Saturday, April 27, 2019

3 சக்திவாய்ந்த மனித வெடிகுண்டுகளுக்கு மத்தியில் உயிர்தப்பிய பச்சிளம் குழந்தை வாப்பாவைத் தேடுகின்றது.

கல்முனை பிரதேசத்தில் நிகழவிருந்த மா பெரும் அனர்த்தம் ஒன்று சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் மனிதாபிமானியால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நடந்தது என்ன ?

பயங்கரமான சில படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இருதய பிரச்சினை உள்ளோர் இறுதியிலுள்ள படங்கள் வரை செல்லவேண்டாம்..


சாய்ந்தமருது வொல்வேரியன் பிரதேசத்திலுள்ள சுனாமி வீட்டுத்திட்டத்திலுள்ள வீடொன்று மாதமொன்றுக்கு ஐந்தாயிரம் ரூபா ஐம்பதாயிரம் ரூபா முற்பணம் செலுத்தி பெறப்பட்டுள்ளது.

குறித்த வீடு கடந்த 17ம் திகதி அனுமினியம் மற்றும் பிளாஸ்ரிக் பாத்திரங்கள் விற்பனை செய்யும் வியாபாரி என்ற பெயரில் 1982 ம் ஆண்டு பிறந்;த மொஹமட் நவாஸ் என்பவராலேயே பெறப்பட்டுள்ளது.

இருந்தபோதும் வீட்டிற்கு பேசப்பட்டதிலும் அதிகமான ஆட்கள் குடியிருக்க திடீரென வந்திருந்தமை உரிமையாளரின் சந்தேகத்திற்கு காரணமாகியுள்ளது. இந்நிலையில் நேற்று பிற்பகல் சம்மாந்துறையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை ஒன்றின் பின்னர் அவசரமாக வான் ஒன்றில் பலர் வந்துள்ளனர். இதையடுத்து பிரதேச மக்களுக்கு மேலும் சந்தேகம் வலுத்துள்ளது.

அத்துடன் அண்மையிலிருந்த பள்ளிவாயலுக்கு அவர்களில் ஒருவர் தொழுகைக்கு சென்றுள்ளார். அங்கு சென்றவரிடம் பிரதேசவாசி ஒருவர் எங்கிருந்து எதற்காக வந்திருக்கின்றீர்கள் என்ற கேள்வியை கேட்டபோது அவரால் வழங்கப்பட்ட பதில் திருப்திகரமாக அமையவில்லை.
அத்துடன் விரைந்து சென்ற பிரதேசவாசி தெருவில் நின்ற போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸாரிடம் சந்தேகத்திற்கு இடமான நபர்களின் நடமாட்டம் தொடர்பாக கூறியுள்ளார்.

பொலிஸார் அங்கு விரைந்தபோது, அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடனடியாக பின்வாங்கிய போக்குவரத்து பொலிஸார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளார்.

பொறுப்பதிகாரி விசேட அதிரடிப்படையினருக்கு அறிவித்ததுடன் அவ்விடத்திற்கு அதிரடிப்படையினர் விரைந்தபோது தற்கொலை அங்கிகளை அணிந்திருந்த 3 தற்கொலைதாரிகள் சுற்றுவட்டமெங்கும் துப்பாக்கி பிரயோகம் செய்த வண்ணம் இருந்துள்ளனர்.

இறுதியாக அங்கிருந்து இரவு எட்டு மணிக்கு 3 பாரிய வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளது. அந்த மூன்று தற்கொலைதாரிகளும் குண்டுகளை வெடிக்கச்செய்து கொண்டுள்ளனர்.

குறித்த குண்டு வெடிப்புக்களின் பின்னர் வீட்டினுள் நுழைந்த படையினர் தற்கொலை தாரிகள் என்று சந்தேகிக்கப்படும் 3 ஆண்களின் உடலங்களையும் 3 பெண்களின் உடலங்களையும் 6 குழந்தைகளின் சடலங்களையும் மீட்டுள்ளனர். மேலதிகமாக துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட ஒருவரது உடலம் தெருவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இப்பாரிய மூன்று குண்டுவெடிப்புக்குள்ளிருந்தும் 3 வயது சிறுமியும் அவளது தாயாரும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர். மீட்கப்பட்ட சிறுமியை படையினர் வெளியே கொண்டுவந்து முதலுதவி செய்யும்போது என்னுடைய வாப்பா எங்கே என தந்தையை தேடும் காட்சி மனதை உருக்குகின்றது.

இதேநேரம் தாயார் பலத்த காயங்களுக்குள்ளகியுள்ளதாக அறியமுடிகின்றது. இவர்கள் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதிகள் இருந்த இடத்திலிருந்து பதினைந்து லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்காக அவர்கள் பலகோடி ரூபாய்களை செலவிட்டுள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது. அவ்வாறானால் இவர்களின் பின்னால் இருக்கக்கூடிய பணபலம் பற்றி ஊகித்துக்கொள்ளமுடியும்.

மேலும் இங்கு பயங்கரவாதி ஒருவன் பயன்படுத்திய ரி56 ரக துப்பாக்கி வவுனதீவில் கொலை செய்யப்பட்ட பொலிஸாருடையது என சந்தேகிக்கப்படுகின்றது. (இவ்விடயம் இதுவரை ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை)
0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com