Thursday, August 22, 2019

"கிழக்கை மீட்போம்" -- யார், யாரிடமிருந்து மீட்பது? அறுமக்குட்டி போடி

'ஒரு தேசப்பற்று மிக்க அரசியல்வாதி கிடைத்தால் உலகப் புகழ் மிக்க நகரங்களில் ஒன்றான வெனிஸ் நகருக்கு நிகராக மட்டக்களப்பு எழுந்து நிற்க முடியும்’

அண்மைக்காலமாக கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் கிழக்கு என்கின்ற சொல்லாடல் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை காலமும் 'கிழக்கு என்று பேச்சை எடுத்தாலே அது பிரதேசவாதமாகும்' என்கின்ற ரீதியில் அது பார்க்கப்பட்டு வந்தது.

ஆனால் இன்றோ கிழக்கு மாகாணத்தின் பிரச்சனைகள் வேறானவை, கிழக்கில் இருப்பவர்களே கிழக்கு மாகாண அரசியலை பற்றிய முடிவுகளை எடுக்க முடியும், கிழக்குக்கு வெளியே இருக்கும் தலைவர்களெடுக்கும் முடிவுகள் கிழக்கின் பல்லின சூழலுக்கு பொருத்தமானவையல்ல, கிழக்கின் அரசியல்வாதிகள் ஒருமித்து கைகோர்க்க வேண்டும் என்றவாறாகவெல்லாம் எழுத்துக்களும் பேச்சுக்களும் உரையாடல்களும் விவாதங்களும் நிறையவே நடந்தேறுகின்றன.

இதன் அடிப்படையில்தான் 'கிழக்கை மீட்போம்'என்கின்ற கோஷம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்போன்ற கிழக்கை அடிப்படையாக கொண்ட கட்சியினரால் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து பலருடனும் ஒரு வினவலுக்காக உரையாடியபோது மீண்டும் ஒரு தமிழன் கிழக்கின் முதல்வராக வேண்டும் என்பதையிட்டு சிலர் கருத்து தெரிவித்தனர். வேறு சிலரோ முஸ்லிம்களிடமிருந்து கிழக்கை மீட்பதற்கு ஒரு தலைவன் தேவை என்கின்றனர். இன்னும் சிலரோ யாழ்ப்பாண தலைமைகள் எம்மை தீர்மானிக்கும் பொருத்தப்பாடற்ற வரலாற்று தொடர்ச்சியிலிருந்து கிழக்கை மீட்க வேண்டும் என்கின்றனர். இவ்வாறாக கிழக்கை மீட்போம் என்கின்ற கோசம் பல திசைகளிலுமிருந்து திரட்சி பெற்று வளர்ந்து வருவது தெரிகின்றது.

இதில் எது சரியானதென்றோ எது பிழையானதென்றோ இல்லை. எல்லாமே சாராம்சத்தில் சரியானவைதான். ஆனால் அவற்றையிட்ட தெளிவான புரிதல்கள் பலரிடம் இல்லாமையை அவதானிக்க முடிகின்றது.

கிழக்கு மாகாண மக்கள் பல வழிகளிலும் அடக்கப்பட்டு முடக்கப்பட்டு கிடக்கின்றனர் என்பது உண்மை. ஒரு சமூகம் தான் ஒடுக்குமுறைக்குள்ளாவதை விட தாம் ஒடுக்கப்படுகின்றோம் என்பதை உணராத சமூகமாக கிடப்பது சாபக்கேடானது. அந்த வகையில் கிழக்கு தமிழர்கள் தாம் நீண்டகாலமாக ஒடுக்கப்பட்டு வருகின்றோம் என்பதை உணரத் தலைப்பட்டிருப்பது முக்கியமானதொரு விழிப்புணர்வாகும்.

ஆனால் 'இருந்த காக்காயை வந்த காக்காய்' துரத்துவது போல இலங்கையின் பேரினவாத சக்திகளுக்கெதிராக எழுந்த போராட்டம் இன்று வலுவிழந்த நிலையில் புதிய புதிய பிரச்சனைகள் மேலெழுந்துள்ளன. அதனுடாக பிரதான ஒடுக்குமுறையான சிங்கள பேரினவாதம் மறக்கடிக்கப்பட்டு, உள்ளக முரண்பாடுகள் தலைதூக்கியுள்ளன. ஆனால் சிங்கள மேலாதிக்க சக்திகளின் ஒடுக்குமுறைகள் வெவ்வேறு வழிகளில் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இவையனைத்தையும் ஒருமித்து எதிர்கொள்ளுவதென்பது எப்படி என்பதுதான் கிழக்கு மாகாண மக்கள் அனைவரின் மீதான எதிர்கால சவாலாகும். முஸ்லிம்களோடு உருவாகிவரும் முரண்பாடுகளை பலர் முஸ்லீம் மக்களுக்கெதிரான உணர்வுகளோடு அணுக முயற்சிக்கின்றனர். ஆனால் முஸ்லிம்களின் பெயரில் அரசியல் தலைமைகளாகவும் நிர்வாக அதிகாரிகளாகவும் இருக்கின்ற அதிகார வர்க்கத்தினரே நாம் எதிர்கொள்ள வேண்டியவர்களாகும். அதேபோன்று தான் யாழ்ப்பாண மேலாதிக்க அணுகுமுறை அரசியல் என்பதே நமது எதிரியாகும், மாறாக சாதாரண யாழ்ப்பாண மக்களோ, முஸ்லீம் மக்களோ நமது எதிரிகளாக இருக்க முடியாது.

அது சரி இவற்றையெல்லாம் கருத்தில் கொள்கின்ற, கையாளுகின்ற திறமைகொண்ட கிழக்கு தலைமை ஒன்று மேலெழுந்து அதிகாரத்துக்கு வருகின்றபோது கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டு விடுமா? என்பதே இன்றுள்ள கேள்வியாகும். அதிகாரத்தில் பங்கெடுப்பதென்பது அவசியமானதுதான். ஆனால் சாமானிய மக்களின் அரசியல் பிரதிநிதியாக அத்தகைய தலைமைகள் செயற்படுகின்றபோதுதான் அது அம்மக்களை மீட்டெடுப்பதாக அமைய முடியும். ஆனால் நமது கடந்த கால தலைமைகளில் பெரும்பாலானவை கட்சி நலன்களையும் சொந்த நலன்களையும் மட்டுமே முன்னுரிமைப்படுத்தினார்கள். இனவாத அணிதிரட்டலில் 'தமிழர் ஒற்றுமை', 'தமிழ் பிரதிநிதித்துவம்' என்பதையிட்டு மட்டுமே அக்கறை கொண்டனர். ஒடுக்கப்படும் சாமானியமக்கள் இவர்களால் பயனடையவில்லை.

ஏனெனில் வெகுஜன மக்கள் இன, பிரதேச அடையாளங்களினால் மட்டும் ஒடுக்கு முறைக்குள்ளாக்கப்படவில்லை. அவர்கள் நாளாந்த சமூக, பொருளாதார, பாலின மற்றும் இன்னபிற சுரண்டல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள். அவர்களது வளங்கள் உள்ளுர் முதலாளிகளையும் தாண்டி தற்போது பன்னாட்டு நிறுவங்களின் நிதி மூலதனங்கள் ஆதிக்கத்துக்குள் அகப்படத் தொடங்கியுள்ளன. என்ஜிஓக்கள், தொழில் பேட்டைகள், அபிவிருத்திகள், என்கின்ற பெயர்களில் உலகமயமாதல் எம்மையும் பீடிக்க தொடங்கியுள்ளது.

இவற்றிலிருந்தெல்லாம் எமது மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்கின்ற குறைந்தபட்ச தேடுதல் கொண்டவர்கள் தலைமைக்கு வருவது அவசியம். அவர்களால்தான் கிழக்கை மீட்க முடியும்.

எமது மண்ணில் பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் நடத்தப்படுகின்ற பாலியல் வன்முறைகளின் களமாக எமது பிரதேசங்கள் மாறிவருகின்றன. பண்பாடு குடும்ப கெளரவம் என்கின்ற போர்வையில் இவையெல்லாம் அடக்கி வாசிக்கப்படுவதும் மறைக்கப்படுவதும் நடந்தேறுகின்றது. வேதனைக்குரிய இந்த நிலைமைகளை எப்படியும் மாற்றியாகவேண்டும் என்கின்ற அக்கறை கொண்ட மனிதர்கள் அதிகார பீடங்களை நோக்கி மேலெழ வேண்டும் அதுவே கிழக்கு மீட்சிக்கு வழிகாட்டும்.

போட்டி போட்டுக்கொண்டு ஆலயங்களை கட்டுகின்றோம் என்று வானளாவிய கோயிற் கோபுரங்கள் மூலை முடுக்குகளிலேயெல்லாம் எழுந்து நிற்கின்றன. ஒவ்வொரு தமிழ் கிராமங்களின் உழைப்பும் வருடாவருடம் கோவில் திருவிழாக்களில் கொட்டி கரியாக்கப்படுகின்றன. போதாமைக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் குடிப்பெருமை, குலப்பெருமைகளை தூக்கி நிறுத்துவதற்கு லட்ஷக்கணக்கில் கோவில்களின் அலங்காரங்களை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். அனைத்துக்கும் மேலாக எமது எம்பிமாரின் மிகப்பெரிய சாதனைகள் கோயிலுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குவது என்பதாக மாறிவருகின்றது.

'உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பே ஆலயம்' என்கிறார் திருமூலர். 'வெள்ளைநிறப்பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது' என்றார் விபுலானந்தர். எனவே கோயில்களை நோக்கி கொட்டப்படும் கோடிக்கணக்கான நிதிகள் அனைத்தும் விரயமானவை. இந்த நிதிவளங்களை அபிவிருத்தி நோக்கிச் செலுத்துவோம், சமூகநல மேம்பாடும் வாழ்வியலில் சமத்துவமும் நோக்கிச் செலவு செய்வோம் என்று சிந்திக்க தெரிந்த தலைவர்களாலேயே கிழக்கு விடுதலையாகும்.

காலையில் எழுந்து பள்ளிக்கு செல்லமுன்னர் ஒரு பாண்துண்டு வாங்க முடியாத குழந்தைகள் இன்னும் நமதூர்களில் உண்டு. ஒரு கனிஷ்ட பாடசாலைக்காக பல கிலோ மீற்றர்கள் நடந்து செல்லவேண்டிய நிலையில் சில குக்கிராமத்து மாணவர்கள் இன்றும் கிழக்கில் இருக்கின்றார்கள். ஒழுங்கான உடையணிந்து, அலங்கரித்து அறியாத சிறுவர் சிறுமியர் இன்னும் எம்மிடையேதான் வாழ்கின்றனர். குடிநீர் இன்றி பிளாஸ்ட்டிக் குடங்களுடன் அலையும் கிராமங்கள் இந்தியாபோல் இங்கும் அதிகரித்து வருகின்றன. இவையெல்லாம் தீர்க்கப்படாமல் நமது இனம் தலை நிமிர்ந்து வாழ முடியாது என்று வீறு கொண்டெழுகின்ற தலைவர்களாலேயேதான் கிழக்கை விடுவிக்க முடியும்.

அத்தனைக்கும் மேலாக கிழக்கு என்பது தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர், பறங்கியர் என்கின்ற பல்லினங்களின் சொத்தாகும். இங்கே யாரும் ஓரினத்துக்கு தலைவராக இருந்து கொண்டு கிழக்கின் தலைவராக முடியாது. ஆனால் துரதிஷ்ட வசமாக இப்போதெல்லாம் எம்மிடமிருப்பது இனத்தலைவர்களும் ஊர்த்தலைவர்களும் மட்டுமேயாகும். இந்நிலை மாற்றப்பட்டு சக இன மக்களாலும் போற்றப்படத்தக்க தலைவர்கள் உருவாக வேண்டும். ஒரு நல்லையாமாஸ்ட்டர் போல, ஒரு தேவநாயகம் போல ஒரு இராஜதுரை போல, கிழக்கை மீட்க பெருந்தலைவர்களே தேவை. எவரொருவர் எல்லா இனங்களையும் அரவணைத்து ஆட்சி செய்யும் வல்லமையை பெறுகின்றாரோ, எவரொருவரால் இனங்கள் என்கின்ற குச்சி வேலிகளைத்தாண்டி கிழக்கில் வாழும் ஒவ்வொரு குடிமகனிடத்திலும் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் சம்பாதிக்க முடிகின்றதோ அவராலேயே கிழக்கை முழுமையாக மீட்க முடியும். அதுமட்டுமல்ல மறைந்து போன மட்டக்களப்பு பொன்னுத்துரை என்கின்ற எழுத்தாளன் சொல்வான் 'ஒரு தேசப்பற்று மிக்க அரசியல்வாதி கிடைத்தால் உலகப் புகழ் மிக்க நகரங்களில் ஒன்றான வெனிஸ் நகருக்கு நிகராக மட்டக்களப்பு எழுந்து நிற்க முடியு'மென்று.

ஆம், அப்போதுதான் கிழக்கின் விடுதலை சாத்தியமாகும்.

அரங்கம் பத்திரிகையில் இருந்து.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com