Tuesday, July 23, 2019

ஜனாதிபதி கோட்டபாய! நிழலா ? நிஜமா?

இலங்கை சனநாயக சோசலிஸ குடியரசின் 7 வது நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ம் திகதி நடாத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

கடந்தகாலங்களில் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களிடையே பெரும்போட்டி இடம்பெற்றுரிந்தபோதிலும் இம்முறை 4 அல்லது 5 முனை போட்டியாக அது அமையவுள்ளது. கடந்த 5 தேர்தல்களை மிகுந்த சவாலுடன் எதிர்கொண்டிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியை தலைமையாக கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இரண்டாக பிளவுபட்டு மைத்திரிபால சிறிசேன தலைமையிலும், சிறிலங்கா பொது ஜன பெரமுன என்று அறியப்படும் புதிய கட்சி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தலைமையிலான கூட்டணி தேர்தலை சந்திக்க தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக உணரமுடிகின்றது.

இதேநேரம் ஒரு புதிய அணுகுமுறையுடன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை அரசியல் யாப்பாக மற்றியமைக்க மக்கள் ஆணையை கோரி நாகானந்த கொடித்துவக்குவும், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான கூட்டணி ஒன்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பிறிதொருது நேர்தல் கூட்டணியும் களமிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகானந்தவை தவிர இதுவரை வேட்பாளர்கள் யார் என எவரும் அறிவிக்காத நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் முன்னாள் பாதுகாப்பு செயலர் போட்டியிடவேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் அதன் பெருந்தலைவர் மஹிந்த ராஜபக்ச மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றது. குறிப்பாக பொது எதிரணி என்ற பெயருடன் உருவான அந்த அரசியல் கூட்டிலிருக்கக்கூடிய இடதுசாரிகள் என அறியப்படுவோர் தமது கூட்டணி சார்பில் கோட்டா வேட்பாளராக தெரிவு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிடுகின்ற சமநேரத்தில் விமல்வீரவன்ச , உதய கம்பன்பில , பிரசன்ன ரணதுங்க போன்ற பௌத்த அடிப்படைவாதிகளால் ஆதரவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான உள்வீட்டு ஆதரவு எதிர்ப்புக்களுக்கப்பால் கோட்டபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினால் இருவிதமான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்று அரசியல்யாப்பின் பிரகாரம் இரட்டை குடியுரிமையை கொண்டுள்ள நபரொருவரால் தேர்தலில் போட்டியிடமுடியாது என்பதற்கிணங்க அவர் அமெரிக்க குடியுரிமையை கைவிட முடியாதவாறு அமெரிக்காவில் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக தேர்தலுக்கு முன்னர் இலங்கையில் நீதிமன்றினூடாக குற்றவாளியாக்கி சிறையிலடைக்கும் முயற்சி.

இலங்கையில் வழக்குகளை துரிதப்படுத்தி தீர்ப்பினை வழங்கி சிறையிலடைக்கும் முயற்சி தோற்றுப்போயுள்ளதாக சட்டவாளர்கள் தெரிவிக்கின்றனர். தேர்தலுக்கு சுமார் 135 நாட்களே உள்ள நிலையில் சிக்கலான அவ்வழக்குகளை அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடமுடியாது என அவர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம் அமெரிக்க குடியுரிமை விவகாரத்தை கையாளும் அவரது சட்டத்தரணிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இருந்தபோதும் இலங்கையில் கையெழுத்திடப்படவுள்ள சர்ச்சைக்குரிய சோபா ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திடாவிட்டால் அமெரிக்கா கோத்தாவை நிபந்தனைகளுடன் விடுவித்து தனது காரியத்தை சாதித்துக்கொள்ளும்.

இத்தனை இடியப்பசிக்கல்களுக்கும் அப்பால் நேற்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்தானது பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அதாவது நேற்றுவரை ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை ஆகஸ்டு மாதம் 11 ம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பேன் என தெரிவித்துவந்த அவர், கோட்டபாய ராஜபக்சதான வேட்பாளர் என „நான் ஒருபோதும் சொல்லவில்லை' என தெரவித்துள்ளார்.

இந்தபின்னணிகளுடன் நேற்று இது விடயமாக மஹிந்த ராஜபக்சவின் விஜயராம இல்லத்தில் இறுதி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அங்கு ஐவரது பெயர்கள் முன்னமொழியப்பட்டுள்ளதுடன் அந்த சாத்தியமான வேட்பாளர்கள் தொடர்பில் எவரும் மூச்சுவிடக்கூடாது எனக் கட்டாய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கோட்டபாயதான் வேட்பாளர் என மஹிந்த ராஜபக்சவால் இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்பது „ஜனாதிபதி கோட்டபாய' நிஜமா ? நிழலா?

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com