Monday, April 8, 2019

புலிகள் அநாதைகளாக அழிவார்கள் என்று சொல்லி வைத்த தீர்க்கதரிசிக்கு இன்று நினைவு நாள். ஸ்ரான்லி ராஜன்

"சமுதாயம் சார்ந்த எழுத்தென்றால் என்னவென்று இவன் எழுதுவதிலிருந்து உலகம் கற்றுகொள்ளட்டும்" என இறைவன் சொல்லி அனுப்பிய அற்புத எழுத்தாளர் ஜெயகாந்தன். அது மகா உண்மையும் கூட, தமிழ் எழுத்துலகிற்கு தலைகீழ் திருப்பம் கொடுத்தவர்களில் புதுமைபித்தன் போல முன்வரிசையில் நிற்பவர் ஜெயகாந்தன்.

தொடக்ககல்வி மட்டுமே உண்டு, 20 வயதிற்குள் அவர் கிட்டதட்ட 50 தொழில்களை செய்திருப்பார், இறுதியாக கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வந்தார், அது என்னவோ தெரியவில்லை, இறுக்கமான பொதுநல கொள்கையால் அற்புதமான கலைஞர்களை அக்கால கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கிற்று, பட்டுகோட்டை கல்யாண சுந்தரம், பாவலர் வரதராஜன் குழுவின் இளையராஜா, அதனை போலவே ஜெயகாந்தன்.

சுருக்கமாக சொன்னால் மக்கள் கட்சி, மக்களின் கஷ்டமறிந்த கலைஞர்களை உருவாக்கிற்று. ஒரு கட்டத்தில் கம்யூனிஸ்டை விட்டு காமராஜர் கட்சிக்கு வந்தார், அந்த மேதைக்கு தெரிந்திருகின்றது, லெனின் வேறு காமராஜர் வேறு அல்ல என்று.

அதன்பின் எழுத்தில் தீவிரம் கூடிற்று, நாவல்கள், கட்டுரைகள், தொடர்கள்,சிறுகதைகள் என அணல் பறக்க எழுதினார். ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகள் அவரின் தொடருக்காகவே விற்ற காலமும் உண்டு.

100க்கும் மேற்பட்ட கதைகள், 50க்கும் மேற்பட்ட நாவல்கள் என அவர் அள்ளி வீசிய படைப்புக்கள் ஏராளம், அவற்றில் ஒன்றிற்கு மிக உயர்ந்த ஞானபீடவிருதும் கிடைத்தது, சில கதைகள் படமாக கூட வந்தன, பாடலும் எழுதினார்.

ஞானபீட விருதென்றால் முகநூலில் வழங்கபடும் விருதுகள் அல்ல, அது இந்திய இலக்கியத்தின் நோபல் அல்லது பாரதரத்னா அவர் படைப்புகளின் மக்கள் சிந்தனை, சமூக நலன், சொல்லாடல் என சிறப்புக்களை விளக்க எத்தனையோ பேர் எழுதிவிட்டார்கள், இன்று இன்னமும் எழுதுவார்கள், படியுங்கள் தெரியும்.

ஆனால் நாம் ஆச்சரியமாக பார்ப்பது எல்லாம் பாரதியாருக்கு பின் ஒரு தமிழனுக்கு இருந்த முற்போக்கும், மக்கள் நலனும், எளிய பாமர சொல்லாடலும், தீர்க்கமான கருத்துக்களும்.

அவைதான் அவரை மகாவித்தியாசபடுத்தி, ,"ஞான செறுக்கன்" என அழைக்கபடும் அளவிற்கு உயர்த்திற்று.

சினிமாவை அறவே வெறுத்தவர், ஒருமுறை எம்.ஜி.ஆர் அழைத்தும் பார்க்க செல்லாமல் சிறையில் இருந்த எம்.ஆர் ராதாவை வலிய காண சென்றார், கண்டன குரல்கள் எழும்பின, எப்படி எங்கள் எம்.ஜி.ஆரை பார்க்காமல் ராதாவை காண செல்லலாம்

அமைதியாக சொன்னார் ஜெயகாந்தன் "உங்கள் எம்.ஜி.ஆரை சிறைக்கு செல்ல சொல்லுங்கள், கண்டிப்பாக பார்க்கின்றேன்", இவ்வளவிற்கும் எம்.ஜி.ஆர் தமிழகத்தின் பெரும் சக்தி, கொஞ்சமும் அஞ்சவில்லை ஜெயகாந்தன்.

சிவாஜி கணேசன் காங்கிரஸில் இருந்தபோது ஒரு கூட்டம் காமராஜர் கூட்டத்தில் இப்பக்கம் காந்திபடம் அப்பக்கம் காமராஜர் படம் நடுவில் சிவாஜிபடம் இருக்க மேடையேறிய ஜெயகாந்தன் சீறினார்

"இப்பக்கம் மகாத்மா காந்தி அப்பக்கம் கருப்பு காந்தி, இடையில் யார் இவன்? நாட்டிற்கு செய்த நன்மை என்ன? இப்படித்தான் அண்ணா ஒரு பாம்பினை வளர்த்து அது இன்று நாட்டை கெடுக்கின்றது" என கர்ஜித்து அதனை கண்டித்தார்.

அந்த மகா பிரபல நடிகர் இந்துவாக நடிக்க மொட்டை போட்டார், கிறிஸ்தவ வேடத்தில் நடிக்க உபவாசமிருந்தார் என பத்திரிகைகள் (இன்றும் அப்படித்தான்) எழுதிதள்ள, எரிச்சலோடு கண்டித்து எழுதினார்

"அவர் இஸ்லாமியர் வேடத்தில் நடித்தார் அல்லவா? அப்பொழுது சுன்னத் செய்திருந்தாரா? அதனையும் எழுதுங்கள்"

இப்படி சமூக சீர்கேட்டை, பத்திரிகையின் தவறுகளை கண்டித்த எழுத்தாளன் எங்காவது இன்று தமிழகத்தில் உண்டா? இனி வருவானா?

சிங்கம்போல எதற்கும் பயபடாமல் தமிழகத்தில் ஒரு எழுத்தாளர் இருந்தார் என்றால் நிச்சயம் அது ஜெயகாந்தன் ஒருவரே.

முன் நவீனத்துவம்,பின் நவினத்துவம், கவித்துவம், கவிதானுபவம்,பிரக்ஞை என்பதெல்லாம் அவருக்கு தெரியாது. அடிதட்டு மக்கள் உழைப்பாளிகள், சாமானியர்கள் என அவர்களில் ஒருவராக மாறி எழுதினார்.

அதனாலதான் பிச்சைகாரி பாத்திரத்தில் கூட அவர் எழுத்து ஜெயித்தது.

புகழின் உச்சத்தில் இருக்கும்பொழுது எழுத்தை நிறுத்தினார், காரணம் இத்தமிழகம் எழுதி திருத்தமுடியாதது என்பதாகவும் இருக்கலாம், அவர் பெரிய தீர்க்கதரிசி, மகா தீர்க்கதரிசி

இந்திய அமைதிபடை திரும்பிய நேரம், தமிழகத்தில் யாருமே புலிகளை விமர்சிக்க அஞ்சிய நேரம் (அவர்கள் வெல்லவே முடியாதவர்கள் என உலகம் நம்பவைக்கபட்ட நேரம்), புலிகள் பத்மநாபாவை சென்னையில் கோரமாக கொன்ற நிசப்தம் கலந்தநேரம், மிக தைரியமாக புலிகளின் அழிவையும், அவர்கள் எப்படி இல்லாமல் போவார்கள் என்பதையும், அனாதைகளாக அழிவார்கள் என்பதையும் ஆனித்தரமாக பேசியவர் ஜெயகாந்தன் மட்டுமே. (உண்மையில் பத்மநாபா கொலையோடு பெரும் நடவடிக்கை எடுக்கபட்டிருந்தால் திருப்பெரும்புதூர் சம்பவத்திற்கு வாய்ப்பு குறைவு)

தமிழகத்தின் பெரும் எழுத்தாளருக்க்கு, சிந்தனை சிற்பிக்கு, ஒரு சிங்கத்திற்கு, எழுத்துலக பீஷ்மருக்கு இன்று நினைவு நாள்,

தமிழகத்து மாபெரும் சிந்தனையாளாரான அவரை நிச்சயம் நினைவு கூறலாம்.

பாரதி,புதுமைபித்தன் வரிசையில் நிச்சயம் இடம்பெறும் அந்த எழுத்தாளரின் தைரியாமான எழுத்துக்கள் இருக்கும்வரை அவருக்கு அழிவே இல்லை

குறுகிய வட்டத்தில் சிக்காமல், மானுடத்தை நேசித்த மாபெரும் பரந்த மனமுடைய எழுத்தாளர் அவர், பொதுவுடமைவாதியாக , இந்திய தேசியவாதியாக உயர்ந்து நின்றவர்

சமூகத்திற்கான எழுத்து என்பது என்ன? தைரியமான எழுத்து என்றால் என்ன? என்பதை தமிழகத்திற்கு முதலில் சொல்லி தந்த மாபெரும் சிந்தனையாளனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

ஜெயக்காந்தன் புலிகள் தொடர்பாக பத்மநாபாவின் அஞ்சலி கூட்டத்தில் பேசிய பேச்சை இங்கு கேட்கலாம்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com