Tuesday, June 11, 2019

இலங்கையில் அரபு மொழி பலகைகளை அப்புறப்படுத்த திட்டம் - அச்சத்தில் இஸ்லாமிய மக்கள்

இலங்கையின் பல பகுதிகளிலும் உள்ள அரபு மொழி பெயர் பலகைகளை அகற்றுவதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில், அமைச்சர் மனோ கணேசனை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரபு மொழியிலான பெயர் பலகைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சரவை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொது கொள்கைக்கு அமைய தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை தவிர்த்து, ஏனைய மொழிகளை காட்சிப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் வேறு மொழிகளை காட்சிப்படுத்த வேண்டுமாயின், அதற்கு விசேட அனுமதி பெற்றுக் கொள்வது அத்தியாவசியம் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் மனோ கணேசனின் பதில்
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தி தொடர்பில் பிபிசி தமிழ், அமைச்சர் மனோ கணேசனை தொடர்பு கொண்டு வினவியது.

தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை தவிர்த்த ஏனைய மொழிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை தடை செய்யும் வகையிலான சுற்று அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சுற்று அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

அரபு மொழிகளினால் ஆன காட்சிப்பலகைகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் வகையிலான சுற்று அறிக்கையை தயாரிக்குமாறு தான் உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் கூறினார்.

இலங்கையின் பல பகுதிகளில் அரபு மொழியிலான பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை காண முடிகின்றது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் இந்த அரபு மொழியிலான பெயர் பலகைகளை காண முடிகின்றது.

ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், அரபு மொழிகளில் காணப்பட்ட பெயர் பலகைகள் குறித்து அதிகளவில் பேசப்பட்டது.

இந்த நிலையில், அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிகளை தவிர்ந்த ஏனைய மொழிகளை அகற்றுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

முஸ்லிம்களின் நிலைப்பாடு
தமது புனித நூலான அல்-குறான் அரபு மொழியில் காணப்படுவதுடன், அந்த புனித நூலை பயில்வதற்கு தாம் கட்டாயமாக அரபு மொழி பயில வேண்டியுள்ளதாக முஸ்லிம்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில், அரபு மொழி காட்சிப்பலகைகளுக்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில், எதிர்வரும் காலங்களில் அரபு மொழியை பயில்வதற்கும் அரசாங்கம் தடை விதிக்கக் கூடும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

தமது எதிர்கால சந்ததியினருக்கு புனித அல்-குறானை வாசிப்பதற்கு முடியாத நிலைமை ஏற்படும் அபாயமும் காணப்படுவதாக அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

அரபு மொழியை பயில்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், அது தமது கலாசாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பெரிதும் வழிவகுக்கும் என முஸ்லிம் மக்கள் நம்பிக்கை வெளியிடுகின்றனர்.

நன்றி பிபிசி தமிழ்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com