Monday, July 1, 2019

தமிழரசுக் கட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டுள்ளார் சிறிதரன். புதிய நிர்வாக குழுவில் எந்தப்பதவியும் இல்லை!

கடந்த 29 (சனிக்கிழமை) மாலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாதர் முன்னணி மாநாடும், வாலிப முன்னணி மாநாடும் யாழ்.நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றதுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுக்குழுத் தெரிவும் இடம்பெற்றுள்ளது.

இத்தெரிவின்போது தமிழரசுக் கட்சியின் எந்தவொரு பதவிக்கும் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்படாது தூக்கியெறியப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

ஆங்கு இடம்பெற்ற பொதுக்குழு நிர்வாக உறுப்பினர்கள் தெரிவின்போது, கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜாவும் பொதுச் செயலாளராக கி.துரைராஜசிங்கம் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

துணைத் தலைவர்களாக பொன். செல்வராசா மற்றும் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோரும், துணைப் பொதுச் செயலாளர்களாக எம்.ஏ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இணைப் பொருளாளர்களாக பெ.கனகசபாபதி, வ.கனகேஸ்வரன் ஆகியோரும், உப தலைவர்களாக க.துரைரெட்ணசிங்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன், த.குருகுலராஜா, சி.சிவமோகன், அ.பரஞ்சோதி மற்றும் மு.இராஜேஸ்வரன் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

துணைச் செயலாளர்களாக எஸ்.எக்ஸ்.குலநாயகம், ஈ.சரவணபவன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், சி.தண்டாயுதபாணி, சாந்தி சிறீஸ்கந்தராஜா, கே.வி.தவராசா மற்றும் த.கலையரசன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

இத்தெரிவுகளின்போது எந்தவொரு பதவிக்கும் சிறிதரன் தெரிவு செய்யப்படாமைக்கான காரணம், அவர் அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள அதிதீவிர உறவும் , சஜீத் பிறேமதாஸவின் நேரடி முகவராக கிளிநொச்சியில் செயற்பட்டு வருகின்றமையும் கட்சி உறுப்பினர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com