Saturday, July 6, 2019

அகதிகள் மீதான உலகளாவிய போர்! Will Morrow

உலகெங்கிலுமான அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களும் அகதிகளைத் திட்டமிட்டு முறைகேடாக கையாள்வதன் மீதும் மற்றும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதன் மீதும் எழுந்த பாரிய சீற்றத்தை, கடந்த இரண்டு வாரகால தொடர்ச்சியான சம்பவங்கள் எடுத்துக்காட்டியுள்ளன.

அகதிகள் மீட்பு கப்பல் Sea Watch 3 இன் 31 வயதான ஜேர்மன் கடல் மாலுமி கரோலா ராக்கேற்ற (Carola Rackete) ஐ இத்தாலிய அரசாங்கமும் மற்றும் அதன் பாசிசவாத உள்துறை அமைச்சர் மத்தேயோ சல்வீனியும் சனிக்கிழமை கைது செய்ததன் மீது நூறாயிரக் கணக்கானவர்கள் அவர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஜூன் 12 இல் மத்திய தரைக்கடலில் தவித்துக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 52 ஆபிரிக்க அகதிகளை மீட்டு, அவர்களை இத்தாலிய எல்லையில் லாம்பெடுசாவுக்கு பாதுகாப்பாக கொண்டு சேர்த்ததே ராக்கேற்ற மீது கூறப்படும் "குற்றமாக" இருந்தது.

இரண்டு வாரங்களாக, Sea Watch கப்பல் ஐரோப்பிய ஒன்றியத்தில் தரை ஒதுங்க ஒரு துறைமுகத்தைத் தேடி மத்திய தரைக்கடல் நெடுகிலும் பயணம் செய்திருந்தது. பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் உட்பட எந்த ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கமும் அந்த ஒருசில டஜன் அகதிகளை ஏற்கவில்லை — இதனால் தஞ்சம் கோரி வருபவர்களின் அனைத்து கப்பல்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ள இத்தாலிய அரசாங்கத்தின் சட்டவிரோத தடையை மீறி, லாம்பெடுசாவில் தரை ஒதுங்குவதைத் தவிர அந்த கப்பல் சிப்பந்திகள் வேறு வழியின்றி விடப்பட்டனர்.

இத்தாலிய நீதிபதிகள் நேற்றிரவு ராக்கேற்றவை விடுவிக்க உத்தரவிட்டமை, தொழிலாள வர்க்கத்தில் அப்பெண்மணிக்கு இருந்த அளப்பரிய மிதமிஞ்சிய மக்கள் ஆதரவுக்கு ஒரு விடையிறுப்பாக இருந்தது. நேற்றைய தினமே, Sea Watch இன் சட்டபூர்வ அபராதங்களுக்கு உதவ ஒரு ஜேர்மன் நகைச்சுவையாளர் ஏற்படுத்திய ஒரு நிதியம் 800,000 யூரோக்களுக்கும் அதிகமாக நிதி திரட்டியதுடன், பேஸ்புக் மூலமாக 25,000 இக்கும் அதிகமான நன்கொடையாளர்களிடம் இருந்து மற்றொரு 400,000 க்கும் அதிகமான யூரோக்கள் திரட்டப்பட்டன. ராக்கேற்றவை உடனே விடுவிக்க வேண்டுமென கோரி 330,000 க்கும் அதிகமானவர்கள் ஒரு மனுவில் கையெழுத்திட்டனர்.

ஆகவே அந்த இத்தாலிய தீர்ப்பானது அகதிகளைக் காப்பாற்ற முயல்பவர்கள் அனைவரையும் இலக்கு வைத்த ஒடுக்குமுறையிலிருந்து எந்த வழியுமின்றி ஒரு பின்வாங்கலாகும். ராக்கேற்ற இத்தாலியில் இருந்து வெளியேற்றப்பட உள்ளார் என்பதோடு, சட்ட அச்சுறுத்தலின் கீழ் உள்ளார். இத்தாலி, 14,000 பேரை காப்பாற்றிய லூவெம்பா (Luvempa) கப்பல் மாலுமி பியா கிளெம்ப் (Pia Klemp) மீது, “சட்டவிரோத குடியேற்றத்திற்கு உதவியதற்காக மற்றும் துணை போனதற்காக" என்று குற்றஞ்சுமத்தி உள்ளது, இவர் 2017 இல் கைது செய்யப்பட்டார். இப்பெண்பணி 20 ஆண்டுகள் சிறை தண்டனையை முகங்கொடுக்கிறார்.

வெறுப்பூட்டும் பாசாங்குத்தனத்துடன், ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சி தலைவர் பிராங்க் வால்டர்-ஸ்ரைன்மையர் மற்றும் பிரெஞ்சு உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் காஸ்ட்டனர் உள்ளடங்கலாக ஐரோப்பிய அதிகாரிகள் மென்மையாக சல்வீனியை விமர்சித்ததுடன், அகதிகளுக்காக முதலை கண்ணீர் வடித்தனர். ஆனால் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி முன்னணியில் நிற்க, ஐரோப்பிய ஒன்றியம் தான் முள்கம்பி சுருள் வடம் மற்றும் எந்திர துப்பாக்கிகளுடன் "ஐரோப்பாவை சுற்றிய கோட்டை" ஐ எழுப்பியது என்பதும், மத்திய தரைக்கடலில் மீட்பு நடவடிக்கைகளை நிறுத்தியது என்பதும், ஐரோப்பாவின் தெற்கு கடற்பகுதியை ஒரு பரந்த கல்லறையாக மாற்றியது என்பதும் ஒவ்வொருவருக்கும் தெரியும். சல்வீனி, ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் அப்பட்டமான மற்றும் குரூரமான கொள்கையை மட்டுமே வெளிப்படுத்துகிறார்.

2015 இல், ஐரோப்பிய ஒன்றியம் "ட்ரிட்ரொன் நடவடிக்கை" என்பதை அறிவித்தது, அதேவேளையில் அது ஐரோப்பாவுக்குத் தப்பி வரும் அகதிகளைப் பிடித்து அவர்களை லிபியாவின் சித்திரவதை முகாம்களுக்கு திரும்ப அனுப்ப லிபிய ஆயுதக் குழுக்களை கடற்படை ரோந்துப்படையாக பயிற்சி அளித்தது. அத்தகைய முகாம்களில் சித்திரவதை, கற்பழிப்பு, படுகொலை மற்றும் அகதிகள் அடிமைகளாக விற்கப்பட்டதற்கான ஆதாரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் அதன் மீட்பு நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்ட அதேவேளையில், மனிதாபிமான அரசு-சாரா அமைப்புகளைச் சேர்ந்த கப்பல் சிப்பந்திகளும் கப்பல் மாலுமிகளும் வழக்கில் இழுக்கப்பட்டு, அவர்களின் கப்பல் ஓட்டும் உரிமைகள் பறிக்கப்பட்டன.

கடந்த மூன்றாண்டுகளில், குறைந்தபட்சம் 14,000 பேர் ஐரோப்பா வந்தடையும் முயற்சியில் மத்திய தரைக்கடலில் மூழ்கி இறந்துள்ளனர். அகதிகள்-சார்பான ஸ்பானிய அமைப்பு Caminando Fronteras கடந்த வாரம் வெளியிட்ட ஓர் அறிக்கை, ஜனவரி 2018 இல் இருந்து ஜூன் 2019 வரையில் மொரோக்கோ மற்றும் ஸ்பெயினுக்கு இடையே ஜிப்ரல்தர் ஜலசந்தியில் மட்டும் 70 கப்பல் கவிழ்வுகளில் குறைந்தபட்சம் 1,020 பேர் மூழ்கி உயிரிழந்திருப்பதாக கண்டறிந்தது.

1930 களின் ஐரோப்பாவில் நாஜி ஆட்சியின் அண்மித்து-நிச்சயமான மரணத்திலிருந்து தப்பி வந்த யூதர்களுக்கு சர்வதேச அளவில் அரசாங்கம் முகம் திருப்பி எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் அகதிகளுக்கு ஒரு சேதியை அனுப்ப பாரிய படுகொலை கொள்கை ஒன்றை ஏற்று வருகிறது: அதாவது, ஐரோப்பாவில் தஞ்சமடைவதற்கான அவர்களின் சட்டபூர்வ ஜனநாயக உரிமையைப் பெறுவதற்கு முயல்வது, கடலில் மூழ்கி உயிரிழப்பதற்கு இட்டுச் செல்லக்கூடும்.

அமெரிக்காவில், ட்ரம்ப் நிர்வாகம் அந்நாட்டிற்கு உள்ளேயும் மற்றும் அமெரிக்க-மெக்சிகோ எல்லையை ஒட்டியும் புலம்பெயர்ந்தோர் அடைப்பு முகாம்களின் ஒரு வலையமைப்பை உருவாக்கி உள்ளது, கடந்த வாரம் டெக்சாஸில் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு விஜயம் செய்த ஒரு குழந்தைகளுக்கான மருத்துவர் டாக்டர் லூசியோ சேவியர் அவை பெரிதும் "சித்திரவதை மையங்களுக்கு" ஒத்திருப்பதாக கூறினார், அந்தளவுக்கு அங்கே நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளன.

நேற்று, ஜனநாயகக் கட்சி செனட்டர் அலெக்ஸாண்ட்ரியா-ஒகாசியோ கோர்ட்டெஸ் டெக்சாஸின் ஒரு தடுப்புக்காவல் மையத்திற்கு செய்த விஜயம் குறித்து தெரிவித்தார், அங்கே சிறை அறைகளில் பெண்கள் நீரின்றி அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், கழிவறைகளில் இருந்து நீர் எடுத்து குடிக்குமாறு எல்லை பாதுகாவலர்கள் கூறுவதாகவும் தெரிவித்தார். அதற்கு ஒரு நாள் முன்னதாக, ProPublica ஒரு இரகசிய பேஸ்புக் குழுவை வெளிப்படுத்தியது, அதில் பாசிசவாத எல்லை பாதுகாவலர்கள் புலம்பெயர்ந்தவர்கள் குறித்து வன்மமான ஏளனங்களையும், கோர்ட்டெஸ் விஜயத்திற்கு முன்னதாக அவருக்கு எதிராக பாலியல் அச்சுறுத்தல்களையும் பதிவிட்டிருந்தனர்.

ட்ரம்பின் பாசிசவாத குடியேற்ற கொள்கைகள் மீது மக்களின் மனக்குமுறலும் எதிர்ப்பும், ஞாயிறன்று நியூ ஜெர்சியின் ICE தடுப்புக்காவல் மையத்திற்கு வெளியே 200 இக்கும் அதிகமான அமெரிக்க யூதர்கள் "மீண்டும் ஒருபோதும் வேண்டாம் என்றால் இப்போதே வேண்டாம் என்று அர்த்தம்!” என்று கோஷமிட்டவாறு நடத்திய ஓர் ஆர்ப்பாட்டத்தில் எடுத்துக்காட்டப்பட்டது. முப்பத்தி ஆறு பேர் கைது செய்யப்பட்டனர், அதில் கைது செய்யப்பட்ட ஒரு இளம் பெண் போராட்டக்காரர் அவர் "நல்லதாக" உணர்வதாக தெரிவித்தார், ஏனென்றால் நாஜிக்களுக்கு எதிராக சண்டையிட்ட அவரின் பாட்டனார்கள் "சித்திரவதை முகாம்களுக்கு எதிராக நான் எதிர்த்து நிற்பதை விரும்பி இருப்பார்கள்,” என்றார்.

அகதிகள் மீதான உலகளாவிய தாக்குதல் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைக் கடந்தும் தொலைதூரத்திற்கு விரிகிறது. ஜூன் 27 இல், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆஸ்திரேலிய தாராளவாத/தேசிய கூட்டணி அரசாங்கம் மற்றும் எதிர் கட்சியான தொழிற் கட்சியின் புலம்பெயர்வோர்-விரோத கொள்கைகளைப் பாராட்டினார். இருகட்சிகளது ஆதரவுடன் கூடிய ஆஸ்திரேலியாவின் இறையாண்மை எல்லைகள் நடவடிக்கை கொள்கையில் இருந்து "நிறைய கற்றுக் கொள்ள முடியும்" என்று ட்ரம்ப் அறிவித்தார், அக்கொள்கை ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயலும் அகதிகள் அனைவரையும் சர்வதேச சட்டத்தை மீறி தடுப்பதற்கும் மற்றும் இடைமறிப்பதற்கும் இராணுவத்தைப் பயன்படுத்துகிறது.

அகதிகள் மீதான தாக்குதல் ஓர் உலகளாவிய நிகழ்வுப்போக்காக உள்ளது என்ற உண்மை, அது ட்ரம்ப் மற்றும் சல்வீனி போன்ற தனிப்பட்ட அரசியல்வாதிகளின் பாசிசவாத தனிமனிதயியல்புகளின் காரணமாக அல்ல என்பதை எடுத்துக்காட்டுகிறது. அது குறிப்பாக முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையின் ஒரு புதிய, வரலாற்றுரீதியிலான முறிவின் படுமோசமான ஒரு வெளிப்பாடாகும். அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய ஒன்றிய ஏகாதிபத்திய கூட்டாளிகள் மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் தொடுத்த ஒரு கால் நூற்றாண்டுகால போரால் தோற்றுவிக்கப்பட்ட சமூக முறிவு மற்றும் பாரிய படுகொலைகளில் இருந்து பத்து மில்லியன் கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் தப்பிக்க முயல்கின்றனர்.

இரண்டாம் உலக போருக்குப் பின்னர் வேறெந்த காலத்திலும் இல்லாதளவில் இன்று அதிக அகதிகள் உள்ளனர். கடந்த வாரம் பிரசுரிக்கப்பட்ட ஐ.நா. அறிக்கை ஒன்று உலகெங்கிலும் பலவந்தமாக இடம் பெயர்த்தப்படும் மக்களின் எண்ணிக்கை 2009 இல் 43.3 மில்லியனாக இருந்ததில் இருந்து 2018 இல் 70.8 மில்லியனாக இரட்டிப்பாகி இருப்பதாக குறிப்பிட்டது. 2018 இல் ஒவ்வொரு நிமிடமும், 25 பேர் அவர்களின் வீடுகளை விட்டு தப்பி செல்ல நிர்பந்திக்கப்பட்டிருந்தனர். மனிதகுலத்தில் 1 சதவீதத்தினருக்கும் சற்று குறைவானவர்கள், ஒவ்வொரு 108 பேருக்கு ஒருவர், அகதிகளாக உள்ளனர்.

1940 இல், ஐரோப்பாவின் பாசிசவாத ஆட்சிகள் யூதர்கள் மீது "இறுதி தீர்வு" இனப்படுகொலை தொடங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தலைசிறந்த ரஷ்ய புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எச்சரித்தார்: “இன்று வீழ்ச்சியடைந்து வரும் முதலாளித்துவ சமூகம் அதன் எல்லா துவாரங்களிலும் யூதர்களை நசுக்கித் தள்ள வேட்கை கொண்டிருந்தது; இரண்டு பில்லியன் உலக மக்கள் தொகையில் பதினேழு மில்லியன் பேருக்கு, அதாவது ஒரு சதவீதத்திற்கும் குறைவானபேருக்கு, இந்தப் பூமியில் இடம் காண இயலவில்லை! பரந்து விரிந்திருக்கும் நிலப்பகுதிகளுக்கும், மனிதனுக்காக பூமியையும் வானத்தையும் கூட வென்றுவிட்டிருக்கக் கூடிய தொழில்நுட்ப அற்புதங்களுக்கும் இடையே, முதலாளித்துவ வர்க்கம் நமது கிரகத்தை ஓர் துர்நாற்றமெடுக்கும் சிறைச்சாலையாக மாற்றிவிட்டிருக்கிறது” என்றார்.

இன்று முதலாளித்துவ அரசுகள், ஆழமடைந்து வரும் உலகளாவிய ஒழுங்கமைப்பு நெருக்கடியையும் அதிகரித்து வரும் உள்நாட்டு அரசியல் எதிர்ப்பையும் முகங்கொடுத்து, 1930 களில் பாசிசவாத வலதைக் குணாம்சப்படுத்திய தேசியவாதம் மற்றும் வெளிநாட்டவர் விரோத மனோபாவத்தின் வகைகளை ஊக்குவித்து வருகின்றன. உலகளவில் மிகக் கடுமையான அகதிகள்-விரோத கொள்கைகள் ஏற்படுவது என்பது வழிவகையாக உள்ளது, அதைக் கொண்டு உலகெங்கிலும் உள்ள ஆளும் உயரடுக்கள் அதிதீவிர வலதைப் புத்துயிரூட்டி வருகின்றன.

1930 களில் யூத-எதிர்ப்புவாதத்தில் இருந்ததைப் போலவே, அகதிகளுக்கு எதிராக திருப்பி விடப்பட்ட எதேச்சதிகார நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நோக்கம் கொண்டவை ஆகும். இன்று அகதிகளுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள், நாளை தொழிலாளர்களுக்கு எதிராகவும் போர், இராணுவவாதம், சிக்கனக் கொள்கைகள் மற்றும் சமூக சமத்துவத்திற்கு எதிரான அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும்.

அகதிகளுக்கு தொழிலாள வர்க்கத்தில் உள்ள பலமான ஆதரவை அணித்திரட்ட முடியும்; அணித்திரட்டப்பட வேண்டும். ஆனால் அகதிகள் மீதான பாசிசவாத தாக்குதல்களுக்கு எதிரான எதிர்ப்பை ஒரு நனவுபூர்வமான சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தைக் கொண்டு ஆயுதபாணியாக்குவதே, காட்டுமிராண்டித்தனம் மற்றும் போருக்குள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நுழைவதிலிருந்து தடுப்பதற்கான ஒரே வழிவகையாகும். இதன் அர்த்தம், முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட சமூக நெருக்கடிக்கு புலம்பெயர்ந்தவர்களை பலிக்கடா ஆக்கும் அனைத்து முயற்சிகளையும் நிராகரிப்பது மற்றும் ஒவ்வொரு தொழிலாளியும், பயணம் மற்றும் வேலை செய்வதற்கான உரிமை உட்பட முழு குடியுரிமைகளுடன் அவர் விரும்பும் இடத்தில் வாழ்வதற்கான அவரின் உரிமைகளைப் பாதுகாப்பது என்பதாகும்.

சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே, பெருவணிக செல்வந்த தட்டுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து சமூகத்தின் ஆதாரவளங்களை விடுவித்து, உலகில் ஒவ்வொரு நபரும் வறுமை மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து சுதந்திரமாகவும் ஓர் உயர்ந்த வாழ்க்கைத் தரத்துடனும் வாழ்வதை உத்திரவாதப்படுத்த முடியும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com