Friday, March 8, 2019

புதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா? காரணமானவர்கள் யார்? கொன்று புதைக்கப்பட்டவர்கள் யார்?

மன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெளிவந்து பல சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் தோற்றுவித்திருக்கிறது.

புளோரிடாவில் இருந்து கிடைக்கப்பெற்ற காபன் அறிக்கையில் அந்த மனித எச்சங்களின் காலம் கி.பி 1450 தொடக்கம் கி.பி 1650 வரைக்கு இடைப்பட்டதென்று கூறப்பட்டுள்ளது. மன்னார் புதைகுழி மிகச்சமீப காலத்துக்குறியதாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியையும் தமிழர்களின் தொல்லியல் வரலாறு தொடர்பான ஆராட்சியில் ஈடுபடுபவர்களுக்கு இது ஆர்வத்தையும் கொடுத்திருக்கிறது.

இந்த காபன் ஆய்வினை வைத்து பல தரப்புக்களாக இங்கு கருத்துக்கள் பகிரப்படுகின்றது அவை பற்றியும் அவற்றின் சாதக பாதகங்கள் பற்றியும் ஒவ்வொன்றாக பார்ப்போம்...

1, இக்காபன் அறிக்கை நம்பிக்கையானது இல்லை இது போலியானது இலங்கை அரசுக்கு சார்பாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது அல்லது இலங்கை பிழையான மாதிரிகளை வேண்டுமென்றே மாற்றி அனுப்பியிருக்கும் என்ற வாதம்...

உண்மையில் இந்த வாதம் அவ்வளவு ஏற்புடையது கிடையாது ஏனெனில் குறித்த பரிசோதனையை செய்த நிறுவனம் சர்வதேச நிறுவனம் மிக முக்கியமான ஆய்வுகளில் ஈடுபடும் நிறுவனம் அந்த நிறுவனம் தம் நம்பிக்கையை சிதறடித்துக்கொள்ளும் விதமாக ஒரு போலியான அறிக்கையினை வழங்கி இருக்காது. ஏனெனில் குறித்த மாதிரிகளை வேறு ஒரு நிறுவனத்தின் மூலம் ஆய்வு செய்தால் உண்மை தெரியவரும் அதனால் தம் நற்பெயருக்கும் நம்பிக்கைக்கும் களங்கம் ஏற்படும் என்பதை குறித்த நிறுவனம் அறிந்தே இருக்கும். இந்த சிறு விடயத்திற்காக அது தன்னை தற்கொலைக்கு உற்படுத்திக்கொள்ளாது.

அத்தோடு அவ்வாறு அந்நிறுவனம் போலியான அறிக்கையினை வழங்க கூடியதாக இருப்பின் இலங்கை அரசாங்கம் குறித்த பகுதியில் தமிழ் ஆயுதக்குழுக்கள் நிலைகொண்டிருந்த காலத்தை குறிப்பிட்டு ஒரு அறிக்கையினை பெற்று புதைகுழிகளுக்கு காரணம் தமிழர்களே என கதையை முடித்திருக்கும். இலங்கை அனுப்பிய மாதிரிகள் பிழையானவை என்ற கருத்திற்கும் இதுவே பதில் பிழையான மாதிரியினை கொடுக்கவேண்டுமெனில் அதை 500 வருடங்களுக்கு முந்தியதாக கொடுக்காமல் மேலே குறிப்பிட்டதுபோல தமிழ் ஆயுதக்குழுக்கள் நிலைகொண்டிருந்த காலத்தின் மாதிரியை மாற்றி அனுப்பி முடிவை தனக்கு சார்பாக பெற்றிருக்கும்.

2, 500 ஆண்டுகால புதைகுழிக்குள் 1996 ஆம் ஆண்டு திகதி குறிப்பிட்ட பிஸ்கட் பைக்கட் எப்படி வந்தது? காலில் உள்ள இரும்பு வளையம் 500 ஆண்டுகளாக உக்காமல் இருக்குமா என்ற அதிபுத்திசாலிகளின் வாதங்கள்...

உண்மையில் இதுவோர் மொக்குத்தனமான மற்றும் சிறுபிள்ளைத்தனமான வாதம். ஒரு பொலித்தீன் உறை மண்ணின் உள்ளே பல்வேறு சந்தர்ப்பங்களில் போகும் மழை பெய்யும் போது மண்ணரிப்பில் நீரோடு உள்ளே சென்றிருக்கலாம் அல்லது அந்த இடத்தில் குப்பைகளை கொட்டும் போது அதிலிருந்து நிலத்தின் கீழே படிப்படியா கீழிறங்கி இருக்கலாம் அல்லது அந்த புதைகுழியின் மீது இயல்பாக இருந்த பள்ளத்தில் வீழ்ந்து அதன் பின் அதன் மீது மண் நிரம்பி இருக்கலாம் பிஸ்கட் உறை இருந்தது அடி ஆழத்தில் இல்லை ஓரளவு மேலாகவே. அதனால்தான் அதனை ஆய்வு செய்தோர் பெரிய விடயமாக கணிக்கவில்லை. அத்தோடு பிஸ்கட் உறையை வைத்து காலத்தை கணித்தால் அது சமீபகாலமாக இருக்கும் சமீப காலத்தில் புதைக்கப்பட்டிருப்பின் ஆடைகள் தலைமயிர் போன்றவற்றின் எச்சங்கள் கட்டாயம் இருந்திருக்கும் அவை எதுவும் இப்புதைகுழியில் இல்லை.

அடுத்து 500 வருடமாக மண்ணுக்குள் ஒரு உலோக வளையம் எப்படி உக்காமல் இருக்கும் என்பதற்கான பதில் உலோகம் 500 அல்ல 1000 ஆண்டுகளுக்கும் உக்காமல் இருக்கும். அது உலோகத்தின் தன்மையை பொறுத்தது. அகழ்வுகளின் மூலம் கண்டெடுக்கப்பட்ட மன்னர் காலத்து வாள்கள் , கத்திகள் , ஈட்டிகள் என்பன இன்னும் உக்காமல்தான் இருக்கின்றன. தற்போது நீங்கள் அன்றாடம் பாவிக்கும் இரும்பு தனியாக பிரித்தெடுக்கப்பட்ட இரும்பு அது இலகுவில் துருப்பிடிக்கும் அதில் இருக்கும் பெறுமதியான மற்றும் தரமான உலோகங்கள் தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்டு தேவைக்கேட்ப மீண்டும் கலக்கப்பட்டு வலிமையான மற்றும் மென்மையான இரும்புகள் உருவாக்கப்படுகின்றன ஆனால் ஆரம்ப காலங்களில் இரும்பு என்பது கலப்பு உலோகமாகவே இருந்தது அதனால்தான் அவை இலகுவில் துருப்பிடிகாமல் நீண்டகாலம் நிலைத்து பாவித்தது. அதேபோன்ற ஒரு கலப்பு உலோகத்தால் ஆனதாககூட அந்த இரும்பு வளையம் இருக்கக்கூடும் அது இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை அதற்கு முன்பதாகவே அது சாதாரண இரும்பு என்ற முடிவுக்கு வந்தது அபத்தம்.

3, யாழ் இராசதானியின் சங்கிலி மன்னன் 1540 களில் மன்னாரில் மதமாற்றத்தில் ஈடுபட்ட பாதிரியார் உற்பட 600 கத்தோலிக்கர்களை அரச தண்டனைக்கு உற்படுத்தி கொலைசெய்ததாக ஓர் வரலாற்றுச்சம்பவம் உண்டு. அந்த 600 க்கு மேற்பட்டவர்களின் எச்சங்களே இது என்ற வாதம்...

மேற்படி இச்சம்பவம் இடம்பெற்றது உண்மையென வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் போர்த்துக்கேயர்களின் குறிப்பில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே அந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்களே இதுவென்று ஒரு முடிவுக்கு வருவது இயல்பானதே எனினும் உண்மை அதுவல்ல.

மேற்படி சங்கிலி மன்னனுக்கும் இந்த புதைக்குழிக்கும் சம்பந்தம் உண்டு என்ற கருத்துக்கள் வலுப்பெற்ற நிலையில் யாழ் இராசதானியின் ஆரிய சக்கரவர்த்திகளின் வாரிசும் யாழ் சங்கிலி மனையின் வாரிசுதாரருமான Raja Remigius Kanagarajah Jaffna என்னை தொடர்புகொண்டு பலவிடயங்களை பேசினார் யாழ் இராச்சியத்தின் வரலாற்று குறிப்பில் உள்ள சங்கிலி மன்னன் தொடர்பான தகவல்களை சுட்டிக்காட்டிய அவர் இந்த மன்னார் புதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் எந்த தொடர்புகளும் இல்லையென்றும் சங்கிலி மன்னன் குழந்தைகளை கொன்றதாக எந்த குறிப்புக்களும் இல்லையென்றும் குறிப்பிட்டார்.

ஆம் இந்த மன்னார் சதோச வளாக புதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை அவனோடு தொடர்புபட்ட சம்பவம் இடம்பெற்றது பேசாலைப்பகுதியின் தோட்டவெளியென்று கூறப்படும் இடத்திலாகும் அது ஏறக்குறைய இந்த சதோச புதைகுழி இருக்கும் இடத்தில் இருந்து 20 கிலோமீட்டர்களுக்கும் அப்பால் உள்ளது. அங்கே இந்த சம்பவத்தை நினைவு கூறும் முகமாக அச்சம்பவம் இடம்பெற்ற இடத்தில் கல்லறைகள் நிர்மாணிக்கப்பட்டு "மன்னார் தோட்டவெளி வேதசாட்சிகளின் அன்னை ஆலயம்" என்ற பெயரில் பெரும் தேவாலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. சங்கிலி மன்னன் அதைத்தவிர வேறு இடத்தில் கத்தோலிக்கர்களை சிரச்சேதம் செய்ததாக எந்த குறிப்புக்களும் இல்லை.

#இப்போது இருக்கும் கேள்வி அப்படியெனில் இந்த புதைகுழிக்கு யார் காரணமாக இருக்கக்கூடும்?

தடயவியல் நிபுணர்களின் தகவல் அடிப்படையில், இதுவரை மொத்தமாக 323 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு உள்ளன. இதில் 28 சிறுவர்களின் என்புக்கூடுகளும் அடங்கியுள்ளன.
இங்கே மீட்கப்பட்டிருந்த என்பு கூடுகள் இருவகையான முறையில் புதைக்கப்பட்டு இருந்தன அவையாவன,
ஒழுங்கு முறையில் புதைக்கப்பட்ட முழுமையான உடல்கள், ( தலைகள் எல்லாம் ஒரேதிசையிலும், பாதங்கள் மறு திசையிலும், உடல்களுக்கு இடையில் குறித்த இடைவெளியும்)
ஒழுங்கற்ற முறையில் புதைக்கபட்ட பகுதியான என்பு குவியல்கள் ( இங்கு பல மனித என்புகள் குவியலாக காணப்படுகின்றன )
இங்கு முதலாம் வகையினை நோக்குகையில் அது ஒரு மயானமாக இருக்குமோ என்ற ஊகத்தினை தோற்றுவிக்கின்றது.
ஆனால் இரண்டாம் வகையானது சாதரணமாக படுகொலைகளின் பின்னர் உடல்களை விரைவாக மறைப்பதற்கு படுகொலையினை மேற்கொண்ட தரப்பு ஒரே குழியில் எல்லா உடல்களையும் ஒன்றாக போட்டு மூடுவது போன்றே மூடப்பட்டுள்ளது எனவே அவ்வகையில் நோக்கினால் இதுவோர் படுகொலை களமாக இருப்பதற்குறிய சந்தர்ப்பங்கள் அதிகம்.
எனினும் வேறு பல சந்தர்பங்களிலும், இவ்வாறு என்புக்குவியல்கள் ஒன்றாக காணப்பட முடியும்,

1. மயானங்களில் திருத்த வேலைகள்,
2. கட்டட தேவைகளுக்காக மயானங்களை இடம் மாற்றல்,
3. அனர்த்தங்களின் போதும், கொள்ளை நோய்களின் போதும் அதிகளவானவர்கள் ஒரே நேரத்தில் இறக்கும் போது,
இவ்வாறு குவியல்களாக எலும்புக்கூடுகள் இருக்க வாய்ப்புக்கள் உண்டு.

இங்கு பிரச்சனைக்கு உரிய சில விடயங்கள் உள்ளன,

1. முதலில் இங்கு மயானம் இருந்ததற்கான ஆதாரம் மன்னார் மாவட்ட பதிவுகளில் இல்லை, மேலும் இங்கு இருக்கும் முதியவர்களுக்கும் அங்கு மயானம் இருந்ததாக ஞபகம் இல்லை என்றே கூறுகின்றனர், இவற்றை வைத்து பார்க்கும் போதும் காபன் அறிக்கையின் முடிவின் படியும் இது மயானமாக இருப்பின் தொன்மையான மயானமாக இருக்கவே வாய்ப்புண்டு.

2. இப்புதைகுழிக்குள் ஆடைகளோ அல்லது வேறு ஏதாவது உடமைகளோ மீட்கப்பட வில்லை, தொன்மை காரணமாக அவை அழிந்து போயிருக்கலாம்.

3. காலில் இரும்பு வளையம் உள்ள என்பு - இது சாதாரண உடல்கள் இருக்கும் பகுதியில் இருந்து தான் மீட்க பட்டுள்ளது, மேலும் அது ஒரு காலில் மட்டுமே உள்ளது.

4.சில எலும்புக்கூடுகள் காயங்களுக்குறிய அடையாளங்களுடன் மீட்கப்பட்டுள்ளன, ஆனால் இன்னமும் அது என்னவகையான காயம் என ஆய்வு செய்யப்படவில்லை.

சங்கிலி மன்னனோடும் சமீபகாலத்தோடும் முடிச்சிடாமல் வேறுவகையில் இதனை நோக்கினால் இதன் பின்னணியில் போர்த்துக்கேயர்கள் இருப்பது புலனாகிறது.

போர்த்துக்கேயர் மன்னாரை கைப்பற்றியது 1560 ஆம் ஆண்டு. மன்னாரை கைப்பற்றியவுடன் அங்கு ஒரு கோட்டையை அவர்கள் நிர்மாணித்தார்கள் அந்த கோட்டை இப்போதும் அங்கு இருக்கிறது. அந்த கோட்டைக்கு அருகில்தான் குறித்த புதைகுழியும் உள்ளது. புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்களின் காபன் அறிக்கை காலமும் கோட்டை அமைக்கப்பட்ட காலமும் சம காலமாகும்.

இதனடிப்படையில் ஆராய்ந்தால் மேலே உள்ள சில கேள்விகளுக்கு விடைகிடைக்கும்

1,வரிசையாக புதைக்கப்பட்டிருந்த உடல்கள்.

இது கோட்டை கட்டுமானத்தின் போது இறந்தவர்களின் உடல்களாக இருக்கலாம் கால்களில் இருந்த வளையம் கைதிகளை பிணைத்துவைக்க பயன்பட்ட வளையமாக இருக்கலாம் அக்காலத்தில் அடிமைகளுக்கு கால்களிலும் கைகளிலும் இரும்பு வளையங்களை மாட்டி அதில் சங்கிலியை கோர்த்தே வேலை வாங்கினர். அப்படியான ஒரு போர்க் கைதியின் அல்லது அடிமையின் உடலாக அந்த காலில் வளையம் உள்ள உடல் இருக்ககூடும் அவன் இறந்தபின் அந்த வளையத்தை ஏதோவோர் சந்தர்ப்பம் காரணமாக கழட்டியெடுக்கமுடியாமல் போயிருக்கலாம் அதனோடு அவன் புதைக்கப்பட்டிருக்கலாம்.

2, குவியலாக கண்டுபிடிக்கப்பட்ட எழும்புக்கூடுகள்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் தான் காயங்களும் இருக்கின்றன சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் இருக்கின்றன இவர்கள் போர்த்துக்கேயர்களால் மதமாற்றம் செய்யப்படும்போது அதற்கு மறுப்புத்தெரிவித்தவர்களாக இருக்கக்கூடும் அதனால் அவர்களை குடும்பத்தோடு கொன்று ஒரே குழியில் புதைத்திருக்கலாம் அத்தோடு போர்க்கைதிகளாக அகப்பட்ட குடும்பங்களின் பெண்கள் சிறுவர்களை பராமரிக்க முடியாமை காரணமாக கொன்று புதைத்திருக்கலாம்.

அத்தோடு கோட்டைக்குள் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட போர்க்கைதிகளையும் கோட்டைக்கு சமீபமாக இருக்கும் இந்த இடத்தில் புதைத்தும் வந்திருக்கலாம்.
ஆக மொத்தத்தில் மன்னார் சதோச வளாகத்தில் மீட்கப்பட்டுள்ள எலும்புகள் சங்கிலி மன்னனால் கொல்லப்பட்ட கத்தோலிக்கர்களின் எலும்புக்கூடுகள் அல்ல போர்த்துக்கேயர்களால் கொல்லப்பட்ட தமிழ்ச் சைவர்களினது என்பது தெட்டத்தெளிவாக புலனாகிறது.

ஒல்லாந்தர் காலத்தில் கத்தோலிக்கர்கள் டச்சுக்காரர்களால் படுகொலைக்கு ஆளாகி இருந்தனர் ஆனால் அவர்களின் காலம் 1650 க்கு பிற்பட்டதே காபன் அறிக்கை 1650 க்கு முற்பட்டதென்று தெளிவாக குறிப்பிடுகின்றது. எனவே சங்கிலி மன்னனின் பெயரால் பேசாலையில் வேதசாட்சிகள் ஆலயம் அமைத்ததுபோல் இதன் பழியையும் அவனிலோ அல்லது ஒல்லாந்தரிலோ சுமத்தி இங்கும் ஓர் தேவசாட்சிகளின் கல்லறை அமைக்க முயற்சிக்காது 500 ஆண்டுகளுக்கு முன்பு போர்த்துக்கேயரால் இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்ட எம் உறவுகளின் சொந்தங்கள் யாரென்று மரபணு பரிசோதனைகள் மேற்கொண்டு கண்டுபிடிப்பதோடு படுகொலையான அவர்களின் நினைவாக அங்கு ஓர் நினைவுச்சின்னம் அமைக்க முயற்சிப்போம்.

சு.பிரபா வின் முகப்புத்தகத்திலிருந்து
08/03/2019

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com