Monday, July 1, 2019

போதையிலிருந்து விடுதலையான தேசத்தை நோக்கிய விழிப்புணர்வு! கிட்டங்கி பாலத்தில் ஊழியர்கள்

போதையிலிருந்து விடுதலையான தேசம் எனும் நிகழ்ச்சித்திட்டம் இவ்வாரம் பரவலாக நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலின் கீழ் இந்நிகழ்ச்சிதிட்டம் பல்வேறு கட்டங்களாக அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய திங்கட்கிழமை(1) கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கணேஸ்வரனின் பங்குபற்றலுடன் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனை உளநலப்பிரிவு தொற்றா நோய்த்தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஐ.எம்.எஸ் இர்சாத் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து கல்முனை நற்பிட்டிமுனை கிட்டங்கி பிரதான வீதியில் விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்றினை காலை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது வீதியில் பயணம் செய்த பாதசாரிகள் முச்சக்கரவண்டி சாரதிகள் மோட்டார் சைக்கிள் சாரதிகள் ஏனைய வாகன சாரதிகள் இடைநிறுத்தப்பட்டு வீதி ஒழுங்கு முறைகள் சாரத்திய ஒழுங்கு விதிகள் தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டங்கள் குறித்து தெளிவூட்டப்பட்டது.

மேற்குறித்த வாகன சாரதிகளுக்கு போதைப்பொருள் தொடர்பான அறிவுறுத்தல் தலைக்கவசம் அணிதலின் ஒழுங்கு விதிகள் தலைக்கவசத்தின் பட்டியணிதல் சாரதிய செயற்பாட்டில் தொலைபேசி உரையாடலில் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பிலான அறிவுரைகள் யாவும் வழங்கப்பட்டு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

இச்செயற்றிட்டமானது கடந்த ஒரு வாரகாலமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் பிரதானமாக போதைப்பொருள் பாவனை மற்றும் விபத்துக்களை தடுக்கும் முகமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேற்படி செயற்திட்டம் வீதியோர விழிப்பூட்டல்களாக மட்டுமல்லாது பாடசாலைகள் தனியார் கல்வி நிலையங்கள் அரசாங்க திணைக்களங்கள் என பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் எமது பிரதேசத்தில் போதைப்பொருள்களின் பாவனை கூடிவருவதனை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமாக உள்ளன. எமது எதிர்கால சந்ததியினரை அதிகளவு இப்போதைப்பொருள் பாதித்துக்கொண்டிருக்கின்றது. இன்றைய இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பாடசாலை மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதைப்பொருளுக்கு அடிமையாகி கொண்டே வருகின்றனர்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com