Friday, May 3, 2019

துருக்கி தூவர் 50 பயங்கரவாதிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு தெரிவித்ததை போட்டுடைக்கும் வசந்த சேனநாயக்க!

இலங்கையினுள் துருக்கியில் FETO இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்று நாட்டுக்குள் நுழைந்த 50 தீவிரவாதிகள் தொடர்பில் 201ம் ஆண்டு துருக்கியின் தூதுவர் நேரடியாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்ததாக ஊடகம் ஒன்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் குறித்த ஊடத்திற்கு தெரிவித்துள்ளதாவது:

உயிர்த்த ஞாயிறு தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுக்குள் 16 பேர் தொடர்பில் பொலிஸ் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் துருக்கியில் பயிற்சி பெற்றுள்ளனர் என்ற விடயம் வெளியாகியுள்ளது.

தீவிரவாதத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான தற்கொலைதாரி சஹ்ரான் ஹாசீமைத் தாக்குதலுக்குத் தூண்டிய மொஹமட் இமாம் பாகிர் என்ற இமாம் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர் சிரியா சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இருந்த ஒருவர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்கவிடம் வினவியபோது,

“என்னிடம் கேள்வி எழுப்புவதற்குப் பதிலாக துருக்கித் தூதுவரிடமே வினவ வேண்டும். முன்னாள் தூதுவரே தற்போதும் உள்ளார். துருக்கியின் இஸ்லாம் பிரிவினைவாதிகள் 50 பேரின் பட்டியலை 2015 ஆம் ஆண்டு முதல் வழங்கியதாக அவர் கூறுகின்றார். அத்துடன், 10 அமைப்புகளின் பெயர்களை அவர் வழங்கி அவதானமாக இருக்குமாறு அன்று கூறியுள்ளார்.

வெளிநாட்டு இராஜாங்க அமைச்சராக இருந்தபோது எனக்குக் கிடைத்த தகவல்களை, பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கினேன். எனினும், எப்போதும் எமக்கு ஒரேயொரு பதிலே வழங்கப்படும். இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை நாம் எடுப்போம் எனக் கூறப்பட்டது.

பாதுகாப்புச் சபைக்கு இதனைச் சமர்ப்பித்து, தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம் எனக் கூறப்பட்டது. எனினும், சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தம் காரணமாக அந்தச் சந்தர்ப்பத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது எனத் தூதுவர் இறுதியாக பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இதனைக் கூறுவது தகுந்தது அல்ல. பலம் வாய்ந்த மேற்கத்தேய நாடொன்று எம் மீது கோபமடையும். அந்த நாட்டிலிருந்து அழுத்தம் காணப்படுகின்றமையால் இவர்களைத் தடை செய்ய வேண்டாம் என வௌிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் கூறினார்.

இது உண்மையா, பொய்யா என எனக்குத் தெரியாது. பலர் பாடசாலைகளில் இருந்தனர். மதராசாவூடாக பிள்ளைகளை மூளைச்சலவை செய்யும் வகையில் பிரிவினைவாத கருத்துக்களை முன்வைப்பதாக அவர் அன்றே கூறியிருந்தார்” என்று பதிலளித்தார்.

முன்னாள் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கூறும் வகையில், இது தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடையாகச் செயற்பட்டுள்ளனர்.

அவர்கள் யார் என்பது தொடர்பண தகவல்களை அம்பலப்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும் – என்றுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com