Saturday, March 30, 2019

நல்லிணக்கத்தை வாழ வைக்கும் மனிதர்கள் வாழாத தீவு.

இராமேஸ்வரத்துக்கும் - இலங்கைக்கும் இடையே உள்ள கடல் எல்லையில் அமைந்த மக்கள் வாழாத ஒரு தீவுதான் கச்ச தீவு. ஆனால் மக்கள் வாழாவிடினும் ஆண்டுக்கு ஒரு முறை இங்கு மக்கள் ஒன்று கூடுகிறார்கள். அதுதான் இங்குள்ள சிறப்பம்சமும் கூட.

நாடு கடந்து, இனம், மொழி பேதம் மறந்து இங்கு ஒன்று கூடுகிறார்கள் என்றால் அது மிகையாகாது.

ஐசக் ஸ்டீபன்

“ஐந்து வருடங்களாக இங்கு நான் வந்து போகிறேன். ஒவ்வொரு வருடமும் இங்கு வருதால் என்னுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆலயத் திருவிழா ஏற்பாடுகள் எல்லாம் நல்ல முறையில் இருக்கிறது. இலங்கை கடற்படை, பொலிஸ் எல்லாரும் எங்களுக்கு நல்ல உதவி செய்றாங்க. இலங்கை மக்கள் சாப்பாடு, குடிநீர் எல்லாம் தந்து எங்களை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். உதவி செய்யும்சிறந்த மனப்பான்மை இவர்களுக்கு இருக்கிறது.எங்களுக்கிடையே நல்ல உறவு இந்த இரண்டு நாட்களிலும் வளர்ந்திருக்கிறது.”

என்று கூறுகிறார் இந்தியா, கோயம்புத்தூரைச் சேர்ந்த ஐசக் ஸ்டீபன். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்து கொள்ள வந்தவரே இவ்வாறு தெரிவித்தார்.

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த மார்ச் 15 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. அன்று மாலை சிலுவை பாதையும் இடம்பெற்றது. அத்துடன் சனிக்கிழமை (16) காலை சிறப்பு திருப்பலி ஆராதனைகள் நடைபெற்றதுடன் கொடி இறக்கமும் இடம்பெற்றது.

சொகைனா பெஸ்லிக்கா

“திருநாள் காலங்களில் கடற்படையினர் எங்களுக்கு நல்ல உதவி செய்து கொண்டு வருகிறார்கள். போன வருடம் கச்சத்தீவு திருநாளுக்கு வந்த இந்திய நண்பர்கள் இந்த வருடமும் வந்திருந்தார்கள். அவர்களோடு கதைப்பதற்கான வாய்ப்பும் எங்களுக்கு கிடைத்தது. ஆனால் போன வருடம் இலங்கையர்களுக்கு அந்த அளவு செக் பண்ணல. ஆனால் இந்த வருடம் செக்கிங் கொஞ்சம் கூடுதலாக இருந்ததாகத்தான் நான் உணர்கிறேன். போன வருடத்தைவிட இந்த வருடம் சனம் கூடுதலாக வந்ததாலோ என்னவோ தெரியாது இந்த வருடம் செக்கிங் கூடுதலாக இருந்தது.” என்று கூறினார் பேசாலை, மன்னாரைச் சேர்ந்த சொகைனா பெஸ்லிக்கா என்பவர்.

வேறுபாடுகள் மறந்து எல்லோரும் அங்கு ஒன்று கூடுவதை சொகைனா பெஸ்லிக்காபோன்றோர்விரும்புகிறார்கள்.

இந்திய இராமேஸ்வரத்துக்கும் - இலங்கைக்கும் இடையே உள்ள கடல் எல்லையில் அமைந்த 285 ஏக்கர் பரப்புள்ள ஒரு தீவுதான் கச்சத்தீவு. 1974 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்த கச்சத்தீவு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு சொந்தமாகியுள்ளது.

அந்தோனியார் ஆலயம்

இந்த தீவில் மனிதர்கள் யாரும் வசிப்பதில்லை. புகழ்பெற்ற அந்தோனியார் ஆலயம் ஒன்று இங்கு உள்ளது. இங்கு மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோனியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட தேவாலயம் தான் இது.

இலங்கையில் யுத்தம் தொடங்குவதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெற்று வந்தது. இதற்கு தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் சென்று வந்தனர். இருநாட்டு மக்களும் சங்கமிக்கும் அமைதி தீவாக விளங்கிய கச்சதீவு 1974 ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கைக்கு சொந்தமானபின் வழமைபோல் கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் இந்தியர்களும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

1983 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி கச்சத்தீவு விழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2002 இல் மீண்டும் கச்சத்தீவு விழா யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்கு தந்தையர்களால் நடத்தப்பட்டது. எனினும் யுத்தம் முடிவுற்ற பிற்பாடு கச்சத்தீவு ஆலய திருவிழா மிகவும் சிறப்பாக படையினரின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜேசு மரியான்

“ஒவ்வொரு வருடமும் அந்தோனியார் கோயிலுக்கு வருகிறோம். போன வருடத்தை விட இந்த வருடம் ஏற்பாடுகள் எல்லாம் மிகவும் சிறப்பாக இருந்தது. இன்னும் பல மக்கள் இங்கு வந்து கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் மிகவும் விரிவாகவும் சிறப்பாகவும் தொடங்கியிருக்க வேண்டும் என்பதுதான் எங்களது அவாவாகும்.” என்று கூறுகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜேசு மரியான்.

கச்சத்தீவுக்கு இம்முறை இந்தியாவிலிருந்து 2,135 பேர் கலந்துகொண்டதாக கடற்படை தெரிவித்தது. 200க்கும் மேற்பட்ட மதகுருமார்களும் அருட் சகோதரிகளும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.



“கச்சதீவு அந்தோனியர் ஆலயத்துக்கு 65 விசைப் படகுகள் வழியாகவும், 15நாட்டுப் படகுகள் வழியாகவும் திருவிழாவைக் காண்பதற்காக இந்தியாவிலிருந்து வருகை தந்தோம். இத் திருவிழாவுக்கு கிறிஸ்த்தவர்கள், கிறிஸ்த்தவர் அல்லாதவர்கள், தமிழ் மொழி பேசுபவர்கள், சிங்கள மொழி பேசுபவர்கள் என எல்லா பிரிவினர்களும் வருகை தந்து சிறப்பிக்கிறார்கள். இங்கு ஒற்றுமை மென்மேலும் வளர்வதற்கான சூழல் ஏற்படுகிறது. அதற்கு கச்சதீவு அந்தோனியார் ஆலயம் ஒரு தளமாக இருக்கிறது என்பதில் பெருமைப் படுகிறோம்.” என்று இந்தியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் தெரிவித்தார்.

கடற்படையின் அதிவேக படகான டோராவின் மூலம் காங்கேசன்துறையில் இருந்து கச்சதீவுக்கு யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் உட்பட விசேட பிரமுகர்கள் அழைத்துவரப்பட்டனர். ஆயர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையைத் தொடர்ந்து திருப்பலி பூஜை இடம்பெற்றது. இலங்கை சார்பில் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம், இந்தியாவின் சார்பில் இராமேஸ்வரம் சிவகங்கை மறைமாவட்ட முதன்மை குரு அருட்தந்தை ஜோசப் லூதர் ராஜாவும், விசேடமாக அருட்தந்தை ரொபின்சன் விஜயசிங்க சிங்கள மொழியிலும் திருப்பலி பூசையை நடத்தினர்.

சானக்க குடும்பத்துடன்

“நான் முதன் முதலாக அந்தோனியர் ஆலயத்திற்கு வருகிறோன். மன்னாரில் உள்ள ஒரு தமிழ் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கி அவருடைய ஒத்துழைப்புடன் தான் இங்கு வந்தோம். இந்தப் பயணம் எமக்கு மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. தமிழ், சிங்களம், இந்தியர்கள் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் ஒற்றுமையாக இந்த இடத்தில் ஒன்று கூடியிருப்பதை பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இந்த ஒற்றுமையை பார்க்கும் போது இது எப்போதோ நம்மிடத்தில் இருந்திருக்க வேண்டும் என்ற கவலை எனக்கு இருக்கிறது.” என்று கூறினார் நீர்கொழும்பைச் சேர்ந்த சானக்க.

கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ள இலங்கையிலிருந்து 6,500பேர் வந்திருந்தனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை கூடுதலான இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள பக்தர்கள் கூடுதலாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுசானி பெரீனா

“நாங்கள் மன்னாருக்கு வந்து அங்கிருந்து சிறிய படகொன்றில் இங்கு வந்தோம். இங்கு எல்லோரையும் காண்கின்ற போது எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இந்த நிகழ்வு எங்களிடையே நல்லுறவை ஏற்படுத்துகிறது. எல்லோரோடும் நன்றாக பலகும் சந்தர்ப்பம் இங்கு ஏற்படுகிறது.” என்று கூறினார் சிலாபத்தைச் சேர்ந்த சுசானி பெரீனா.

போல் ஜோசப்

இதேவேளை ஆலய திருவிழாவுக்கு நீர்கொழும்பில் இருந்து வருகை தந்த இன்னுமொருவரான போல் ஜோசப் இவ்வாறு கூறுகிறார்; “கடற்படை எங்களுக்கு போதிய வசதிகளை செய்து தந்த்து. நல்லமுறையில் ஏற்பாடுகளை அவர்கள் செய்திருக்கிறார்கள். இருந்தாலும் இங்கு போதியளவு வசதிகளை இன்னும் அதிகரிக்கவேண்டியுள்ளது. மக்கள் அதிகம் பேர் வந்து தங்கி தங்களுடைய கடமைகளைச் செய்வதற்கான வசதிகள் குறைவு. வந்தவுடனே வழிபாடுபளைச் செய்து விட்டு உடனே போக வேண்டிய நிலைமைதான் இங்கு காணப்படுகிறது. மடுவில் அவ்வாறு இல்லை. மூன்று நாள் நிற்பார்கள். திருநாள் முடிந்து அடுத்த நாள் தான் போவார்கள். ஆனால் இங்கு முடிந்தவுடனே போக வேண்டும். ஏனென்றால் வசதிகள் குறைவு என்ற படியால் போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இந்நிகழ்வுக்குகடற்படை பாதுகாப்பு வழங்க வேண்டிய அதேநேரம் பிரதேச செயலகம், பிரதேச சபை இவ் விடயத்தில் கவனமெடுத்து வசதிகளை விரிவுபடுத்த வேண்டும்.” என்றார்.

யாழ். மாவட்டத்தின் நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் நிருவகிக்கப்பட்டுவருகின்ற இந்த கச்சதீவு, காங்கேசன்துறையிலிருந்து 90 கிலோமீற்றர் தொலைவிலும் நெடுந்தீவிலிருந்து சுமார் 20 கிலோமீற்றர் தொலைவிலும் சர்வதேச கடல் எல்லையிலிருந்து 1.8 கிலோமீற்றர் தொலைவிலும் இந்தியாவின் இராமேஸ்வரத்திலிருந்து 19.3 கிலோமீற்றர் தொலைவிலுமே இந்தத் தீவு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கச்சத்தீவு திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா,

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா

"கச்சத்தீவு நிகழ்வு வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு பங்களிப்பு செய்ததில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இம்முறை 8,500 யாத்திரிகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கடற்படை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மக்கள் இதன் மூலம் பூரண பயனை பெற்றிருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த தீவுக்கு வருவது தொடக்கம் அவர்கள் மீண்டும் கரைக்கு செல்லும் வரையான வசதிகளை கடற்படை ஏற்படுத்தி கொடுத்துள்ளது."

"2010ஆம் ஆண்டில் இருந்து கச்சத்தீவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 2015ஆம் ஆண்டில் ஆலயத்திற்கு தேவையான புதிய கட்டிடங்களை கடற்படை நிர்மாணித்து கொடுத்திருக்கிறது. கடற்படையின் உதவியில்லாமல் நிலப்பரப்பிலிருந்து நெடுந்தூரத்திலுள்ள இந்த தீவுக்கு பக்தர்கள் வருகை தருவது மிகவும் கடினமான ஒன்றாகும். இந்த உற்சவத்துக்காக 5.1 மில்லியன் ரூபா நிதி யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக கிடைக்கப் பெற்றது. இந்த நிகழ்வுக்காக கடற்படை பாதுகாப்பு நடவடிக்கை, சுத்தப்படுத்துதல், அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் என பல வேலைத்திட்டங்களை பல குழுக்களாக நின்று மேற்கொண்டனர். இங்கு குடிநீர் உட்பட பல தேவையான பொருட்களை நாம் வெளியில் இருந்து கொண்டு வர வேண்டி உள்ளது. இந்த நிகழ்வுக்காக கடற்படை அதிகாரிகள் உட்பட 500 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்." என்றார்.

மூன்று தசாப்தங்ளாக நடைபெற்ற ஆயுதப் போராட்டம் இவ்வாறான நிகழ்வுகளில் அனைத்து இன மக்களும் கலந்து கொள்வதில் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இன்று அம் மக்கள் தடைகளின்றி தங்களிடையே பழகுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகியிருக்கின்றன. இவ்வாறான சமய நிகழ்வுகள், இன, மத வேறுபாடுகளின்றி மக்கள் ஒன்று கூடுவதற்கும் மக்கள் மதங்களைப் பற்றி புரிந்து கொள்வதற்கும் வாய்ப்பளிக்கின்றன என்றால் அது மிகையாகாது.












0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com