Sunday, May 12, 2019

பாடசாலைகளின் பாதுகாப்பை இரு வாரங்களில் உறுதி செய்யாவிட்டால் தெருவுக்கு இறங்குவேன். மிரட்டுகிறார் மட்டு தேரர்.

அப்பாவி தமிழ் மக்களின் பிள்ளைகளை பலாத்காரமாக சஹ்ரான் கடத்திக் கொண்டு சென்று இந்த குழுவில் இணைத்துக் கொள்வதாக தகவல் கிடைத்துள்ளது என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட தாயார் தனது மகளை கடத்திக் கொண்டு சென்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கச் சென்ற போது முறைப்பாட்டை ஏற்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களின் சோதனை நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாடசாலை மாணவர்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்க அரசுக்கு இரண்டு வாரகாலம் அவகாசம் தருகின்றோம். அதனை அரசு உறுதிப்படுத்தபடவில்லை என்றால் நாங்கள் வீதிக்கு இறங்கவேண்டி ஏற்படும்.

கடந்த 3 கிழமையாக நாட்டில் பாதுகாப்பு அற்ற நிலை இருப்பது நாம் அனைவரும் அறிந்த விடயம். இந்த பிரச்சினை தொடர்பாக அரசியல்வாதிகள் அதிகாரிகளிடம் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வாள்கள் உடனடியாக இல்லாமல் செய்யப்பட்டு நம்பிக்கையை உறுதிப்படுத்துமாறு வேண்டுகின்றோம்.

காத்தான்குடி பிரதேசத்தில் சஹ்ரான் இருந்து கொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவின் அறிவுறுத்தலுக்கும் அதிகாரத்தையும் பயன்படுத்தி சஹ்ரான் இந்த ஜ.எஸ்.ஜ.எஸ். குழுவை கட்டியெழுப்பியிருந்தார்.

அது மட்டுமல்ல சில சட்டத்தரணிகள், நீதவான்களும் அதனுடன் தொடர்பு பட்டிருக்கின்றனர். அதனை நிரூபிப்பதற்கான சாட்சி இருக்கின்றது. இது வரைக்கும் சஹ்ரான் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிப்பது எவ்வாறு?

ஆளுநர் ஏ.எல். எம். ஹிஸ்புல்லாவின் காரியாலயத்தில் துப்பாக்கி ரவைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். அது பொலிஸ் உத்தியோகத்தர் எடுத்துச் சென்ற ஆயுதங்கள் எனவும் அதனை அங்கு விட்டு விட்டு வந்தாகவும் கடைசியில் அதற்கு கதை ஒன்று கூறினர்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவ்வாறு பொறுப்பில்லாமல் ஆயுதங்களை விட்டு விட்டு வரமுடியுமா? அது பாரதூரமான பிரச்சினை ஆகையினால் அவர்கள் இவ்வாறு விடுதலை செய்தது எந்த நோக்கத்திற்காக என்றும் எமக்கு தெரியாது.

ஆனால் இறுதியாக பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் 30 வருட யுத்ததினால் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த இம்மக்களுக்கு மீண்டுமோர் துயரத்தை ஏற்படுத்துவதா?

இந்த அப்பாவி தமிழ்மக்களின் பிள்ளைகளை பலாத்காரமாக சஹ்ரான் கடத்தி கொண்டு சென்று இந்த குழுவில் இணைத்துக் கொள்வதாக தகவல் கிடைத்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட தாயார் தனது மகளை கடத்திக் கொண்டு சென்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைபாடு தெரிவிக்க சென்றபோது முறைப்பாட்டை ஏற்கவில்லையாம்.

எனவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு பெற்றோரை தள்ளவேண்டாம் என பொறுப்புள்ள அதிகாரிகளுக்கு மதகுரு என்ற வகையில் பெறுப்புடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

மேலும், இந் நாட்டில் எல்லோருக்கும் பொதுச் சட்டம் இருக்க வேண்டும் அந்த சட்டத்தை ஓவ்வொருவருக்கும் பிரித்து வழங்கியதன் பிரதிபலன்தான் இது.

அனைவருக்கும் பொதுவான சட்டத்தை நடை முறைப்படுத்துங்கள் என அரசுக்கு மிகவும் பொறுப்புடன் இந்த விடையத்தை அறியத்தருவதோடு, நிருவாகத்துறை, அரச திணைக்களம், நீதிமன்றங்கள் பாடசாலைகள் போன்ற அரச திணைக்களங்களில் எப்படி இஸ்லாமிய பெண்கள் உடல் முழுக்க உடையை போர்த்திக் கொண்டு உள்நுழைவது?

அரசுக்கு உரித்தான ஒழுக்க ரீதியான உடைகளை உடுக்குமாறு இந்த தமிழ் சிங்கள பெண்களுக்கு சாரி ஒசரி அணியுங்கள் என கூறிக் கொண்டு ஏன் இந்த முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் இந்த பௌத்த நாட்டினுள் இந்த மாதிரி ஒரு விடயத்தை அனுமதித்துள்ளனர்.

இவ்வாறன உடையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்த நாட்டிலும் இவ்வாறான தாக்குதலை செய்வதற்கு அவர்கள் முன்வந்திருக்கின்றனர் ஆகையினால் இந்த விடயம் தொடர்பாக கவனத்தை செலுத்துங்கள்.

அவசரகால மற்றும் பயங்கரவாத சட்டத்தை பயன்படுத்து எந்த ஒருவரையும் சிறைப்படுத்தலாம். ஆனால் இந்த நாட்டிற்குள் சேதத்தை ஏற்படுத்தி வருபவர்களை கைது செய்யாது நியாயத்தை கதைக்கும் மக்களை கைது செய்வது என்பது தொடர்பாக நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் .

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் , அரசாங்க அதிபர், கல்வி பணிப்பாளர்கள், என சம்மந்தப்பட்ட அதிகரிகளுக்கு மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக எதிர்வரும் புதன்கிழமை அறியப்படுத்த உள்ளோம் அதன் பிறகு அவர்கள் சரியான தீர்வை முன்வைக்காவிடின், நாங்கள் வீதிக்கு இறங்கவேண்டி ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com