Friday, August 2, 2019

இஸ்லாமிய பயங்கரவாதிகள் தொடர்ந்தும் மறைந்திருந்து செயற்படுகின்றனர். இராணுவத் தளபதி சாட்சி.

சில இஸ்லாமிய பயங்கரவாத சந்தேக நபர்கள் இன்னமும் மறைந்துள்ளனர். அவர்கள் இன்னும் இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முன்பாக நேற்றுமுன்தினம் இரண்டாவது முறையாக சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

“இந்த அச்சுறுத்தலை இல்லாமல் செய்வதற்கு, ஒரு வாரம், ஆறு மாதங்கள் அல்லது ஆறு ஆண்டுகள் ஆகுமா என்று என்னால் கூற முடியாது.

ஆனால், இந்த அச்சுறுத்தலை ஒரு குறுகிய காலத்திற்குள் தோற்கடிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நீங்கள் தேசிய பாதுகாப்பை இராணுவத்திடம் மட்டும் ஒப்படைக்க முடியாது, அனைவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. விழிப்புடன் இருக்க வேண்டும்.

அமெரிக்காவின் சிஐஏ, மற்றும் இந்தியாவின் றோ ஆகிய அமைப்புகள் 10 அல்லது 15 ஆண்டுகளை எடுத்துக் கொண்டுள்ளன என்று கூறினீர்கள். எமது நாட்டை எடுத்துக் கொண்டால், மூலோபாய அமைவிடத்தைப் பொறுத்தவரை, மிகவும் முக்கியமானது. இதற்கு எங்களுக்கு அதிக நேரம் எடுக்கும்.

அனைத்து மூலங்களில் இருந்தும் புலனாய்வுத் தகவல்களை பெறுவதற்கும் அதைச் செயலாக்குவதற்கும் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும்.

அந்தப் பதவியில் நியமிக்கப்படும், நபருக்கு அவரது அரசியல் கருத்தைப் பொருட்படுத்தாமல், அரசாங்கத்தின் பகுப்பாய்வாளராக செயற்பட அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அவரது கண்டறிவுகள் குறித்து நடவடிக்கை எடுப்பற்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

தீவிரவாத இஸ்லாமிய வலையமைப்பின் பரவல் தொடர்பான தகவல்களை நாங்கள் பெற்றிருந்தோம். அதன் ஆபத்தை நாங்கள் உணர்ந்து மேலதிக புலனாய்வாளர்களை நியமித்து தகவல்களை சேகரித்தோம்.

நாங்கள் அதை செயற்படுத்தி, சரிபார்த்தோம். அதுகுறித்து பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை அனுப்பினோம். தேசிய புலனாய்வு பிரிவு தலைவர், அரச புலனாய்வு சேலையின் பணிப்பாளர், காவல்துறை மா அதிபருக்கும் தகவல்களை வழங்கினோம்.

சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லாததால் சில கைதுகளை நாங்கள் பரிந்துரைத்தோம். இப்போது, அவசரகால சட்டங்களின் கீழ் எம்மால் கைது செய்ய முடியும். அப்போது, சந்தேக நபர்களை காவல்துறையினர் தான் செய்திருக்க வேண்டும். எங்கள் கண்டறிவுகளை அவர்களுக்குத் தெரிவித்தோம்.

நாங்கள் அந்த வலையமைப்பை அறிந்திருந்ததால், இதுபோன்ற தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதால், தாக்குதல்கள் நடந்த சில மணி நேரங்களிலேயே கைதுகள் இடம்பெற்றன. இன்னும் சில தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

இஸ்லாமிய தீவிரவாத செயற்பாடுகள் குறித்து. உயர் அதிகாரிகளுக்கு நாங்கள் 2017ஆம் ஆண்டில் இருந்து அறிக்கைகளை அனுப்பியிருந்தோம். இதுகுறித்த தகவல்கள் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

அங்கு அதுபற்றிய கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன. ஆனால், அந்தத் தகவலைக் கொண்டு அவர்கள் என்ன செய்தார்கள் என்று என்னால் சொல்ல முடியாது.

அவர்கள் அதை எவ்வாறு செயற்படுத்தினார்கள் அல்லது நாங்கள் அவர்களிடம் பரிந்துரைத்த நபர்களை அவர்கள் ஏன் கைது செய்யவில்லை என்பது எங்களுக்குத் தெரியாது.

பெரும்பாலான நேரங்களில் நாங்கள் சில உண்மைகளை அறிவித்தது மட்டுமல்லாமல், சில பயங்கரவாத சந்தேக நபர்களை கைது செய்யவும் பரிந்துரைத்தோம். ஆனால் அவர்களால் பின்தொடர்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்பது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை.

இராணுவத்துக்கும், அரச புலனாய்வு சேவை பணிப்பாளருக்கும் இடையிலான தொடர்புகள் மிகவும் வழக்கமானதாக உள்ளது. அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளருடன் நெருக்கமாக இணைந்து செயற்படுகிறோம்.

தொலைபேசி மூலம் பேசிக் கொள்வோம். இரகசிய விவகாரங்கள் குறித்து வட்ஸ்அப் வைபரில் பேசுவோம். சந்தித்தும் பேசிக் கொள்வோம்.

இராணுவப் புலனாய்வுத் துறையின் புலனாய்வு எச்சரிக்கைகளை அரச புலனாய்வு சேவை நம்பவில்லை என்று கருதும் படி, இருதரப்புக்கும் அவநம்பிக்கை இருந்தது என்ற கருத்தை நான் கூறியதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ, சாட்சியம் அளித்துள்ளார் என நான் இப்போது தான் அறிகிறேன்.

அந்த அவநம்பிக்கை அரச புலனாய்வுச் சேவையுடன் இருக்கவில்லை. பயங்கரவாத விசாரணைப் பிரிவுடன் தான் பிரச்சினை இருந்தது.

நான் அவரிடம் குறிப்பிட்டது, அரச புலனாய்வுச் சேவையுடன் அல்ல, பயங்கரவாத விசாரணைப் பிரிவுடன் இருந்த அவநம்பிக்கை பற்றித் தான்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவு எங்களுடன் ஒத்துழைக்கவில்லை. போருக்குப் பின்னர், வெடிபொருட்களை மீட்டெடுப்பதற்கும் சில கைதுகளை செய்வதற்கும் பல நடவடிக்கைகள் இருந்தன. அந்த நடவடிக்கைகளின் போது பயங்கரவாத விசாரணைப் பிரிவு எங்களுடன் நன்றாக ஒத்துழைக்கவில்லை.

விசாரணைகள் நீதிமன்றங்களுக்கு முன்பாக இருப்பதால், தனிநபர்கள் குறித்து நான் பெயரிட விரும்பவில்லை. ஆனால் சில வழக்குகள் தொடர்பாக அவநம்பிக்கை இருந்தது.

உதாரணமாக, கிளிநொச்சியில் தற்கொலை அங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து. நாங்கள் விசாரணையைத் தொடங்கியபோது, எங்கள் செயற்பாடுகள் தொடர்பான சிக்கல்கள் இருந்தன.

ஏப்ரல் 21 அன்று காலை அல்லது அதற்கு முந்தைய மாலை தாக்குதல் எச்சரிக்கை எதும் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கவில்லை. இதுபோன்ற தகவல்கள் இருந்திருந்தால், அது எங்களுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. அது தவறு.

இப்போது பாதுகாப்பு அமைச்சும், சட்டம் ஒழுங்கு அமைச்சும் ஒரே அமைச்சாக இருப்பதால், காவல்துறை மற்றும் பாதுகாப்பு பிரிவுகள் இணைந்து செயற்படுவது சுலபமாகியுள்ளது. அனுமதிகளையும் உத்தரவுகளையும் ஒரே இடத்தில் இருந்து பெற்று, அதற்கு அறிக்கை சமர்ப்பிக்க முடிகிறது.

தீவிரவாத சக்திகள் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபைக்கு அறியத் தரப்பட்டும், அதுபற்றி விவாதிக்கப்படவில்லை. அது தான் பிரச்சினை.

அறிக்கைகளின் அடிப்படையில் கைது செய்வதற்கு பாதுகாப்பு செயலர் எமக்கு அறிவுறுத்த வேண்டிய தேவையில்லை. இதுகுறித்த தகவல் வரும் போதும், நடவடிக்கை எடுப்பது இராணுவம் மற்றும் காவல்துறையின் கடமையாகும்.

படைகளின் தலைவர்களாகிய நாம் அந்த முடிவை எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் சட்டத்தின் கட்டமைப்பிற்குள் செயற்படுகிறோம். நாங்கள் தேசிய பாதுகாப்புச் சபையில் பெறும் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உரிமை உள்ளது.

பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் இணைந்து பணியாற்றியுள்ளோம். கடந்த பாதுகாப்பு சபை கூட்டம் மற்றும் புலனாய்வு ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் போது கூட, நாங்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக பணியாற்றி ஒருங்கிணைத்தோம்.

இது எங்களுக்கும் காவல்துறையினருக்கும் அதிக வாய்ப்புகளைப் பெற்று தந்துள்ளது. நாங்களும் கூட காவல்துறைக்கு பயிற்சி அளித்து வருகிறோம். அச்சுறுத்தல் நிலை குறைந்து விட்டது, ஆனால் நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம்.” என்றும் அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com