Monday, July 1, 2019

இலங்கையை ஆட்சி செய்ய விரும்பும் கோத்தபய ராஜபக்சவின் எண்ணம் ஈடேறுமா?

இலங்கையில் விடுதலைப் புலிகளை அழித்த பாதுகாப்புத் துறையின் முன்னாள் செயலர் கோத்தபய ராஜபக்ச அதிபர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் குறியாக இருக்கிறார்.

ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவருடைய இறுதிச் சடங்கில் பங்கேற்ற அவருடைய உறவுக்கார பெண்மணி, ``எங்களுக்கு கோத்தபய வேண்டும், கோத்தபய வேண்டும்'' என்று முழக்கமிட்டார்.

இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் முக்கியப் பங்கு வகித்த, போர்க்காலத்தில் பாதுகாப்புத் துறையில் செயலராக இருந்த கோத்தபய ராஜபக்சவைதான் அந்தப் பெண்மணி அவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழ் மக்கள் அவரை வெறுக்கிறார்கள். ஆனால் பெரும்பான்மை சிங்கள மக்கள், குறிப்பாக தீவிர எதிர்ப்பாளர்கள் அவரை ஒரு ஹீரோவாகக் கொண்டாடுகிறார்கள்.

அவருடைய அண்ணன் மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்த காலத்தில் 2005 முதல் 2015 வரையில் பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்தார் கோத்தபய ராஜபக்ச. ஆனால் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், எதிர்ப்பாளர்கள் காணாமல் போனது, சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் போன்ற புகார்கள் அவருடைய பதவிக் காலத்தில் அதிகமாக இருந்தன.

கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலைப் படை தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களை அடுத்து, தீரமிக்கவராகக் கருதப்படும் கோத்தபய ராஜபக்சவால் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழித்துவிட முடியும் என்று இலங்கை மக்கள் பலரும் கருதுகின்றனர்.

தாக்குதலைத் தொடர்ந்து கொழும்புவில் தனது இல்லத்தில் பிபிசிக்கு பேட்டியளித்த ராஜபக்ச, ``எங்களுடைய ஆட்சிக் காலத்தில் தேசத்தின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்தோம்'' என்று கூறினார். ``இந்த அரசு அப்படிச் செய்யவில்லை. எங்களுடைய ஆட்சிக் காலத்தில் உருவாக்கியிருந்த சில பாதுகாப்பு ஏற்பாடுகளை இவர்கள் கலைத்துவிட்டார்கள்'' என்றார் அவர்.

தாங்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ஈஸ்டர் நாள் வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தடுக்க முடியாமல் போனதற்கு, புலனாய்வுத் துறைகளின் தோல்விதான் காரணம் என்று கூறப்படுகிறது.

பாதுகாப்புத் துறை செயலாளராக தாம் இருந்த காலத்தில், அடிப்படைவாத கருத்துகள் பரப்புவதைக் கண்காணிக்க சிறப்பு ராணுவப் புலனாய்வு இருந்தது என்றும், குறிப்பாக இன்டர்நெட் மூலமான செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன என்றும் கோத்தபய ராஜபக்ச கூறுகிறார். இதற்கு சிறப்புப் பயிற்சிக்காக ராணுவ அதிகாரி ஒருவர் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார் என்றும், ஜிகாதிகளின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக அரபிக் பேசும் நபர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதில் சில பிரிவுகளை இப்போதைய அரசு கலைத்துவிட்டது என்று ராஜபக்ச குற்றஞ்சாட்டுகிறார். ஆனால் மைத்ரிபால சிறிசேன அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதை மறுக்கிறார். அவை மாற்றி அமைக்கப்பட்டு, தற்போதும் செயல்பட்டு வருவதாக அவர் கூறுகிறார்.

உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு நகரில் ராஜபக்சவை முதன்முறையாக நான் சந்தித்தேன். அந்த சமயத்தில் முன்கோபம் கொண்டவராக அவர் கருதப்பட்டார். கடினமான கேள்விகளை, குறிப்பாக இலங்கை பாதுகாப்புப் படையினர் தொடர்புடையதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் புகார்கள் குறித்த கேள்விகளை அவரிடம் கேட்பதற்கு செய்தியாளர்கள் மிகவும் அச்சப்படுவார்கள்.

ஆனால் மிக சமீபத்தில் நாங்கள் சந்தித்தபோது, ராஜபக்ச நிறைய மாறிவிட்டதைப் போல தெரிந்தது. சுற்றிலும் புத்தகங்கள் இருந்த நிலையில் நடுவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த அவர், கடினமான கேள்விகளுக்கும் அமைதியாகப் பதில் அளித்தார் - தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார். கடந்த பல ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு எதிராக நடந்த குற்றச் செயல்களுக்கு அவர் பதில் அளித்தே தீர வேண்டும் என்று அவரை விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் டிசம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவருடைய போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட அவர் உத்தேசித்துள்ளார்.

``பிரதான எதிர்க்கட்சியான எஸ்.எல்.பி.பி.யின் (இலங்கை மக்கள் முன்னணி) வேட்பாளராக நான் இருப்பேன். மற்ற கட்சிகள் மற்றும் குழுக்களின் ஆதரவையும் நாங்கள் பெறுவோம்'' என்று அவர் கூறுகிறார்.

எஸ்.எல்.பி.பி. கட்சி அதிகாரப்பூர்வமாக தனது வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கின்றன. இலங்கையில் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபர் பதவியில் இருக்கலாம் என்ற விதிமுறை இருப்பதால், அவருடைய சகோதரர் மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியாது.

தனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக பாதுகாப்புத் துறை முன்னாள் செயலாளர் கூறுகிறார். ஆனால் மக்கள் முன் செல்வதற்கு முன்னால் சில தடைகளை அவர் தாண்டியாக வேண்டியுள்ளது.

முதலாவது தடையாக இருப்பது அவருடைய ஆரோக்கியம். இந்த நேர்காணலைத் தொடர்ந்து, ராஜபக்சவுக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்று, சிங்கப்பூர் மருத்துவமனையில் இருக்கிறார். அவர் குணமடைவதற்கு ஆறு வாரங்கள் ஆகும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். அவருடைய இரட்டைக் குடியுரிமை குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய பிரச்சினையும் உள்ளது. அவர் இலங்கை மற்றும் அமெரிக்க குடியுரிமைகள் வைத்துள்ளார். இலங்கை அரசியல் சட்டத்தின்படி, அமெரிக்க குடியுரிமையை விட்டுத் தரும் வரை அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியாது.

அமெரிக்க குடியுரிமையை விட்டுத் தருவது தொடர்பாக கொழும்பு நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்ப ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டதாக ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக உள்ள வழக்குகள் அடுத்த பிரச்சினையாக இருக்கும். ஏப்ரல் மாதம் தொடரப்பட்ட முதலாவது வழக்கில், 10 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் பத்திரிகை ஆசிரியர் ஒருவரைக் கொலை செய்ய அவர் உத்தரவிட்டார் என்பது குற்றச்சாட்டாக உள்ளது. போர்க்காலத்தில் தமிழ்க் கைதி ஒருவர் கொடுமைப்படுத்தப்பட்டார் என்பது அவருக்கு எதிரான இரண்டாவது வழக்காக உள்ளது.

சன்டே லீடர் என்ற பிரபலமான பத்திரிகையின் ஆசிரியராக இருந்த லசந்தா விக்ரமதுங்கா, ராஜபக்ச சகோதரர்களை கடுமையாக விமர்சித்து வந்தார். கோத்தபய ராஜபக்ச பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்தபோது, ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல்கள் நடைபெற்றதாக தொடர்ச்சியாக அவர் செய்திகள் வெளியிட்டு வந்தார்.

விக்ரமதுங்கவுக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. தனது மரணத்துக்கு முன்னதாக அதுகுறித்து அவர் தலையங்கம் எழுதியுள்ளார். அரசு தன்னை கொலை செய்யக் கூடும் என்று அதில் அவர் குறிப்பிட்டிரு்தார். 2009 ஜனவரியில் கொழும்பு நகரில், பட்டப்பகலில் அடையாளம் தெரியாத நபர்களால், துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் அந்தப் பத்திரிகையாளர் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய கொலை தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. யாரும் கைது செய்யப்பட மாட்டார்கள் என்று சிலர் நம்புகிறார்கள்.

ராஜபக்சவுக்கு எதிராக அவர் சாட்சியம் அளிக்கவிருந்த நிலையில் நடந்த படுகொலை சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா இதுதொடர்பாக கலிபோர்னியாவில் தொடர்ந்துள்ள வழக்கில், அளவு குறிப்பிடப்படாத இழப்பீடு கோரியுள்ளார். தனது தந்தையின் கொலையை தூண்டியவர் என்றும், அதற்கு ஒப்புதல் அளித்தவர் என்றும் ராஜபக்ச மீது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கனடா குடியுரிமை பெற்றிருந்த தமிழரான ராய் சமந்தனம் தொடர்பானது இரண்டாவது வழக்கு. போர் முடிவதற்கு முன்னதாக, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருந்ததாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார். 2010ல் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாக, தாம் கொடுமைபடுத்தப்பட்டதாகவும், ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றில் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோத்தபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதால், இந்த வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளன. ``இவற்றை நான் செய்யவில்லை என்பதால், இரு வழக்குகளுமே அடிப்படை ஆதாரமற்றவை'' என்று ராஜபக்ச கூறுகிறார்.

விக்ரமதுங்கவை கொலை செய்தவர்களைக் கைது செய்ய, தமது பதவிக் காலத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை அவர் பட்டியலிடுகிறார்.

ராஜபக்சவுடன் பிபிசி நேர்காணல் நடத்திய பிறகு, அவருக்கு எதிரான வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ராஜபக்சவிடம் இருந்து நஷ்டஈடு கோரி ஜூன் 26 ஆம் தேதி, மேலும் 10 வாதிகள் கலிபோர்னிய நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அவருடைய தலைமையின் கீழ் பணியாற்றிய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்களால் தாங்கள் கொடுமைபடுத்தப்பட்டதாக சில புகார்களும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டதாக சில புகார்களும் அதில் உள்ளன.

தனக்கு எதிரான இந்த அனைத்துப் புகார்களும் ``அரசியல் காரணங்களுக்காக'' கூறப்படுபவை என்று பாதுகாப்புத் துறை முன்னாள் செயலர் கூறுகிறார். ``நான் பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்குச் சென்று வருகிறேன். அவர்கள் ஏன் இப்போது அந்தப் பிரச்சினைகளை எழுப்ப வேண்டும்'' என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

ராஜபக்சவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுவதால், அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முடியாமல் அவரைத் தடுக்க வேண்டும் என்பதற்காக, அவருடைய அரசியல் எதிரிகள் இந்த காலக்கட்டத்தை தேர்வு செய்து வழக்குகள் தொடர்கிறார்கள் என்று அவரும் அவருடைய ஆதரவாளர்களும் சொல்வது சரியாகவும் இருக்கலாம்.

அமெரிக்க நீதிமன்றங்களில் அவருக்கு எதிரான வழக்குகள் விசாரணையில் உள்ள நிலையில், தனது அமெரிக்க குடியுரிமையை விட்டுத் தருவது அவ்வளவு எளிதானதாக இருக்காது. அதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாமல் போகலாம்.

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுற்ற 10வது ஆண்டு தினத்தை நாடு கடைபிடிக்கவிருந்த நிலையில், அதற்கு ஒரு மாதம் முன்னதாக ஈஸ்டர் ஞாயிறு வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடைபெற்றன.

சுமார் மூன்று தசாப்தங்களாக அந்த உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தது. அதில் 100,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல ஆயிரம் பேரை இன்னும் காணவில்லை. இலங்கை ராணுவம் இறுதிக்கட்ட தாக்குதலை ஆரம்பித்த பிறகு, கடைசிகட்டத்தில் குறைந்தபட்சம் 40,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா.வும் வேறு சில அமைப்புகளும் கூறுகின்றன.

இறுதி நிலையில் வடகிழக்கில் கடலோரப் பகுதியில் சிறிய நிலப் பகுதியில் பல ஆயிரம் பொது மக்களும், விடுதலைப் புலிகள் பலரும் சிக்கிக் கொண்டனர். அந்தப் பகுதி மீது ராணுவம் தொடர் குண்டுவீச்சுகள் நடத்தியது. தப்பியோட முயன்ற பொது மக்களை, விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றார்கள் என்றும் கூறப்படுகிறது.

படுகொலைகள் நடக்கும் என்ற எச்சரிக்கைகள், நிஜமாகிவிட்டன என்று, அந்த காலக்கட்டத்தில் கொழும்பு நகரில் இருந்த ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர். ஆனால் விடுதலைப்புலிகள் வசமிருந்த பகுதிகளில் இருந்து சரணடைந்த ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் என்னவானார்கள் என்று இன்னும் தெரியவில்லை என்று கூறுகின்றனர்.

சண்டையின் இறுதிக் கட்டத்தில் ராணுவத்தினரால், பரவலாக தமிழர்கள் எவ்வாறெல்லாம் சட்டத்திற்குப் புறம்பாக நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள் என்று விவரிக்கும் விடியோக்களும், நேரடி சாட்சியங்களும் போர் நிறைவுற்ற பிறகு வெளியாயின. இவற்றின் அடிப்படையில், மக்களுக்கு எதிராக, ராணுவத்தாலும், விடுதலைப் புலிகளாலும் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் பற்றி விசாரிக்க போர்க் குற்றங்கள் டிரிபியூனல் ஒன்றை அமைக்க வேண்டும் என்று இலங்கை அரசுக்கு ஐ.நா.வும், பிற மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.

அது உள்நாட்டுப் பிரச்சினை என்பதால், உள்நாட்டு அமைப்புகள் மூலம்தான் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறி, சர்வதேச விசாரணை அமைப்பை ஏற்படுத்தும் முயற்சிகளை, அடுத்தடுத்து வந்த அரசுகள் தடுத்து நிறுத்திவிட்டன.

ஆனால் போருக்குப் பிறகு நீதியை நிலைநாட்ட எதுவுமே செய்யப்படவில்லை.

கடந்த ஆண்டு நான் இலங்கைக்கு சென்றிருந்தபோது, தமிழர்கள் அதிகம் வாழும் கிளிநொச்சி பகுதியில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் குழுவினரை சந்தித்தேன். ராணுவத்திடம் சரணடைந்த தங்களுடைய மகன்கள், சகோதரர்கள் மற்றும் மகள்களின் கதி என்னவாயிற்று என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

சரணடைந்தவர்களைக் கொலை செய்துவிட்டதாகக் கூறும் இந்தக் குற்றச்சாடுகளை ராஜபக்ச கடுமையாக மறுக்கிறார்.

``எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. ராணுவத்திடம் சரணடைந்த அனைவரும் பதிவு செய்யப்பட்டனர். எல்லாமே அவசரமாக நடந்தன. எல்லாமே குழப்பமான சூழ்நிலையில் நடைபெற்றன'' என்று அவர் கூறுகிறார்.

கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த சுமார் 13,000 விடுதலைப் புலிகளுக்கு, போர் முடிந்த பிறகு மறுவாழ்வு வசதிகள் செய்து தரப்பட்டன என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். விடுதலைப் புலிகளில் சிலர் ரகசிய சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர் என்ற புகார்களையும் அவர் மறுக்கிறார்.

``இல்லை. ரகசிய சிறைகள் எதையும் நாங்கள் நடத்தவில்லை. இந்த நாட்டில் ரகசிய சிறைகளை நடத்துவது எளிதானதல்ல'' என்கிறார் அவர்.

அவரை விமர்சிப்பவர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர். போர் முடிந்த பிறகு, செய்தியாளர்கள், மனித உரிமைக் குழுவினர், காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆகியோர் ராணுவ முகாம்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. காணாமல் போனவர்கள் என்னவானார்கள் என்பதை சுதந்திரமான அமைப்பு எதுவும் உறுதி செய்யவில்லை.

2015 ஆம் ஆண்டில் எதிர்பாராத விதமாக மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்த போது சிறுபான்மை தமிழர்களும், மனித உரிமை போராளிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். நாட்டில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும், பேச்சுரிமை, பத்திரிகை சுதந்திரம் எல்லாம் பாதுகாக்கப்படும் என்று அவர்கள் நம்பினார்கள்.

போர் முடிவுக்கு வந்த ஆண்டில் அமைதி நிலவியது. போரின் வடுக்கள் மறைவதற்கான அவகாசமாக அது அமைந்தது.

ஆனால் அந்த எண்ணங்களை தகர்ப்பதாக ஈஸ்டர் தின குண்டுவெடிப்புகள் அமைந்துவிட்டன. சமீபத்தில் அரசியல் நெருக்கடிகளுடன், இந்தத் தாக்குதல்களும் நடந்ததால், மக்களின் எண்ணங்கள் மாறிவிட்டன.

குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து அரசுக்குள் ஏற்பட்ட மோதல்கள் மற்றும் இப்போதைய அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கவும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் கூறிக் கொண்டதால் இலங்கை மக்கள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இலங்கையிலும், உலக நாடுகளிலும், இந்தப் பிரச்சனையை அரசு சரியாகக் கையாளாதது குறித்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நாட்டில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பலம் மிக்க ஒரு தலைவர் வேண்டும் என இலங்கை மக்கள் பலரும் ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்பதை இது விளக்குகிறது. இதைச் செய்வதற்கு சரியான நபர் தாம்தான் என்று ராஜபக்ச கூறுகிறார். ஸ்திரத்தன்மையை மீண்டும் தம்மால் உருவாக்க முடியும் என்கிறார்.

ஆனால் பலமான தலைவர் வேண்டும் என்ற ஆசை, மக்களின் உரிமைகள் மற்றும் பத்திரிகை சுதந்திர ஆபத்தை மிஞ்சியதாக இருந்துவிடக்கூடாது என்று மனித உரிமை போராளிகள் எச்சரிக்கின்றனர்.

ராஜபக்சவுக்கு வாய்ப்பு கிடைக்குமானால், உயர்ந்த பதவிக்கு கடினமானவராகவே இருப்பார்.

பிபிசி-அன்பரசன் எத்திராஜன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com