Thursday, May 9, 2019

விரிசலாகும் இந்து-முஸ்லிம் சகோசரத்துவ இன உறவுகள் - ஹப்லுல்லாஹ் புஹாரி

இனவாத்ததை பெருவாரியாக கொப்பளித்த பெருந்தகைகளில் வாய்களில் கூட இன்று சில யதார்த்தங்கள் உச்சரிக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. அந்தளவுக்கு பயங்கரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் எதிர்வினையாற்றலானது ஏனைய சமூகங்கள் மத்தியில் சிறப்புற ஒப்புவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக பா.உ. உதய கம்மன்பில அவர்களின் நிதானமான பேச்சை குறிப்பிட முடியும். அதுமட்டுமல்லாமல் பல உயர் மட்ட அரசியல் வாதிகளும் இணையத்தளங்களில் முஸ்லிம்கள் சார்பில் ஆரோக்கியமான கருத்துகளை பதுவேற்றி வருவதையும் அவதானிக்க முடிகிறது.

நாட்டில் வாழும் முஸ்லிம்கள் யாவரும் பயங்கரவாதிகளே...! என்ற மாயையை நாட்டு மக்கள் மத்தியில் திணிக்க முரசங்கள் அடித்துக்கொண்டிருந்த அபச்சார ஊடகங்களினதும், இனவாத கும்பல்களினதும் முகத்தில் கரிபூசும் நிகழ்வாகவே, சாய்ந்தமருது ஜும்மா பள்ளி நிருவாகத்தின், பயங்கரவாதிகளை காட்டிக் கொடுத்த செயற்பாட்டை சித்தரிக்க முடிகிறது. அதற்கான அங்கீகாரத்தையும் நேற்றய தினம் ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன அவர்கள் வழங்கிச் சென்றிருந்தார்.

பயங்கரவாத அச்ச சூழல் நிழவுகின்ற பிரதேசஙளுக்கு ஜனாதிபதியோ, இராணுவ தளபதிகளோ செல்வது சாத்தியமற்றதொரு நிகழ்வாகும். ஆனாலும் நேற்றய தினம் சாயந்தமருது ஜும்மா பள்ளி மற்றும் கிண்ணியா ஜும்மா பள்ளிவாயில் போன்ற இடங்களுக்கு இராணுவமும், உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் விஜயம் செய்திருந்தனர் இதனை நாட்டின் உயர்மட்டங்கள் முஸ்லிம்கள் மீது கொண்டிருக்கும் எண்ணப்பாங்குளை உணர்த்தும் நிகழ்வுகளாகவே பார்க்க முடிகிறது. அதாவது அவர்கள் யாவரும் முஸ்லிம்களுக்கு தீவிரவாத பட்டம் சூட்ட முற்படவில்லை என்பதையும் உணர முடிகிறது.

ஆனாலும் மூங்கில் பிட்டும் தேங்காய்ப் பூவும், நகமும் சதையும் போல என்றெல்லாம் முன்னைய காலங்களில் பிரஸ்பிதாக்கப்பட்ட, ஒரே ஊரில் கூடிக் குழாவி ஒன்றாய் வாழ்ந்த, ஒரே தட்டில் உணவருந்திய, ஒன்றாக தூங்கி எழுந்த இந்து-முஸ்லிம் உறவானது கால ஓட்டத்தில் பெரிதும் விரிசலடைந்து செல்வதே கவலைக்குரியதாகும். இந்த விரிசலுக்கான அடித்தளமிடும் செயற்பாடுகள் முகநூல் தோறும் மலிந்து போயுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

இங்கு கவலைகளை ஆர்முடுக்கும் காரணிகள் என்னவெனில், இவ்வாறான உறவு விரிசல்கள் ஏற்படுவதற்கான வரலாற்று பின்னனிகள் ஏதும் இந்துக்கள் சார்பில் உள்ளனவா? என்றால் நிச்சயமாக இல்லை என்றே கூற முடியும். ஆனாலும் முஸ்லிம்கள் சார்பில் உள்ளது நிதர்சனமே அதாவது தமிழின உரிமை போராட்டம் எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட ஈழப்போரில் முஸ்லிம்கள் சார்பில் பல நூறு தலைகளை புலிகளுக்கு அடமானம் வைக்கப்பட்டதானது ஆதாரபூர்வமானது. ஆனாலும் முஸ்லிம்கள் அதனை இன்றுவரை உள்ளங்களில் வடுக்களாக பொறித்து போராட்டமோ, போர்க்கொடிகளோ தூக்கவில்லை..

மேலும் முஸ்லிம்கள் தமிழர்களின் போராட்டத்தில் ஒரு போதும் சிங்கள இராணுவத்திற்கு சார்பாக செயற்பட்டார்கள் என்றோ அல்லது புலிகளை காட்டிக்கொடுத்து விடுதலை போராட்டத்தின் உன்னதத்தை துவம்சம் செய்தார்கள் என்றோ வரலாறு நெடுகிலும் பதியப்படவில்லை . மாறாக புலிகளோடு இணைந்து போரிட்ட பல முஸ்லிம்கள், புலி உறுப்பினர்களை மறைத்து பாதுகாத்த முஸ்லிம்கள் என்றவாறு புலிகள் சார்ந்து முஸ்லிம்கள் செயற்பட்டதையே பல வராலாற்று சான்றுகள் காட்டி நிற்கின்றது.

அப்படியாயின் இங்கு இனவாத்ததை கக்குற, முஸ்லிம்கள் மீது துவேசத்தை கொட்டுகிற செயற்பாட்டின் பின்னனி பற்றி தெளிவடைய வேண்டிய தேவை இயல்பாகவே வலுப்பெறுகிறது. அதாவது யுத்த காலங்களில் கூட பாசிசப் புலிகளின் வரம்பு மீறிய செயற்பாட்டின் விளைவாக சில முஸ்லிம்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருந்தாலும், ஏனைய சக இந்து முஸ்லிம் உறவுகள் சிநேகித்துடனே வாழ்ந்து வந்துள்ளார்கள். இதனை இந்து-முஸ்லிம் பின்னிப் பிணைந்து வாழ்கின்ற ஒரு பிரதேசத்தில் வாழும் என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

ஆனாலும் யுத்தத்திற்கு பிந்திய சமீப காலங்களிலேயே முஸ்லிம்கள் மீதான இந்துக்கள் சிலரின் ( எனது நண்பர் பட்டியலில் முஸ்லிம்களை விடவும் நல்ல இந்து நண்பர்களும் உள்ளார்கள்) எல்லை மீறிய இனவாத சிந்தனைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதை நன்றாக உணர முடிகிறது. அப்படியாயின் யுத்தத்தின் பிற்பாடு புதிதாக உருவாகிய சில அரசியல் கட்சிகளும், அரசியல் இலாபங்களுமே இந்த இனவாத செயற்பாடுகளின் நேரடி காரணம் என்றால் மிகையாகது. இக்கருத்தை அணுவணுவாக விபரிக்க முடியும் ஆயினும் கட்டுரை நீண்டு விடும்.

எனவே அரசியல் சல்லாபங்களுக்காக ஒரு போதும் காலா காலமாக தொடர்ந்துவரும் உறவினை கேள்விக்குட்படுத்த கூடாது என்பதே எனது வாதமாகும். இதற்காக இரு தரப்பினரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டிய தேவை சமகாலத்தில் மேலோங்கியுள்ளது. முகநூல் எங்கும் வாய்க்கு வந்தவாறு பேசுவதால் எமது உள்ளங்கள் வேண்டி நிற்கின்ற நியாய பூர்வமான தீர்வுகளை எட்டிவிட முடியாது என்பதை நாம் உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதையும், ஒருமைப்பாடுடைய கருத்துகளோடு ஒருமிக்க பயணிக்கும் பட்சத்தில் இவ்வாறான இன உறவை சீரழிக்கும் செயல்களில் இருந்து விடுபடலாம் என்பதையும் எனது சிறு கருத்தாக முன்வைக்க விரும்புகின்றேன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com