யும் சோடனைகளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். பேச்சளவில் மட்டும்தான் நல்லாட்சி. இந்த ஆட்சி செய்தது ஒன்றும் கிடையாது. இன்று எல்லாப் பிரிவுகளும் சிதைவுண்டுள்ளன. கல்வி, சுகாதரம் அதளபாதாளத்திற்கே சென்றுள்ளன. சுகாதார அமைச்சின் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் எத்தனை எத்தனை...?

இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பனிப்போர்... ஜனாதிபதி வேட்பாளராக யாரை நியமிப்பது என்று தெரியாமல் தட்டுத்தடுமாறுகிறார்கள். நாடெங்கிலும் சுவரொட்டிகள்... எல்லா நாட்களும் பத்திரிகைகளில் விளம்பரங்கள்... இந்த விளம்பரங்களுக்கான பணம் எங்கிருந்து வருகின்றது... ? அவர்களது அம்மா அப்பாமார் சேர்த்துவைத்த சொத்துக்கள்தானா அவை? இந்நாட்டு அரசியலில் மாற்றம் தேவை.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எந்தவொரு இனத்தினருக்கும் பாதுகாப்பு இல்லை. இந்நாட்டில் எந்தவிதப் பீதியுமில்லாமல், சுதந்திரமாக வாழ்ந்த வாழ்வு இல்லாதொழிந்தது... எங்கும் பயம்... பயம்... கத்தோலிக்கர்களுக்கு அவர்களுடைய பள்ளிகளுக்கு போக முடியாதிருக்குமாயின், பெளத்தர்களுக்கு விகாரைகளுக்குப் போக முடியாதிருக்குமாயின், இந்துக்களுக்கு கோவில்களுக்குப் போக முடியாதிருக்குமாயின், முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல்களுக்குப் போகமுடியாதிருக்குமாயின் என்ன சுதந்திரம் இந்த நாட்டில் எனக் கேட்கிறேன் எனவும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com