Sunday, March 10, 2019

வீசா நடைமுறையில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு, இதுவே காரணம் - ஜனாதிபதி

சுற்றுலா நோக்கத்திற்காகவும் பௌத்த மத விவகாரங்களுக்காகவும் இலங்கை வரும் பல்வேறு நாட்டவர்களுக்கு வீசாவில் நடைமுறையில் இருந்து விலக்களிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடுவெல - கம்பொடியா சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் சுற்றுலா கைத்தொழில் அபிவிருத்திக்காகவும் - பௌத்த சமய எழுச்சிக்காகவும் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கம்போட்டியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தருகின்ற போது வீசா பெற்றுக்கொள்வது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் பற்றி மகாசங்கத்தினர் முன்வைத்த கோரிக்கையின் பேரில் எதிர்காலத்தில் சுற்றுலா மற்றும் பௌத்த சமய நடவடிக்கைகளுக்காக நாட்டுக்கு வருகை தருகின்றபோது கம்பூச்சியாவிற்கும் வீசா நடைமுறையை நீக்கி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கைக்கும் கம்போடியாவுக்கும் இடையில் இருந்துவரும் நீண்டகால நட்புறவுக்கு முக்கிய காரணம் தேரவாத பௌத்த தத்துவமாகும். தேரவாத பௌத்த தத்துவத்தின் கேந்திர நிலையம் என்ற வகையில் இலங்கை அனைத்து பௌத்த நாடுகளுடனும் உறவுகளை பலப்படுத்தி தேரவாத பௌத்த தத்துவத்தின் மேம்பாட்டிற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தேரவாத பௌத்த தத்துவத்தை வெளிப்படுத்தும் கம்போடியாவின் கட்டிடக் கலையை எடுத்துக்காட்டும் வகையில் இந்த புதிய விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கம்போடியாவில் லங்கா விகாரையில் நடுவதற்காக ஸ்ரீ மகாபோதி அரச மரக்கன்று ஒன்றை அவ்விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ஆரியவங்ச நாயக்க தேரரிடம் ஜனாதிபதி கையளித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com