Thursday, July 25, 2019

21/4 தாக்குதலுடன் ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை. Indonesia தொடர்பின் ஊடாக உரிமைகோர கேட்டனர் – சிஐடி பணிப்பாளர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்திய உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதிகள், ஐஎஸ் அமைப்புடன் நேரடியான தொடர்பைக் கொண்டிருக்கவில்லை எனவும் தாக்குதலின் பின்னர் இந்தோனேசியாவிலிருந்த தொடர்பு ஒன்றினூடாக தாக்குதலுக்கான உரிமையை கோருமாறு ஐஎஸ்ஐஎஸ் ஐ கோரியுள்ளனர் எனவும் குற்ற விசாரணைத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு ஆகியவற்றின் பணிப்பாளரான ரவி செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக நேற்று பிற்பகல் சாட்சியம் அளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

'மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று விடுதிகளில் தாக்குதல்களை நடத்திய தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு வெளிநாட்டு ஜிகாதி குழுவுடன் நேரடித் தொடர்பு இருக்கவில்லை.

இவர்கள் ஐஎஸ் அமைப்பின் சித்தாந்தத்தை பின்பற்றியுள்ளனர். அதனால் கவரப்பட்டுள்ளனர். ஆனால், அந்த அமைப்புடன் தொடர்பில் இருந்தமைக்கான எந்த ஆதாரமும், எமது விசாரணைகளில் கண்டறியப்படவில்லை.

ஐஎஸ் அமைப்புடன் மாத்திரமன்றி எந்தவொரு வெளிநாட்டு ஜிகாதி குழுவுடனும் கூட நேரடித் தொடர்பு இருந்ததாக தெரியவில்லை.

குண்டுதாரிகளுக்கு உள்ளூரிலேயே பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன என்பது விசாரணைகளில் தெரியவந்திருக்கிறது.

வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளால் வழங்கப்பட்ட எச்சரிக்கைகள் தொடர்பாகவும், சஹ்ரான் காசிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தொடர்பாக புலனாய்வுப் பிரிவுகள் கண்டறிந்த தகவல்கள் குறித்தும், அவற்றின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தொடர்பாகவும் சிறப்பு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.

கிடைத்த புலனாய்வு அறிக்கைகள் தொடர்பாக, குறிப்பாக ஏப்ரல் 21, நடந்த தாக்குதல்கள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயற்பட்ட விதத்தில் தனிப்பட்ட முறையில் எனக்கு திருப்தி இல்லை.

எதிர்பார்க்கப்படும் தாக்குதல்கள் குறித்து பெறப்பட்ட தகவல்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உறுதிப்படுத்தப்படாதவை என்று ஒதுக்கி வைக்கக் கூடாது.

ஏப்ரல் 21ஆம் நாள், தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கும் வகையில் அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் அனுப்பிய குறுந்தகவலை நான் பார்ப்பதற்கு முன்னரே, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் குண்டு வெடித்து விட்டது.' என்றும் அவர் கூறினார்.

சில தகவல்களை ஊடகங்களின் முன்பாக கூற விரும்பவில்லை எனக் கூறிய ரவி செனிவிரத்ன, தெரிவுக்குழு முன்பாக இரகசியமாக சாட்சியம் அளித்தார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com